Wednesday, July 13, 2022

III பி.ஏ. தமிழ் ஆறாம் பருவம் சங்க இலக்கியம் - புறம் Material 2020 -2021

சங்க இலக்கியம் - புறம்

அலகு   -1

 வெட்சித்திணைப்பாடல் -2

அ.(புறம் 257) முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத் - துறை - உண்டாட்டு. உலோச்சனார்

ஆ.(புறம் 262)      நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;
 - துறை – தலைத்தோற்றம்  மதுரைப் பேராலவாயர்.

 கரந்தைத் திணைப்பாடல்கள் -2

இ.(புறம் 259) ஏறுடைப் பெருநிலை பெயராது-  துறை – செருமலைதல் - கோடை பாடிய பெரும்பூதனார்.

ஈ.(புறம் 290)   இவற்கு ஈத்து உண்மதி கள்ளே. -  துறை – குடிநிலை உரைத்தல்- ஔவையார்.

வஞ்சி திணைப்பாடல்கள் -2

உ.(புறம் 4) வாள்வலந்தர மறுப் பட்டன ! -  துறை – கொற்ற வள்ளை- பரணர்

ஊ .(புறம் 57) வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்! -  துறை – துணைவஞ்சி- காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

காஞ்சி திணைப்பாடல்கள் -2

எ. (புறம் 350) தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்  -  துறை – மகட்பாற்காஞ்சி -மதுரை மேலைக்கடைக் கண்ணம்புகுத்தார் ஆயத்தனார்.

ஏ.. (புறம் 71)    மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,துறை – வஞ்சினக்காஞ்சி- : ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

பாடநூல் 1. கு.வெ.பாலசுப்ரமணியன் சங்க இலக்கியம் நியு செஞ்சுரி புக் ஹவுஸ்.

2.சாமிநாதையர் . உ.வே.,-புறநானூறு மூலமும் உரையும்

அலகு   2

உழிஞைத்திணைப்பாடல்கள் -2

.(புறம் 44)   இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா  கோவூர் கிழார்.

.(புறம் 77)    கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டு -இடைக்குன்றூர் கிழார்.


(புறநானூற்றின் 37, 44, 77 ஆம் பாடல்கள் இளம்பூரணரால் உழிஞைத் திணையாகக் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் புறநானூற்றுத் தொகுப்பில் இம்மூன்று பாடல்களும் வாகைத் திணை - அரச வாகை துறை என்பதாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 77 ஆம் பாடலில் குடுமி களைந்தநுதல் வேம்பி னொண்டளிர்      நெடுங்கொடி யுழிஞை பவரொடு மிலைந்து . . . (புறம். 77: 2, 3) என்ற அடிகள் - தலையில் வேம்பின் தளிரை உழிஞையொடு இணைத்து அணிந்து - என்னும் பொருள்பட அமைந்துள்ளன. இக்குறிப்பும் இதனை உழிஞைத் திணையாகக் கொள்வதற்கு அரணாகின்றது. 271 ஆம் பாடலும் இளம்பூரணரால் உழிஞைத் திணைக்கு உரியதாகக் காட்டப்பட்டுள்ளது.,)

நொச்சி திணைப்பாடல்கள் -2

அ.(புறம் 110)    கடந்துஅடு தானை மூவிரும் கூடி -  துறை – மகண்மறுத்தல் - கபிலர்.

ஆ. (புறம் 271)  நீரறவு அறியா நிலமுதற் கலந்த.-  துறை செருவிடை வீழ்தல் - வெறிபாடிய காமக்காணியார்.

தும்பைத்திணைப்பாடல்கள் -2

இ.(புறம்  274) . நீலக் கச்சை! -  துறை – எருமை மறம்  - உலோச்சனார்

ஈ.(புறம் 284வருகதில் வல்லே வருகதில் வல்என -  துறை – பாண்பாட்டு - ஓரம்போகியார்

பொதுவியல் திணைப்பாடல்கள் -2

உ.(புறம்.363) . இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம் -  துறை – பெருங்காஞ்சி- ஐயாதிச் சிறுவெண்டேரையார்

ஊ.(புறம் 255)  ஐயோ!எனின்யான் புலிஅஞ் சுவலே; - முதுபாலை- வன்பரணர்.
 

பாடநூல்1. கு.வெ.பாலசுப்ரமணியன் சங்க இலக்கியம் நியு செஞ்சுரி புக் ஹவுஸ்.

2.சாமிநாதையர் . உ.வே.,-புறநானூறு மூலமும் உரையும்

அலகு   -3

கைக்கிளை  -1

எ.(புறம் 84) என்ஐ, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;! -  துறை – பழிச்சுதல்- நக்கண்ணையார்

பெருந்திணைப்பாடல் -1

ஏ..(புறம் 143) மலைவான் கொள்கஎன உயர்பலி தூஉய்! -  துறை – குறுங்கலி- பெருங்குன்றூர்க் கிழார்

பாடாண்திணை  பாடல்கள் -1

.புறநானூறு -1

(புறம் 378)   தென்பரதவர் மிடல்சாய   -    துறை: இயன் மொழி. ஊன்பொதி பசுங்குடையார்.

பதிற்றுப்பத்து

இ. இரண்டாம்பத்து ( முதல் 5 பாடல்கள் மட்டும்)

பாடநூல்

1. கு.வெ.பாலசுப்ரமணியன் சங்க இலக்கியம் நியு செஞ்சுரி புக் ஹவுஸ்.

2.சாமிநாதையர் . உ.வே.,-புறநானூறு மூலமும் உரையும்

3.சாமிநாதையர் . உ.வே.,- பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்

அலகு -4

வாகைத்திணைப்பாடல்கள்

 அ.களவழி நாற்பது 21 முதல் – 41 வரை-  துறை - மறக்களவழி - பொய்கையார்

பாடநூல்

1.பாலசுப்பிரமணியன், கு.வெ.(..)சங்க இலக்கியம்.

2.சுப்ரமணியன்.ச.வே பதினைன்கீழ்க்கணக்கு நூல்கள்

அலகு   -5

அ.சிறுபாணாற்றுப்படை முழுவதும். -  துறை – பாணாற்றுப்படை - இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்

பாடநூல் கு.வெ.பாலசுப்ரமணியன் சங்க இலக்கியம் நியு செஞ்சுரி புக் ஹவுஸ்.

 

பாடநூல்கள்

1. கு.வெ.பாலசுப்ரமணியன் சங்க இலக்கியம் நியு செஞ்சுரி புக் ஹவுஸ்.

2.சாமிநாதையா;, உ.வே.,-புறநானூறு மூலமும் உரையும்

தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு தஞ்சாவூர் - 1985.

3.சாமிநாதையர் . உ.வே.,- பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்

சென்னை, ஏழாம் பதிப்பு  1980.

4..சுப்ரமணியன்.ச.வே பதினைன்கீழ்க்கணக்கு நூல்கள்,மணிவாசகர் நூலகம்,சிதம்பரம்

பார்வை நூல்கள்:

1.    சங்க இலக்கியத்தில் பாடாண்திணை, 1975, நா.செயராமன், மீனாட்சி புத்தக நிலையம்,    மதுரை.

2.   கார்த்திகேசு சிவத்தம்பி, திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள்"" பண்டைத் தமிழ்ச்சமூகம், வரலாற்றுப் புரிதலை நோக்கி, 2003, மக்கள் வெளியீடு, சென்னை.

3.    தமிழண்ணல்            - பரிசில் வாழ்க்கை,    பாரி நிலையம்,    சென்னை – 1.

4.    சாமி சிதம்பரனார்            - பத்துப்பாட்டும் பண்டைத்தமிழரும்,    பூம்புகார் பதிப்பகம்,

5.    வீ.சி.சசிவல்லி            - பண்டைத்தமிழர் தொழில்கள்,

    உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,    சென்னை – 113.

6.    கு.சிவபிரகாசம்            - புறநானூற்றில் வாழ்வியல் விழுமியங்கள்,

    திருக்குறள் பதிப்பகம்,    சென்னை – 78.

7.    கு.வெ.பாலசுப்பிரமணியம்        - சங்க இலக்கியத்தில் புறப்பொருள்,    மெய்யப்பன் பதிப்பகம்,     சிதம்பரம் - 1.

8.    ஐயனாரிதனார்             புறப்பொருள் வெண்பாமாலை,   பொ.வே.சோமசுந்தரனார்(.)     திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த  நூற்பதிப்புக்கழகம்,லிமிடெட்,    154,டி,டி,கே,சாலை,    சென்னை.

9.சுப்பிரமணியன், . சங்ககால வாழ்வியல், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 1986.

10 பாலசுப்பிரமணியன், கு.வெ.(..)சங்க இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். மூ. பதிப்பு-பிப் 2007.

11..பாலசுப்பிரமணியன், கு.வெ. சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள், மதராஸ் ரிப்பன் பிரஸ், புதுக்கோட்டை. 1995.

 

திட்டக்கட்டுரைகள்:

    1.புறத்திணைகள்    2.புறத்துறைகள்    3.சங்க கால அரசியல் நெறிகள் 4. மன்னர்களுக்கும் புலவர்களுக்கும் இடையிலான உறவு

தனி நபர் செயல்பாடு

    1.பாடப்பகுதியில் உள்ள புறத்துறைகளைத் தொகுத்தல்

    2.பாடப்பகுதியில் உள்ள போர் வகைகளை வகைப்படுத்துதல்

குழுச் செயல்பாடு :

1.ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அதை குழுவாகச் சேர்ந்து நடித்துக் காட்டல்.

2.கபிலர் போலவும், பாரியை எதிர்க்கும் பிற மன்னர் போலவும் நடித்துக் காட்டுதல்.

3.ஔவை போலவும், பரணர் போலவும் நடித்து அவர்கள் நிலையிலிருந்து பாடல் கருத்துகளை வெளிப்படுத்தவும்.

4. களவழி நூல் தரும் செய்திகளைக் காட்சிப்படுத்தல்.

 இணைய முகவரிகள்:

https://www.projectmadurai.org/pmworks.html

http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/purananooru/purananooru_257.html

http://vaiyan.blogspot.com/2015/04/257.html

http://puram400.blogspot.com/2011/07/257.html

http://www.tamilvu.org/

பாடத்திட்ட செயல்பாட்டுத் திட்டம்

வாரம் -1

மாணவர்க்குக் கல்லூரிச் சூழல் அறிமுகம் -    கல்லூரி சூழலில் மாணவர்க்குக் கிடைக்கும் சலுகைகள் -  பள்ளி கறபித்தல் - கல்லூரி கற்பித்தல் வேறுபாடு -   கல்லூரி பருவத் தேர்வு முறை அறிமுகம் –பாடங்களை குறிப்பெடுத்தல்     - பார்வை நூல்களை படிக்கக் கற்றல் –சுயமாகச் சிந்தித்து எழுதப் பயிற்சி.  

வாரம் -2 திணைக் கோட்பாடு பற்றி கற்பித்தல் –அகம் –புறம் வேறுபாடு – வகைகள் மற்றும் வளர்ச்சி – புறத்திணை மற்றும் துறைகளைப் பற்றி அறிதலின் அவசியம்.

வாரம் -3 தமிழில் உள்ள புற நூல்களை அறிமுகம் செய்தல் புறநானூற்றின் சிறப்பு –தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகம்- புறநானூறு குறிப்பிடும் மன்னர்கள் – பாடிய புலவர்கள்- நூலில் இடம் பெற்றுள்ள செய்திகள் பொது  நிலையில் அறிமுகம்

வாரம் -4 வெட்சித்திணை குறித்தும் தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான பிற துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -5 கரந்தைத்திணை குறித்தும் தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -6 வஞ்சித்திணை குறித்தும் தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -7 காஞ்சித் திணை குறித்தும் தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -8 நொச்சி குறித்தும் தும்பை தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -9 பொதுவியல் குறித்தும் தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -10 கைக்கிளை குறித்தும் தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -11 பெருந்திணை குறித்தும்  தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -12 வாகைத் திணை தொடர்பான துறைகளையும் பாடத்திட்டத்தில் உள்ள அதன் தொடர்பான துறைகளையும் பாடலுடன் இணைத்து விளக்குதல்.

வாரம் -13 களவழி நாற்பது இடம் பெற்றுள்ள தொகுப்பு – தமிழர்களின் அற – மறப் பண்பு – தன்மானம் – போர்க்காட்சிகள்

வாரம் -14 ஆற்றுப்படை பற்றியும் -மன்னர்கள் – புலவர்கள் நிலை – வழிகள் –கிடைக்கும் உணவு –சந்திக்கும் மக்கள்.

அடிப்படைச்சொற்கள் - வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சிதும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை  முதலான திணைகள். உண்டாட்டு, தலைத்தோற்றம்,செரு மலைதல், குடிநிலை உரைத்தல்,கொற்ற வள்ளை, துணை வஞ்சி, மகட்பாற்காஞ்சி, வஞ்சினக்காஞ்சி,மகண்மறுத்தல், செருவிடை வீழ்தல், களிற்றுடனிலை, பெரும்பாலை, முதுகாஞ்சி, பழிச்சுதல், குறுங்கலி விறலியாற்றுப்படை, இயன்மொழி,மறக்களவழி, பாண்பாட்டு முதலான துறைகளை அறிவர்.

 

தன் மதிப்பீட்டு வினாக்கள்

1.புறப்பொருள் என்றால் என்ன?

2.புறத்திணைகள் பற்றி விவரி.

3. குறிஞ்சி –வெட்சி, மருதம்-உழிஞை, கைக்கிளை –பாடாண் திணைகள் கொருந்தாற்றை விளக்குக.

4. குறத்ணை வழி அக்கால சமூக செயல்பாடுகள் யாவை?

5.புறத்தில் சிறந்தது பாடாண்தணை ஏன்?

6. மனிதனின் தலைமைப்பண்புகளாக புறம் கூறுவது எவற்றை?

7.ஆற்றுப்படை வழியில் சந்திக்கும் கலைஞர்களின் தோற்றத்தை எவ்வாறு கூறுகிறது?

8. பதிற்றுப்பத்து பற்றி நீ அறிவன? கிடைக்காத பத்தில் குறிப்பிடப்படும் மன்னர்கள் யார்?

9.  புறத்துறைகள் வழி நீ அறிவன யாவை?

10. புற இலக்கியத்தில் புலவர்களின், வீர்ர்களின், பெண்களின், குழந்தைகளின் நிலை யாது?



அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),

சேலம் - 636 007 III பி.. தமிழ்பாடத்திட்ட விளக்கம்

பி.. தமிழ் - (2020– 2021 கல்வியாண்டு முதல்)

முதன்மைப்பாடம் : தாள் 12 ஆறாம் பருவம்

சங்க இலக்கியம் - புறம்

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சிதும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய 11 திணைகள் புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன; புறநானூற்றின் 400 பாடல்களில் 11 திணைகளும் 65 துறைகளும் உள்ளன.

அலகு- 1

வெட்சித்திணைப்பாடல் -2

1. 258. தொடுதல் ஓம்புமதி!

பாடியவர்: உலோச்சனார்( 258, 274, 377). இவர் சோழ நாட்டில் இருந்த கண்ட வாயில் என்னும் ஊரைச் சார்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் நெய்தல் திணைப் பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இவர் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி உறையூரிலிருந்து ஆட்சிபுரிந்த போது அவனைப் பாடிப் பரிசில் பெற்றவர் (புறநானூறு – 377). இவர் புறநானூற்றில் மூன்று செய்யுட்கள் இயற்றியதோடு மட்டுமல்லாமல், நற்றிணையில் 20 பாடல்களும், அகநானூற்றில் 8 பாடல்களும் குறுந்தொகையில் 4 பாடல்களும் இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: ஒருகால், உலோச்சனார் ஒரு தலைவனுடைய ஊருக்குச் சென்றார். அவன் பகைவருடைய நாட்டிற்குச் சென்று ஆநிரைகளை மீட்டு வந்ததைக் குறித்து அங்கு உண்டாட்டு நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன் மீண்டும் ஆநிரைகளைக் கவர்வதற்காக வேறொரு ஊருக்குச் சென்றிருந்தான். உலோச்சனார், கள் வழங்குபவனை நோக்கி, “முன்பு தலைவன் கந்தார நாட்டிற்குள் சென்று ஆநிரைகளைக் கொண்டுவந்து அவற்றை கள்விலைக்கு ஈடாக வழங்கினான். இன்று, மீண்டும் ஆநிரைகளைக் கவர்வதற்குச் சென்றுள்ளான். அவன் வரும்பொழுது கள் குடிக்கும் விருப்பத்தோடு வருவான். முதிர்ந்த கள் உள்ள சாடிஒன்றை அவனுக்காகப் பாதுகாத்து வைப்பாயாக.என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: வெட்சி. வீரர் அரசனுடைய ஆணையைப் பெற்றும், பெறாமலும், பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து வருதல்.
துறை: உண்டாட்டு. வீரர் மதுவையுண்டு மனங்களித்தலைக் கூறுதல்.

முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந்நிணப் பெருத்த
5
எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்,
புலம்புக் கனனே, புல்அணற் காளை;
ஒருமுறை உண்ணா அளவைப், பெருநிரை
ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் ; யார்க்கும்
தொடுதல் ஓம்புமதி முதுகள் சாடி;
10
ஆதரக் கழுமிய துகளன்
காய்தலும் உண்டுஅக் கள்வெய் யோனே.

அருஞ்சொற்பொருள்:
1.
காரை = முள்ளுடன் கூடிய ஒரு செடி; பழன் = பழம்; ஏய்ப்ப = ஒப்ப. 2. தெறித்தல் = முற்றுதல்; தேம் = தேன். பச்சூன் = பசுமையான (நல்ல) ஊன்; நிறுத்த ஆயம் = கொண்டுவந்து நிறுத்திய ஆநிரை; பைந்நிணம் = பசுமையான தசை. 3. தலைச் செல்லல் = எதிர்த்துச் செல்லுதல். 5. திமிர்தல் = பூசுதல். 6. புலம் = இடம்; அணல் = தாடி. 9. தொடுதல் = உண்ணுதல். 10. துகள் = தூசி. 11. காய்தல் = உலர்தல்

உரை: அடிபக்கத்தில் முள்ளுடைய காரைச் செடியின் முதிர்ந்த பழத்தைப் போன்று நன்கு முதிர்ந்த கள்ளையுடைய கந்தாரம் என்னும் இடத்திலிருந்து தான் கொண்டுவந்து நிறுத்திய ஆநிரைகளுக்கு ஈடாகக் கள்ளை வாங்கிப் பருகி, வளமான ஊனைத் தின்று தன் எச்சில் கையை வில்லின் நாணில் துடைத்துவிட்டு, சிறிய தாடியையுடைய காளை போன்ற அந்த இளைஞன் இப்பொழுது வேறொரு இடத்திற்குச் சென்றிருக்கிறான். இங்குள்ளவர்கள் அனைவரும் ஒருமுறை கள் குடிப்பதற்குள், அவன் ஆநிரைகளைக் கவர்ந்துகொண்டு வந்துவிடுவான். அவன் கள்ளை விரும்புபவன்; வரும்பொழுது மிகுந்த தாகத்தோடு வருவான். அதனால், முதிர்ந்த கள் உள்ள சாடியிலிருந்து அனைவருக்கும் கள் கொடுப்பதைத் தவிர்த்து, அக்கள்ளை பாதுகாப்பாயாக.

2. 262. தன்னினும் பெருஞ் சாயலரே!

 

பாடியவர்: மதுரைப் பேராலவாயர். மதுரைப் பேராலவாயர் (247, 262). ஆலம் என்ற சொல்லுக்கு நஞ்சு என்று பொருள். ஆலவாய் என்பது சிவனுடைய வாயைக்குறிக்கும். மற்றும், மதுரையில் உள்ள சொக்கநாதப் பெருமானின் கோயிலுக்கும் பெயர் ஆலவாய். மதுரையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு ஆலவாயர் என்று பெயர். இப்புலவர், மதுரையைச் சார்ந்தவராகையால், இவர் பெற்றோர் இவருக்கு ஆலவாயர் என்று பெயரிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இவர் புறநானூற்றில் இயற்றியுள்ள இரண்டு பாடல்கள் மட்டுமல்லாமல், அகநானூற்றில் இரண்டு செய்யுட்களும் (87, 296), நற்றிணையில் இரண்டு செய்யுட்களும் (51, 361) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: ஒருகால், மதுரைப் பேராலவாயர் தலைவன் ஒருவனைக் காணச் சென்றார். அப்பொழுது, அத்தலைவன் பகைவர் நாட்டிலிருந்து பசுக்களைக் கவர்ந்துவரச் சென்றிருந்தான். அவன் வரவுக்காக மதுரைப் பேராலவாயர் காத்திருந்தார். சிறிது நேரத்தில், தலைவன் தன் துணைமறவர்களுடனும், தான் கவர்ந்த பசுக்களுடனும் திரும்பி வந்தான். அங்குள்ள மக்கள் பெரும் ஆரவாரத்துடன் அவனை வரவேற்றனர். தலைவனின் வெற்றியைப் பாராட்டி அங்கே ஒரு உண்டாட்டு நடைபெற்றது. அந்த உண்டாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை, இப்பாடலில் மதுரைப் பேராலவாயர் கூறுகிறார்.

திணை: வெட்சி. வீரர் அரசனுடைய ஆணையைப் பெற்றும், பெறாமலும், பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து வருதல்.

துறை: உண்டாட்டு. வீரர் மதுவையுண்டு மனங்களித்தலைக் கூறுதல்.

துறை: தலைத் தோற்றம். ஒரு வீரன் பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து கொண்டுவந்துது குறித்து உறவினர் தம் மகிழ்ச்சியைக் கூறுதல்.

நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;
பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்
புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்;
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்று
5 நிரையோடு வரூஉம் என்னைக்கு
உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

அருஞ்சொற்பொருள்

1. நறவு = மது; தொடுதல் = இழிதல்; விடை = ஆடு; வீழ்த்தல் = விழச் செய்தல் (வெட்டுதல்). 2. பாசுவல் = பாசு+உவல்; பாசு = பசிய, உவல் = இலை. 4. ஒன்னார் = பகைவர்; முருக்கி = முறித்து. 5. என்னை = என்+ஐ= என் தலைவன். 6. உழையோர் = பக்கத்தில் உள்ளவர்கள்; சாயல் = இளைப்பு (சோர்வு).

கொண்டு கூட்டு: என்னைக்கு உழையோர் தன்னினும் பெருஞ்சாயலர்; அவர்க்கு நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; பெய்ம்மின் எனக் கூட்டுக.

உரை: மதுவைப் பிழியுங்கள்; ஆட்டை வெட்டுங்கள். பசிய இலைகளால் வேயப்பட்ட சிறிய கால்களுடைய பந்தரில் ஈரமுடைய புதுமணலைப் பரப்புங்கள்; பகைவரின் தூசிப்படையை அழித்துத் திரும்பிவரும் தனது படைக்குப் பின்னே நின்று, ஆநிரைகளுடன் வரும் என் தலைவனுக்குப் பக்கத்தில் துணையாக உள்ள மறவர்கள் அவனைவிட மிகவும் சோர்வுடன் இருப்பார்கள்.

கரந்தைத் திணைப்பாடல்கள் -2

3. 259. புனை கழலோயே!

பாடியவர்: கோடை பாடிய பெரும்பூதனார். சங்க காலத்தில், கோடைக்கானல் மலை கோடை மலை என்று அழைக்கப்பட்டது. அந்த மலையைச் சிறப்பாகப் பாடியதால், இவர் கோடை பாடிய பெரும்பூதனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி: ஓரூரில், ஒரு தலைவனுடைய ஆநிரைகளை அவன் பகைவரின் வீரர்கள் கவர்ந்தனர். ஆநிரைகள் துள்ளிக் குதித்துச் செல்கின்றன. அவற்றைக் கவர்ந்த வீரர்கள் காட்டுக்குள் மறைந்திருக்கின்றனர். ஆநிரைகளை இழந்த தலைவன் அவற்றை மீட்பதற்கு ஆவலாக இருக்கிறான். அதைக் கண்ட புலவர் பெரும்பூதனார், “பகைவர்கள் காட்டுக்குள் மறைந்திருக்கின்றனர். ஆகவே, இப்பொழுது உன் ஆநிரைகளை மீட்கச் செல்ல வேண்டாம்.என்று இப்பாடலில் அத்தலைவனுக்கு அறிவுறை கூறிகிறார்.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: செருமலைதல். பசுக்களைக் கவர்ந்து சென்ற பகைவரை நெருங்கி அவர்கள் அஞ்சுமாறு போர் செய்தல்.

துறை: பிள்ளைப்பெயர்ச்சி. பறவைகள் குறுக்கே வந்ததால் சகுனம் சரியில்லாமல் இருந்தும், அதற்கு அஞ்சாது சென்று போர் செய்த வீரனுக்கு அரசன் கொடை புரிதல்.

ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்;
செல்லல்; செல்லல்; சிறக்கநின் உள்ளம்;
5 முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே.

அருஞ்சொற்பொருள்

1. பெயர்தல் = போதல் . 2. தலை கரந்து = தம்மை மறைத்துக்கொண்டு. 3. ஒடுக்கம் = மறைந்திருத்தல். 4. செல்லல் = செல்லாதே. 5. முருகு = தெய்வம், முருகன்; புலைத்தி புலையனின் மனைவி. 6. தாவுபு = தாவி; தெறித்தல் = பாய்தல்; ஆன் = பசு.

கொண்டு கூட்டு: புனைகழலோய், காணாய்; ஆன்மேற் செல்லல், செல்லல்; நின்னுள்ளம் சிறப்பதாக எனக் கூட்டுக.

உரை: இடுப்பில் விளங்கும் வாளையும், காலில் வீரக்கழலையும் அணிந்தவனே! பகைவர்கள் கவர்ந்த ஆநிரை, எருதுகளுடன் சென்றுகொண்டிருக்கின்றன. தெய்வத்தின் ஆற்றல் உடலில் புகுந்த புலைத்தியைப் போல் ஆநிரை துள்ளிக் குதித்துச் செல்கின்றன. அவற்றைக் கவர்ந்தவர்கள் அவற்றுடன் செல்லாது, இலைகளால் மூடப்பட்ட பெரிய காட்டுக்குள் ஒளிந்திருப்பதைக் காண்பாயாக. ஆகவே, இப்பொழுது அவற்றை மீட்கச் செல்லாதே. உன் முயற்சியில் நீ சிறப்பாக வெற்றி பெறுவாயாக.

4. 290. மறப்புகழ் நிறைந்தோன்!

290. மறப்புகழ் நிறைந்தோன்!

பாடியவர்: ஔவையார். ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள்.

அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார். ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால், சங்கநூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் கபிலர், பரணர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார்.


பாடலின் பின்னணி: ஒருஅரசனின் ஆநிரைகளை மற்றொரு அரசனின் வீரர்கள் கவர்ந்தனர். ஆநிரைகளை இழந்த அரசன் அவற்றை மீட்பதற்காகக் கரந்தைப் போர் நடத்த விரும்பினான். அவன் தன்நாட்டிலுள்ள வீரர்களைப் போருக்கு வருமாறு அழைத்தான். அரசனின் அழைப்பிற்கிணங்கி, வீரர்கள் பலரும் ஒன்று கூடினர். போருக்குப் போகுமுன் அரசன் வீரர்களுக்கு விருந்தளித்து, அவர்களின் வீரச் செயல்களைப் புகழ்வது வழக்கம். அவ்விருந்தில், ஒளவையாரும் கலந்துகொண்டார். வீரர்களைப் புகழும் பணியை ஒளவையார் மேற்கொண்டார். ஒரு வீரனின் குடிப்பெருமையைக் கூற விரும்பிய ஒளவையார், “அரசே, இவன் பாட்டன் உன் பாட்டனின் உயிரைக் காப்பதற்காக, வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள்போல் தன் உடல் முழுதும் வேல்கள் பாய்ந்து இறந்தான். இவனும், தன் பாட்டனைப்போல், உன்னை மழையிலிருந்து காக்கும் பனையோலைக் குடைபோலக் காப்பான்.என்று கூறுவதை இப்பாடலில் காணலாம்.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துரை: குடிநிலை உரைத்தல். பழமையும் வீரமும் மிகுந்த குடியின் வரலாற்றைக் கூறுதல்.


இவற்குஈத்து உண்மதி கள்ளே; சினப்போர்
இனக்களிற்று யானை இயல்தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை
எடுத்துஎறி ஞாட்பின் இமையான் தச்சன்
5 அடுத்துஎறி குறட்டின் நின்று மாய்ந் தனனே:
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே.

அருஞ்சொற்பொருள்:

1. இவற்கு = இவனுக்கு; ஈத்து = கொடுத்து; மதி அசை. 2. இனம் = கூட்டம்; இயற்றல் = புதிதாகச் செய்தல்; குருசில் = குரிசில் = தலைவன், அரசன். 3. நுந்தை = உன் தந்தை. 4. ஞாட்பு = போர், போர்க்களம். 5. குறடு = வண்டிச்சக்கரத்தின் நடுப்பகுதி. 6. மறம் = வீரம்; மைந்து = வலிமை. 7. உறை = மழை; உறைப்புழி = மழை பெய்யும்பொழுது; ஓலை = ஓலைக்குடை.

உரை: அரசே, முதலில் கள்ளை இவனுக்கு அளித்து பின்னர் நீ உண்பாயாக; சினத்துடன் செய்யும் போரையும், யானைகளையும், நன்கு செய்யப்பட்ட தேர்களையுமுடைய தலைவனே! உன் பாட்டனை நோக்கிப் பகைவர்கள் எறிந்த வேல்களைக் கண்ணிமைக்காமல் இவன் பாட்டன் தாங்கிக்கொண்டான்; தச்சனால் வண்டியின் குடத்தில் செருகப்பட்ட ஆரக்கால்கள்போல் அவன் காட்சி அளித்து இறந்தான். வீரத்துடன் போர்செய்து புகழ்பெற்ற வலிமையுடைய இவன், மழை பெய்யும்பொழுது நம்மை அதனின்று காக்கும் பனையோலையால் செய்யப்பட்ட குடைபோல் உன்னை நோக்கி வரும் வேல்களைத் தாங்கி உன்னைக் காப்பான்.

வஞ்சி திணைப்பாடல்கள் -2

(புறம் -4) தாயற்ற குழந்தை!

பாடியவர்: பரணர்(4, 63, 141, 142, 144, 145, 336, 341, 343, 348, 352, 354, 369). சங்க காலப் புலவர்களில் மிகவும் சிறந்த புலவர்களில் ஒருவர் பரணர். பரணரால் பாடப்பாடுவது பாராட்டுதற்குரியது என்ற கருத்தில் பரணன் பாடினனோஎன்று அவ்வையார் குறிப்பிடுகிறார் (புறநானூறு - 99). பரணர், புறநானூற்றில் 13 செய்யுட்களும், அகநானூற்றில் 16 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும், பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தும் பாடியுள்ளார். இவரால் பாடப்பட்டோர் உருவப் ப்ஃறேர் இளஞ்சேட்சென்னி, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி, வையாவிக் கோப்பெரும் பேகன், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் ஆகியோராவர். இவர் பாடல்கள் வரலாற்றுச் செய்திகள் நிறைந்தவை. இவர் கபிலரின் நண்பர். மருதத் திணைக்குரிய பாடல்கள் இயற்றுவதில் வல்லவர்.

இவர் பதிற்றுப் பத்தில் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடியதற்கு, உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரனையும் பரிசாக பெற்றதாகக் கூறப்படுகிறது.
பாடப்பட்டோன்: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி (4, 266). சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி வரலாற்றில் இடம் பெற்ற முதல் சோழ மன்னன் என்று கருதப்படுகிறது. இவனுக்கு முந்தியதாக இருந்த மன்னர்களைப்பற்றிய செய்திகளை வரலாற்று ஆசிரியர்கள் கற்பனைக் கதைகளாகவே கருதுகின்றனர். உதாரணமாக, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், காகண்டன், காவேரன், மனு நீதி கண்ட சோழன், கற்றை ஆடல் கொண்டவன், சமுத்ரஜித் போன்றவர்களைப் பற்றிக் கூறப்படும் செய்திகளுக்குத் தக்க ஆதாரமில்லை என்று வரலாற்று ஆசிரியர் சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.

இளஞ்சேட்சென்னியின் காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இடைப் பகுதி என்று கருதப்படுகிறது. பொருநராற்றுப்படையில், கரிகாலனை உருவப் ப்ஃறேர் இளையோன் சிறுவன்என்று அதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் குறிப்பிடுவதிலிருந்து இவன் கரிகாலனின் தந்தை என்பது தெரிய வருகிறது (பொருநராற்றுப்படை, 130). இவன் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள உறையூரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி புரிந்தான்.
பாடலின் பின்னணி: இப்பாடலில் புலவர் பரணர், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை ஆகிய நான்கும் போரில் சிறந்து விளங்குவதைப் பாராட்டுகிறார். சோழன் தேரில் வருவது கடலினின்று கதிரவன் எழுவது போல் உள்ளது என்று அவனைப் புகழ்கிறார். அவனோடு போர் புரிந்த பகைவரின் நாடு தாயில்லாக் குழந்தை போல் ஓயாது கூவி வருந்தும் என்றும் கூறுகிறார்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: கொற்ற வள்ளை. அரசனுடைய வெற்றியைக் கூறி பகைவரின் நாட்டின் அழிவை உரைத்தல்.

வாள்வலந்தர மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள் களங்கொளக் கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
5
தோல் துவைத்து அம்பின் துளைதோன்றுவ
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே எறிபதத்தான் இடம் காட்டக்
கறுழ் பொருத செவ்வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன;
10
களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி
15
மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே
தாய்இல் தூவாக் குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே.

அருஞ்சொற்பொருள்:
1. வலம் = வெற்றி; மறு = கரை. 2. வனப்பு = நிறம் அழகு. 3. களங்கொள்ளல் = இருப்பிடமாக்கிக் கொள்ளுதல், வெல்லுதல்; பறைந்தன = தேய்ந்தன. 4. மருப்பு = கொம்பு. 5. தோல் = தோலால் செய்யப்பட்ட கேடகம்; துவைத்தல் = குத்துதல், ஒலித்தல். 6. நிலைக்கு = நிலையில்; ஒராஅ = தப்பாத; இலக்கம் = குறி. 7. மா = குதிரை; எறிதல் = வெல்லுதல்; பதம் = பொழுது. 9. கறுழ் = கடிவாளம்; பொருதல் = தாக்குதல். 10. எறியா = எறிந்து = வீசியடித்து; சிவந்து = கோபித்து; உராவல் = உலாவல். 11. நுதி = நுனி; கோடு = கொம்பு. 13. அலங்குதல் = அசைதல்; உளை = பிடரி மயிர்; பரீஇ = விரைந்து; இவுளி = குதிரை. 14. பொலம் = பொன்; பொலிவு = அழகு. 15. மா = பெரிய; நிவத்தல் = உயர்தல் தோன்றுதல். 16. கவின் = அழகு; மாது - ஒருஅசைச் சொல். 17. ஆகன் மாறு = ஆகையால். 18. தூவா = உண்ணாத; குழவி = குழந்தை. 19. ஓவாது = ஒழியாது; உடற்றல் = பகைத்தல்; கூ = கூப்பிடு.

உரை: போரில் வெற்றியைத் தரும் வகையில் பயன்படுத்தப்பட்டதால் வீரர்களின் வாள்கள் குருதிக்கறை படிந்து சிவந்த வானத்தைப் போல் அழகாக உள்ளன. வீரர்களின் கால்கள் போர்க்களத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்டதால் அவர்கள் கால்களில் அணிந்த கழல்கள் தேய்ந்து, கொல்லும் காளைகளின் கொம்புகள் போல் உள்ளன. கேடயங்கள் அம்புகளால் குத்தப்பட்டதால் அவற்றில் துளைகள் தோன்றி உள்ளன. அத்துளைகள், தவறாமல் அம்பு எய்வதற்கு ஏற்ற இலக்குகள் போல் காட்சி அளிக்கின்றன.

குதிரைகள், பகைவரைப் போரில் வெல்லும் பொழுது, வாயின் இடப்புறமும் வலப்புறமும் கடிவாளத்தால் இழுக்கப்பட்டதால் சிவந்த வாய் உடையனவாய் உள்ளன. அக்குதிரைகளின் வாய்கள், மான் முதலிய விலங்குகளைக் கடித்துக் கவ்வியதால் குருதிக்கறை படிந்த புலியின் வாய் போல் உள்ளன.

யானைகள், மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள் உயிரைக் கொல்லும் இயமனைப் போல் காட்சி அளிக்கின்றன.

நீ அசையும் பிடரியுடன் விரைந்து ஓடும் குதிரைகள் பூட்டிய, பொன்னாலான தேர் மீது வருவது, பெரிய கடலிலிருந்து செஞ்ஞாயிறு எழுவதைப்போல் தோன்றுகிறது. நீ இத்தகைய வலிமையுடையவனாதலால், உன் பகைவர்கள் நாட்டு மக்கள் தாயில்லாத குழந்தைகள் போல் ஓயாது கூவி வருந்துகின்றனர்.

 (புறம் 57) காவன்மரமும் கட்டுத்தறியும்!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் (57, 58,169,171, 353). இவர் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் இயற்றியது மட்டுமல்லாமல், அகநானூற்றில் மூன்று பாடல்களும் (107, 123, 285), குறுந்தொகையில் ஒரு பாடலும் (297) இயற்றியவர்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 55-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒரு சமயம், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பகைவருடன் போர் செய்வதற்குச் சென்று கொண்டிருந்தான். அவனுடைய வலிமையையும் போர் புரியும் ஆற்றலையும் நன்கு அறிந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், “வேந்தே, உன் வீரர்கள் பகைவர்களின் நாட்டு வயல்களை கொள்ளை கொண்டால் கொள்ளட்டும்; வேண்டுமானால் அவர்களின் ஊர்களுக்குத் தீ மூட்டுக; ஆனால், அவர்களின் காவல் மரங்களை வெட்டுவதைத் தவிர்ப்பாயாக.என்று இப்பாடலில் அவனுக்கு அறிவுறை கூறுகிறார்

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையேன்; என்னெனின்
5
நீயே, பிறர்நாடு கொள்ளும் காலை அவர்நாட்டு
இறங்குகதிர் கழனிநின் இளையரும் கவர்க;
நனந்தலைப் பேரூர் எரியும் நக்க;
மின்னுநிமிர்ந் தன்னநின் ஒளிறுஇலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
10
கடிமரம் தடிதல் ஓம்புநின்
நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே.

அருஞ்சொற்பொருள்:
1. வல்லார் = திறமையற்றவர்; வல்லுநர் = திறமையுள்ளவர். 3. உரை = சொல்; சாலல் = மிகுதியாதல், மேன்மையுடைத்தாதல். 6. இறங்குதல் = வளைதல்; இளையர் = வேலைக்காரர், வீரர்; கவர்தல் = எடுத்தல் (கொள்ளையடித்தல்). 7. நனம் = அகற்சி; நக்க = சுடுக. 8. இலங்கல் = விளங்குதல். 9. ஒன்னார் = பகைவர்; செகுத்தல் = அழித்தல்; என்னதூஉம் = சிறிதும். 10. கடிமரம் = பகைவர் அணுகாவண்ணம் வளர்த்துக் காக்கப்படும் காவல் மரம்; தடிதல் = வெட்டல்; ஓம்புதல் = தவிர்தல். 11. கந்து = யானை கட்டும் தறி; ஆற்றுதல் = கூடியதாதல்.

கொண்டு கூட்டு: மாற, நின் யானைக்கு கந்து ஆற்றாவாதலால் கடி மரந் தடிதல் ஓம்பு எனக் கூட்டுக.

உரை: திறமையற்றவர்களாக இருந்தாலும் திறமையுடையவர்களாக இருந்தாலும், உன்னைப் புகழ்வோர்க்கு அருள் புரிவதில் நீ திருமாலைப் போன்றவன். சொல்லுதற்கரிய புகழ் பொருந்திய மாறனே! நான் உன்னிடம் ஒன்று கூறுவேன். அது என்னவென்றால், நீ பிறர் நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் பொழுது, அவர்களின் நாட்டில், வளைந்த கதிர்களையுடய வயல்களை உன்னுடய வீரர்களும் கொள்ளை கொள்ளட்டும்; அகன்ற பெரிய இடங்கள் உள்ள பெரிய ஊர்களைத் தீயால் வேண்டுமானால் எரிப்பாயாக; மின்னலைப் போல் ஒளியுடன் விளங்கும் உன்னுடைய நெடிய வேல், பகைவர்களை அழித்தாலும் அழிக்கட்டும்; அவர்களுடைய காவல் மரங்களை வெட்டுவதை மட்டும் தவிர்ப்பாயாக. ஏனெனில், உன் நெடிய யானைகளுக்கு அம்மரங்கள் கட்டுத் தறியாகும் தகுதி அற்றவை.

சிறப்புக் குறிப்பு: காவல் மரங்களை வெட்டினால் போர் முடிவுபெறும். ஆகவே, காவல் மரங்களை வெட்டாமல் இருந்தால், பகைவர்கள் பணிந்து திறை கட்டுவதற்கு உடன்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால், புலவர், காவல்மரங்களை வெட்டுவதைத் தவிர்த்துப் பகைவர்களுடன் சமாதானமாகப் போவதற்கு வழிவகுக்குமாறு இப்பாடலில் பாண்டியனுக்கு அறிவுரை கூறுகிறார். இப்பாடலில், புலவர் சமாதானத்துக்கு வழிகாட்டுவதால், இப்பாடல் துணைவஞ்சி என்னும் துறையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

காஞ்சி திணைப்பாடல்கள் -2

350. வாயிற் கொட்குவர் மாதோ!

 

350. வாயிற் கொட்குவர் மாதோ!

பாடியவர்: மதுரை மேலைக்கடைக் கண்ணம்புகுத்தார் ஆயத்தனார். மேலைக்கடை என்பது தென்பாண்டி நாட்டில் உள்ள ஓரூர்.  இப்புலவர் மேலைக்கடையைச் சார்ந்தவர்; மதுரையில் தங்கியிருந்தவர். கண்ணீர் சொரிந்தவரை கண்அம்பு உகுத்தார்என்று பாடியதால் கண்ணம்புகுத்தார்என்ற அடைமொழி இவர் இயற்பெயராகிய ஆயத்தனார் என்பதோடு சேர்த்து, இவர் மதுரை மேலைக்கடை கண்ணம்புகுத்தார் ஆயத்தனார் என்று அழைக்கப்பட்டார்.

பாடலின் பின்னணி:  ஓரூரில் அகழி, மதில் ஆகியவை ஏற்கனவே அழிந்துள்ளது.  அங்கு அழகிய இளம்பெண் ஒருத்தி உள்ளாள். அவளை மணக்க விரும்பி வேந்தன் ஒருவன் ஆவலுடன் அங்கு வந்துள்ளாள்.  அவளை மணம் செய்விக்க மறுத்தால் போர் செய்யத் தயங்கமாட்டான் போலிருக்கிறது. அப்பெண்ணின் தமையன்மார் அவளை மணம் செய்விக்க மறுத்துப் போரிடுவர் போல் உள்ளது. ஏற்கனவே அழிந்துள்ள இவ்வூர் என்ன ஆகுமோ என்று மதுரை மேலைக்கடைக் கண்ணம்புகுத்தார் ஆயத்தனார் வருந்தி இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.

துறை: மகட்பாற் காஞ்சி. நின் மகளைத் தருகஎன்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.


தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்
சிதைந்த இஞ்சிக் கதுவாய் மூதூர்
யாங்கா வதுகொல் தானே தாங்காது
படுமழை உருமின் இரங்கு முரசின்
கடுமான் வேந்தர் காலை வந்துஎம்                                  5


நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ;
பொருதாது அமருவர் அல்லர்; போருழந்து
அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடிவேல் எஃகின் சிவந்த உண்கண்
தொடிபிறழ் முன்கை இளையோள்                                  10


அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே.

அருஞ்சொற்பொருள்: 1. கிடங்கில் = அகழி; ஞாயில் = பகைவர்களை நோக்கி அம்பு எய்துவதற்காக மதில் சுவற்றில் உள்ள துளைகள்; 2. இஞ்சி = மதில்; மூதூர் = பழைய ஊர்; கதுவாய் = வடுவாய். 4. படுதல் = ஒலித்தல்; மழை = மேகம்; உரும் = இடி. 5. கடு = விரைவு; மான் = குதிரை. 6. கொட்குதல் = திரிதல். 7. உழத்தல் = செய்தல். 8. அடுதல் = வெல்லுதல், கொல்லல்; முரண் = வலி, மாறுபாடு; முன்பு = வலிமை; தன்னையர் = தமையன்மார். 9. உண்கண் = மைதீட்டிய கண். 11. அணி = அழகு; ஆகம் = மார்பு; சுணங்கு = தேமல்.

 

கொண்டு கூட்டு: சுணங்கு அரும்பியவாகலின், வேந்தர் கொட்குவர்; அமைகுவரல்லர்; மூதூர் தாங்காதாகலின் யாங்காவது கொல் என கூட்டுக.

 

உரை: இப்பெண்ணின் அழகிய, நல்ல மார்பகத்தில் தேமல் தோன்றியது (இப்பெண் திருமணத்திற்கேற்ற பருவம் அடைந்தாள்.). இவள், மிகுந்த வலிமையுடைய தன் தமையன்மாருக்குப் போரில் வெற்றியைத் தரும் வேலைப் போன்ற சிவந்த, மை தீட்டிய கண்களையும், வளையல்கள் தவழும் கைகளையும் உடையவள்.   இவளை மணம் செய்துகொள்ள விரும்பி, ஒலிக்கும் மேகத்தினின்று தோன்றும் இடிபோல் முழங்கும் முரசையும், விரைந்து செல்லும் குதிரைகளையுமுடைய வேந்தர்கள் காலையிலிருந்து எங்கள் ஊரின்  நெடிய வாயிலிடத்துச் சுற்றித் திரிகிறார்கள். பெண் தர மறுத்தால் போர் செய்யாமல் போகமாட்டார்கள் போலிருக்கிறது. தூர்ந்துபோன அகழியையும், தளர்ந்துபோன ஞாயில்களையும் (பகைவர்களை நோக்கி அம்பு எய்துவதற்காக மதில் சுவற்றில் உள்ள துளைகளையும்), இடிந்த மதிலையுமுடைய இவ்வூர் ஏற்கெனவே அழிந்துள்ளது.  இப்பழைய ஊர் மேலும் போரைத் தாங்காதாகலின், என்ன ஆகுமோ?

 

சிறப்புக் குறிப்பு: கதுவாய் மூதூர்என்பது ஏற்கெனவே பகைவர் செய்த செயல்களால் வடுப்பட்ட பழைய ஊர் என்பதைக் குறிக்கிறது. இவ்வூர் வலிவிழந்திருப்பதால், மீண்டும் போர் வந்தால் இவ்வூரால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதைக் குறித்து வருந்தி யாங்காவது கொல்என்று புலவர் கண்ணம்புகுத்தார் கூறுகிறார்.

 

 (புறம் 71) இவளையும் பிரிவேன்!

பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன். பூதப்பாண்டியன் என்ற பாண்டிய  மன்னன்
ஒல்லையூரைப் பகைவரிடமிருந்து வென்றதால் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்று சிறப்பிக்கப்பட்டான். பூதப்பாண்டியனும் அவன் மனைவி பெருங்கோப்பெண்டு என்பவளும் மிக்க அன்போடு இல்லறம் நடத்தினர்.

பாடலின் பின்னணி: ஒரு சமயம் பூதப்பாண்டியனுக்கும் சேர சோழ மன்னர்களுக்கும் பகை உண்டாயிற்று. அப்பகையின் காரணத்தால் அவர்கள் பூதப்பாண்டியனோடு போருக்கு வந்தனர். அதை அறிந்த பூதப்பாண்டியன் மிகுந்த சினத்தோடு கூறிய வஞ்சினமே இப்பாடல். பூதப்பாண்டியன் இப்போரில் கொல்லப்பட்டான். அதை அறிந்த அவன் மனைவி, தன் கணவன் இறந்த பிறகு தான் வாழ விரும்பவில்லை என்று கூறித் தீக்குளித்து உயிர் துறக்கிறாள். அவள் தீக்குளிக்குமுன் பாடியதாக ஒரு பாடல் புறநானூற்றில் (புறம் - 246) உள்ளது.

திணை: காஞ்சி; துறை: வஞ்சினக் காஞ்சி

மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருதும் என்ப ; அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
5
அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த
பேரமர் உண்கண் இவளினும் பிரிக:
அறன்நிலை திரியா அன்பின் அவையத்துத்,
திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்
10
வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
15
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை இழுக்கி யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!

அருஞ்சொற்பொருள்
1.
மடங்கல் = சிங்கம்; மடங்குதல் = மீளுதல், வளைதல், செயலறுதல். 2. உடங்கு இயைந்து = ஒன்று கூடி. 4. ஆர் = நிறைவு; அமர் = ோர். 6. அமர்தல் = அமைதல், பொருந்துதல். 7. மெலிகோல் = கொடுங்கோல். 8. திறன் = தகுதி. 16. களி = செருக்கு, மகிழ்ச்சி. 17. மன்பதை = மக்கட் பரப்பு. 19. வன்புலம் = வளமற்ற நிலம்.

உரை: சிங்கம்போலச் சினத்தையும், உறுதியான உள்ளத்தையும், வலிமைமிக்க படையையுமுடைய வேந்தர் ஒன்று கூடி என்னோடு போரிடுவேமென்று கூறுகிறார்கள். நான் அவ்வேந்தரைப் பொறுத்தற்கரிய போரில் அவர்கள் அலறுமாறு போரிட்டு, அவர்களை அவர்களுடைய தேருடன் புறமுதுகு காட்டி ஓடுமாறு செய்யேனாயின், சிறந்த, பெரிய மையணிந்த கண்களையுடைய இவளிடமிருந்து (என்னுடைய மனைவியிடமிருந்து) நீங்குவேனாக. அறநிலை மாறாத அன்போடு கூடிய என் அரசவையில் தகுதியற்ற ஒருவனை இருத்திக் கொடுங்கோல் புரியச் செய்தேனாக. மிக்க புகழுடைய வைகையாற்றால் சூழப்பட்ட வளம் பொருந்திய ஊர்களில் பொய்க்காத புதுவருவாயுடைய மையல் என்னும் பகுதிக்குத் தலைவனாகிய மாவன், நிலைபெற்ற அரண்களையுடைய ஆந்தை, புகழமைந்த அந்துவஞ் சாத்தன், ஆதன் அழிசி, சினமிக்க இயக்கன் ஆகியோர் உட்பட என் கண்போன்ற நட்பினையுடைய நண்பர்களோடு கூடிக் களிக்கும் இனிய செருக்குடைய மகிழ்ச்சியை இழந்தவனாவேனாக. நான், மறு பிறவியில் மக்களைப் பாதுகாக்கும் பெருமைமிக்க பாண்டியர் குடியில் பிறக்காமல் வளமற்ற நிலம் காக்கும் குடியில் பிறப்பேனாக.

சிறப்புக் குறிப்பு: மனைவியைப் பிரியாமலிருப்பது, கொடுங்கோலன் என்று மக்களால் கருதப்படாமலிருப்பது, நண்பர்களின் நட்பு, மற்றும் பாண்டிய நாட்டை ஆளும் வாய்ப்பு ஆகிய இவையெல்லாவற்றையும் பூதப்பாண்டியன் மிகவும் மேன்மையானயவையாகவும் விருமபத்தக்கவையாகவும் கருதினான் என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.

அலகு -2

உழிஞைத்திணைப்பாடல்கள் -2

புறநானூறு - 44. அறமும் மறமும்!

புறநானூறு - 44. அறமும் மறமும்!


பாடியவர்: கோவூர் கிழார். கோவூர் கிழார்: (கோவூர் அழகியார் எனவும் பாடம்). இவர் கோவூரைச் சார்ந்தவர். வேளாண் மரபினர். இவர் புறநானூற்றில் 15 பாடல்களை இயற்றியவர்.
பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி.
திணை : உழிஞை. 
துறை: ---------
குறிப்பு :நலங்கிள்ளி ஆவுரை முற்றியிருந்தான்; அதுகாலை அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கண்டு பாடியது, இச் செய்யுள். 


இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா 
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ 
திருந்தரை நோன்வெளில் வருந்த வொற்றி 
நிலமிசைப் புரளுங் கைய வெய்துயிர்த் 
தலமரல் யானை யுருமென முழங்கவும் 

பாலில் குழவி யலறவு மகளிர் 
பூவில் வறுந்தலை முடிப்பவு நீரில் 
வினைபுனை நல்லி லினைகூஉக் கேட்பவும் 
இன்னா தம்ம வீங்கினி திருத்தல் 
துன்னருந் துப்பின் வயமான் றோன்றல் 

அறவை யாயி னினதெனத் திறத்தல் 
மறவை யாயிற் போரொடு திறத்தல் 
அறவையு மறவையு மல்லை யாகத் 
திறவா தடைத்த திண்ணிலைக் கதவின் 
நீண்மதி லொருசிறை யொடுங்குதல் 

நாணுத்தக வுடைத்திது காணுங் காலே. 


பொருளுரை: 

கரிய பெண்யானைகளின் கூட்டத்தோடு பெரும் நீர்நிலைகளில் படியாதனவாய்
நெல்லையுடைய கவளத்துடன், நெய்யால் மிதித்துத் திரட்டப்பட்ட கவளமும் பெறாமல் செம்மையான வலிமையான 
மர அடிப்பாகத்தையுடைய கம்பத்தை ஒடித்துச் சாய்த்து நிலத்தில் புரளும் தும்பிக்கையை உடைய 
வெப்பமுடைய பெருமூச்சு விட்டு அங்குமிங்கும் சுற்றிச் சுற்றி வரும் யானை இடி இடிப்பதுபோல் பிளிறுகின்றது. 

பாலில்லாத குழந்தைகள் அலறி அழுகின்றன. பெண்கள் பூக்கள் சூடாத காய்ந்த தலைமுடியை முடிக்கவும்
நீரில்லாத, வேலைப்பாடுடன் அமைந்த நல்ல வீடுகளில் உள்ளவர்கள் வருந்திக் கூப்பிடும் கூவலைக் கேட்கவும் 
இங்கே நீ இங்கே இனிதாக இருப்பது கொடியது. 

நெருங்குவதற்கரிய வலிமையும் திறமையும் கொண்ட குதிரைகளையுடைய அரசே! 

நீ அறவழியில் செல்ல விரும்பினால், இந்த நாடு உன்னுடையது என்று சொல்லி 
உன் கோட்டைக் கதவுகளைத் திறந்து விடு. வீர வழியில் செல்ல விரும்பினால் போர் செய்வதற்கு உன் கோட்டைக் கதவுகளைத் திறந்து விடு. 

அவ்வாறு அறவழியும் இன்றி, வீரவழியும் இல்லாமல் திறக்காது அடைக்கப்பட்ட கனமான நிலைகளையுடைய கோட்டைக் கதவினையுடைய 
நீண்ட கோட்டைச் சுவற்றின் ஒரு பக்கத்தில் மறைந்து பதுங்கியிருத்தல் வெட்கத்திற்குரிய செயல் ஆகும் என்கிறார் ஆசிரியர் கோவூர் கிழார்.

புறநானூறு - 77. யார்? அவன் வாழ்க!

புறநானூறு - 77. யார்? அவன் வாழ்க!

பாடியவர்: இடைக்குன்றூர் கிழார். பாண்டிய நாட்டில் இருந்த இடைக்குன்றூர் என்பது இவரது ஊர். இவர் வேளாண் மரபினர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல்கள் நான்கு (76, 77, 78, மற்றும் 79). இந்நான்கு பாடல்களும் பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் சேர சோழ மன்னர்களையும் குறுநில மன்னர் ஐவரையும் வென்றதைப் பாராட்டிப் புகழ்ந்து பாடப்பட்டவையாகும்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்.
திணை: உழிஞை
துறை: -------- 

கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக்
குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,

நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல்? வாழ்க அவன் கண்ணி! தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு
அயினியும் இன்றுஅயின் றனனே; வயின்வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை

வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே; அவரை
அழுந்தப்பற்றி அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
கவிழ்ந்துநிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும்அதனினும் இலனே.


பொருளுரை:

சலங்கை கழற்றப்பட்ட கால்களில் ஒளிபொருந்திய கழல்கள் அணிந்திருக்கிறான். 
தலைமுடி நெற்றியில் விழாமல் விலக்கிக் குடுமியாகக் கட்டப்பட்டத் தலையில் 
வேம்பின் ஒளிபொருந்திய தளிரை நீண்ட உழிஞைக் கொடியுடன் நெருக்கமாகத் தொடுத்துச் சூடியுள்ளான். 

சிறிய வளையல்களைக் கழற்றிய கைகளால் வில்லைப்பற்றிக்கொண்டு நெடுந்தேரின் முன் தளத்தில் அழகாக நிற்கின்றானே, அவன் யார்
அவன் (அணிந்திருக்கும் மாலை) வாழ்க! அவன் மாலை அணிந்திருக்கிறான்; ஆனால் அவன் இன்னும் (சிறுவர்கள் அணியும்) தாலியைக் கழற்றியதாகத் தெரியவில்லையே! 

பாலுணவு உண்ணுவதை நிறுத்தி இன்றுதான் சோற்றுணவு உண்டவன் போலத் தோன்றுகிறானே! 
வரிசை வரிசையாக வெகுண்டு வந்த புதுப்புது வீரர்களைக் கண்டு அவன் வியக்கவும் இல்லை
அவர்களை இழிவு படுத்தவும் இல்லை. அவர்களை இறுகப் பிடித்து, அகன்ற ஆகாயத்தில் 
ஒலி எழுமாறுஅவர்களது உடலைக் கவிழ்த்து நிலத்தில் படுமாறு வீழ்த்தி அழித்ததை நினைத்து மகிழவும் இல்லை
தன் செயலை நினைத்துப் பெருமிதமும் அடையவில்லையே!

 

நொச்சி திணைப்பாடல்கள்

(புறம் 110.)  யாமும் பாரியும் உளமே!

பாடியவர்: கபிலர். சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிகையில் பாடல்களை இயற்றியவர்.[1]; திருவாதவூரில் பிறந்தவர் எனத் [[திருவிளையாடற் புராணம் கூறுவது கபிலதேவ நாயனார் என்னும் சைவப் புலவரை.

இவர் அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறமுடையவராயினும் குறிஞ்சித் திணை பற்றி பாடுவதில் தேர்ந்தவர். கலித்தொகையில் குறிஞ்சிக் கலி, பத்துப் பாட்டில் குறிஞ்சிப் பாட்டு, ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணை பற்றிய நூறு பாடல்களை பாடியதோடு, இத்திணைபற்றி அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளதால் குறிஞ்சி பாடிய கபிலர் என்றே இவரைக் கூறலாம்.

கபில முனிவர், தொல்கபிலர், கபிலதேவ நயனார் ஆகியோர் இவரினும் வேறானவர் ஆவார். இன்னா நாற்பது என்ற பதினெண் கீழ்கணக்குத் தொகுதியில் உள்ள நூலின் ஆசிரியரான கபிலரும்இவரும் ஒருவரல்லர். சங்க கால புலவர் கபிலரின் காலம் கி.மு 3 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும்.


பாடப்பட்டோன்: வேள் பாரி. வேள் பாரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தம் பெரும் படையுடன் பறம்பு மலையை முற்றுகை இட்டனர். அச்சமயம், “நீங்கள் உங்கள் பெரும்படையுடன் எதிர்த்து நின்று போரிட்டாலும் பறம்பு நாட்டைப் பெற முடியாது. பறம்பு நாட்டில் உள்ள முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பெற்றனர். இனி என்னைப் போன்ற புலவர்களும் பாரியும் மட்டுமே உள்ளோம்; நீங்களும் பரிசிலரைப் போல் வந்து பாடினால் எஞ்சி யுள்ள எங்களையும் பறம்பு மலையையும் பெறலாம்.என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: நொச்சி. மதிலைக் காக்கும் வீரர்கள் போர்ப்பூச் சூடியிருத்தலைப் புகழ்வது.
துறை: மகண் மறுத்தல். ஒரு தலைவன் அவனைவிட எளியவனின் மகளை வேண்ட. , அவ்வெளியவன் தன் மகளை அத்தலைவனுக்கு மணம் செய்விக்க மறுத்துக் கூறுதல்.

கடந்துஅடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்புகொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
5
யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே.

அருஞ்சொற்பொருள்:
1.
கடந்து அடுதல் = வஞ்சியாது எதிர் நின்று போரிடுதல்; தானை = படை, 2, உடன்றல் = போரிடுதல். 3. தண் = குளிர்ந்த

உரை: வஞ்சியாது எதிர்த்து நின்று போரிடும் படைகளையுடைய நீங்கள் மூவரும் ஒன்று கூடிப் போரிட்டாலும் பறம்பு நாடு பெறுதற்கு அரிது. குளிர்ந்த பறம்பு நன்னாடு முந்நூறு ஊர்களை உடையது. அங்குள்ள முந்நூறு ஊர்களையும் பரிசிலர் முன்னரே பெற்றனர். எஞ்சியிருப்பது, பாரியும் எம் போன்ற புலவர்களும்தான். நீங்கள் பரிசிலரைப் போல் பாடி வந்தால் பாரியையும், எம் போன்ற புலவர்களையும் பறம்பு மலையையும் பெறலாம்.

புறம் 271 ) மைந்தன் மலைந்த மாறே!

271. மைந்தன் மலைந்த மாறே!

பாடியவர்: வெறிபாடிய காமக்காணியார். இவர் பெயர் காமக்கண்ணி, காமக்கணி என்றும் காணப்படுகிறது. ஆனால் காமக்காணி என்பதுதான் சரி என்றும் அது ஏடு எழுதியவர்களால் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார். இவர் ஒரு பெண்பாற் புலவர் என்று கருதப்படுகிறது. இவர் வெறியாடலைப்பற்றிப் பாடிய பாடல்கள் அகநானூற்றிலும் (22, 98), நற்றிணையிலும் (268) காணப்படுகின்றன.

வெறியாட்டு: தலைவி, களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும்பொழுது, திருமணம் நடப்பதற்குக் கால தாமதம் ஆனால், உண்ணாமல், உறங்காமல் உடல் மெலிந்து வாடுவது வழக்கம். அவள் அவ்வாறு வாடும்பொழுது, அவள் தாய், தன் பெண்ணின் மீது தெய்வம் (முருகன்) ஏறியதால்தான் அவள் அவ்வாறு வாடுகிறாள் என்று எண்ணி முருகன் கோயில் பூசாரியை அழைத்து முருகனுக்குப் பூசை நடத்துவாள். பூசாரி, ஒரு வேலை நட்டு, அதை முருகனாகப் பாவித்து, குருதியைக் கலந்த தினையை அந்த வேல்மீது எறிந்து பூசை நடத்தி முருகனை அழைப்பான்; தலைவியின் வாடிய நிலைக்கு முருகன்தான் காரணம் என்று கூறி, முருகனைத் தலைவியின் உடலிலிருந்து விரட்டுவதற்காகப் பூசாரி ஆவேசமாகக் கூத்தாடுவான். இந்த நிகழ்ச்சிக்கு வெறியாட்டு என்று பெயர்.


பாடலின் பின்னணி: ஒருகால், இரு அரசர்களிடையே போர் மூண்டது. ஒருவன் மற்றொருவனுடைய அரண்மனையை முற்றுகையிட்டான். முற்றுகையிடப்பட்ட அரண்மனையின் மதிலிடத்தே நின்று, நொச்சிப் பூவைச் சூடி வீரர்கள் அம்மதிலைக் காத்தனர். அப்பொழுது, ஒரு வீரனைப் பகைவர் வாளால் வெட்டி வீழ்த்தினர். வெட்டப்பட்டு வீழ்ந்த பொழுது, அவன் அணிந்திருந்த நொச்சி மாலை துண்டிக்கப்பட்டு அவனுடைய குருதியில் கலந்து உருமாறிக் கீழே கிடந்தது. அதை ஊன்துண்டு என்று கருதிப், பருந்து ஒன்று எடுத்துக்கொண்டு உயரப் பறந்து சென்றதைப் புலவர் வெறிபாடிய காமக்காணியார் கண்டார். அந்தக் காட்சியைக் கண்டதும், முன்பு ஒருமுறை இளம்பெண்கள் நொச்சித் தழையாலான உடையைத் தங்கள் இடையில் அணிந்திருந்ததைப் பார்த்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. இப்பாடலில், அவ்விரண்டு நிகழ்ச்சிகளையும் அவர் குறிப்பிடுகிறார்.

திணை: நொச்சி. நொச்சி மலர்களை அணிந்து மதிலைக் காத்து நிற்றல்.

துறை: செருவிடை வீழ்தல். அகழியையும் காவற் காட்டையும் காத்து, அதனால் சாவினைப் பெற்ற வீரனின் வெற்றியைக் கூறுதல்.

நீரறவு அறியா நிலமுதற் கலந்த
கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
மெல்இழை மகளிர் ஐதுஅகல் அல்குல்
தொடலை ஆகவும் கண்டனம்; இனியே
5
வெருவரு குருதியொடு மயங்கி உருவுகரந்து
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்
பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்,
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே.

அருஞ்சொற்பொருள்

1. அறவு = அறுதல், தொலைதல். 2. குரல் = கொத்து; நொச்சி = ஒரு செடி; ஆர் = நிறைவு; குரூஉ = நிறம். 3. இழை = அணிகலன்கள்; ஐது = அழகிய; அல்குல் = இடை. 4. தொடலை = மாலை; இனி = இப்பொழுது. 5. வெரு = அச்சம்; குருதி = இரத்தம்; மயங்கி = கலந்து; கரத்தல் = மறைத்தல். 6. ஒறுவாய்ப்பட்டு = துண்டிக்கப்பட்டு; தெரியல் = மாலை; செத்து = கருதி. 7. உகத்தல் = உயரப் பறத்தல். 8. புகல் = விருப்பம்; மைந்தன் = வீரன், ஆண்மகன்; மலைதல் = அணிதல்.

கொண்டு கூட்டு: நொச்சிக் குரூஉத் தழை, முன்பு, தொடலையாகவும் கண்டனம்; இனி, மைந்தன் மலைந்தமாறு, ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப் பருந்து கொண்டு உகப்பவும் யாம் கண்டனம் எனக் கூட்டுக.

உரை: முன்பு, நீர் குறையாத நிலத்தோடு ஒன்றி நிற்கும் கரிய பூங்கொத்துக்களையுடைய, கண்ணுக்கு இனிய நிறமுடைய நொச்சியின் தழையை, மெல்லிய அணிகலன்கள் அணிந்த அழகிய, பெண்கள் தம் அகன்ற இடையில் உடையாக அணிவதைக் கண்டோம். இப்பொழுது, நொச்சி மாலையை அணிந்து, மதிலைக் காக்கும், வீரத்தை விரும்பும் ஆண்மகன் ஒருவன் வெட்டப்பட்டுக் கிடக்கிறான். அவன் அணிந்திருந்த நொச்சி மாலை துண்டிக்கப்பட்டு, அச்சம்தரும் குருதியில் கலந்து, உருமாறிக் கிடக்கிறது. அதை ஊன்துண்டு என்று கருதிப் பருந்து ஒன்று கவர்ந்துகொண்டு உயரப் பறந்து சென்றதை இப்பொழுது யாம் கண்டோம்.

 தும்பைத்திணைப்பாடல்கள் -2

(புறம் 274)  நீலக் கச்சை!

274. நீலக் கச்சை!

பாடியவர்: உலோச்சனார். உலோச்சனார் சங்க கால சமணப் புலவர்களில் ஒருவர். சங்கநூல்களில் இவரது பாடல்கள் 35 உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் மூன்று. பிற அகத்திணைப் பாடல்கள். பாடல் தொகை வரிசையில் இவருக்கு  11ஆம் இடம்


பாடலின் பின்னணி: இரு பெருவேந்தர்களுக்கிடையே போர் மூண்டது. அப்போரில், வீரன் ஒருவனை ஒரு யானை தாக்க வந்தது. அவ்வீரன், தன் வேலை யானையின் நெற்றியை நோக்கி எறிந்தான். அந்த யானை பின்நோக்கிச் சென்றது. பகைவரின் வீரர்கள் பலரும் அந்த வீரனை நோக்கி வந்தனர். அவர்கள் எறிந்த வேலைத் தடுத்து, அவர்களின் தோளைப்பற்றி நிலத்தில் மோதி, அவர்களை அந்த வீரன் கொன்றான். அவனுடைய வீரச் செயல்களைக் கண்ட புலவர் உலோச்சனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

துறை: எருமை மறம். படைவீரர் முதுகிட்ட நிலையிலும், தன் பகைப்படையை அஞ்சாது ஒருவன் எதிரிட்டு நிற்றல்.

நீலக் கச்சைப் பூவார் ஆடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து இனியே
தன்னும் துரக்குவன் போலும்; ஒன்னலர்
5
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
கையின் வாங்கித் தழீஇ
மொய்ம்பின் ஊக்கி மெய்க்கொண் டனனே.


அருஞ்சொற்பொருள்

1. கச்சை = இறுகக் கட்டிய இடுப்புடை; ஆர் = நிறைவு; பீலி = மயில் தோகை; கண்ணி = தலையில் அணியும் மாலை. 3. துரந்து = செலுத்தி; இனி = இப்பொழுது. 4. ஒன்னலர் = பகைவர். 5. பரத்தர = பரவிவர. 7. மொய்ம்பு = வலிமை; ஊக்கல் = எழுப்பல்.

உரை: நீல நிறமுடைய கச்சையையும், பூவேலைப்பாடுகள் நிறைந்த ஆடையையும், மயில் தோகையால் தொடுக்கப்பட்ட மாலையையும் உடைய பெரியோனாகிய வீரன், தன்னைக் கொல்ல வந்த யானையை நெற்றியில் வேலால் தாக்கினான். அவன், இப்பொழுது, தன் உயிரையும் கொடுத்துப் போரிடுவான் போல் தோன்றுகிறது. பகைவர் தங்கள் வலக்கரங்களில் வேலை ஏந்தி யானைகளுடன் பரவி வந்து அவன் மீது எறிந்த வேலைப் பிடுங்கி, பகைவரின் கூட்டத்தை அழித்து, அவர்களைத் தோளோடு தழுவித் தன்னுடைய உடல் வலிமையால் அவர்களை உயரத் தூக்கி, நிலத்தில் மோதி, உயிர் நீங்கிய அவர்களின் உடலைத் தூக்கிக்கொண்டு நிற்கின்றான்.

284. பெயர்புற நகுமே!

284. பெயர்புற நகுமே!

பாடியவர்: ஓரம்போகியார்(284). ஐங்குறுநூற்றில் மருதம் பற்றிய நூறு செய்யுட்களையும் இயற்றியவர் இவர். மற்றும், இவர் அகநானூற்றில் இரண்டு செய்யுட்களையும் ( 286, 316), குறுந்தொகையில் ஐந்து செய்யுட்களையும் ( 10, 70, 122, 177, 384), நற்றிணையில் இரண்டு செய்யுட்களையும்( 20, 360) இயற்றியுள்ளார். இவர் சேரமான் ஆதன் அவினி, சோழன் கடுமான் கிள்ளி, பாண்டியன், மத்தி, விராஅன் ஆகியோரைப் பாடியுள்ளார்.

பாடலின் பின்னணி: ஒருகால், ஒருவேந்தன் வீரர்கள் பலரையும் போருக்கு வருமாறு அழைத்தான். அப்போரில், வீரன் ஒருவன் சிறப்பாகப் போர் புரிந்தான். அவனுடைய வீரச் செயல்களைப் புலவர் ஓரம்போகியார் கண்டார். அவ்வீரன் ஓர் யானையைக் கொன்று வீழ்த்தினான். அவன் யானையுடன் போரிட்டதால் அவனுடைய வாள் கோணியது. அந்த வாளை இறந்த யானையின் தந்தத்தில் தீட்டிக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த பகைவரின் வீரன் ஒருவன் புறமுதுகுகாட்டி ஒடினான். அதைக் கண்ட அவ்வீரன் சிரித்தான். இக்காட்சியை இப்பாடலில் புலவர் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.

திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

துறை: பாண்பாட்டு. பெரும்போர் செய்து இறந்த வீரனுக்கு சாப்பண்னைப் பாடி ப் பாணர் தம் கடன் கழித்தலைக் கூறுதல்.

வருகதில் வல்லே வருகதில் வல்என
வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப
நூலரி மாலை சூடிக் காலின்
தமியன் வந்த மூதி லாளன்
5 அருஞ்சமம் தாங்கி முன்நின்று எறிந்த
ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய்வாள் திருத்தாத்

தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே.

அருஞ்சொற்பொருள்:

1. தில் = விழைவைக் குறிக்கும் அசைச்சொல்; வல் = விரைவு. 2. விழு = சிறந்த. 3. அரி = அறுத்தல். 5. சமம் = போர். 6. ஒருகை = யானை; மிறை = வளைவு. 7. வாய்வாள் = குறிதவறாத வாள். 8. இரிதல் = ஓடுதல்.

கொண்டு கூட்டு: இசைப்ப சூடி, வந்த மூதிலாளன் திருத்தா, நகும் எனக் கூட்டுக.

உரை: விரைந்து வருக, விரைந்து வருகஎன்று வேந்தனின் சிறந்த தூதுவர் ஆங்காங்கு சென்று தெரிவிக்க, நூலால் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடிக்கொண்டு, காலால் நடந்து தனியனாய் வந்த மறக்குடி மறவன், கடுமையான போரில் பகைவரை மேலே செல்லாதவாறு தடுத்துப் பகைவரின் யானையொன்றை வெட்டி வீழ்த்தினான். தான் வெட்டி வீழ்த்திய யானையின் தந்தத்தில் தனது வளைந்த வாளைத் தீட்டிக்கொண்டிருந்தான். அப்பொழுது பகைவரின் வீரன் ஒருவன் அவனைக்கண்டு புறமுதுகுகாட்டி ஒடினான். அதைக்கண்டு இவ்வீரன் சிரித்தான்.

சிறப்புக் குறிப்பு: இறந்த வீரனுக்குத் தம் கடன் ஆற்றுவதற்காகப் பாணர்கள் சாப்பண்ணில் யாழிசைப்பது பாண்பாட்டு. இப்பாடல், வீரன் யானையைக் கொன்று வீழ்த்தியதைப்பற்றிக் கூறுகிறது. ஆனால் இப்பாடலில் வீரன் இறந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இப்பாடல் பாண்பாட்டு என்னும் துறையைச் சார்ந்ததா என்பது ஆய்வுக்குரியது

 பொதுவியல்

(புறம் 363) உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!


 

பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்டேரையார்(363). ஐயாதி என்பது இவருடைய ஊராக இருந்திருக்கலாம். முந்தைய பாடல் இயற்றிய புலவரிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக, இவர் ஐயாதிச் சிறுவெண்டேரையார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.  இவர் இயற்றியதாக புறநானூற்றில் உள்ள ஒருபாடல் (363) மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

 

பாடப்பட்டோன்: தெரியவில்லை.

 

பாடலின் பின்னணி: உலகைத் தமதாக்கிக்கொண்டு ஆட்சி செய்த வேந்தர்களும் முடிவில் இறந்தார்கள்.  அவர்களுடைய நாட்டைப் பிறர் பெற்றுக்கொண்டனர். சாதல் என்பது உண்மை; அது பொய்யன்று.  ஆகவே, இறப்பதற்குமுன் நீ செய்ய விரும்பியதைச் செய்க.என்று புலவர் ஐயாதிச் சிறுவெண்டேரையார் ஒரு மன்னனுக்கு அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


 

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.

 

துறை: பெருங் காஞ்சி. நிலையாமையைக் கூறுதல்.

 


இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம்              5

 


நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை; வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு       10

 


வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பிலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலங்கல னாக விலங்குபலி மிசையும்      15

 


இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.

 

 

 

அருஞ்சொற்பொருள்: 1. இரு = கரிய; உடுத்த = சூழ்ந்த. 2. உடை = ஒருவகை மரம்; இடை = இடம். 3. ஏமம் = பாதுகாப்பு. 5. பதி = இடம். 7. அத்தை அசைச் சொல்; வீதல் = கெடுதல், சாதல். 9. மடங்கல் = முடிவு (சாவு); மாயம் = பொய் 10. ஏய்ந்த = பொருந்திய; புறங்காடு = சுடுகாடு, இடுகாடு. 11. வெள்ளில் =வெளியிடம்; வியல் = அகலம். 15. விலங்கு பலி = வேண்டாத உணவு; மிசைதல் = உண்ணுதல். 16. வைகல் = நாள். 17. முன்னுதல் = கருதுதல்.

 

 

 

கொண்டு கூட்டு: காவலர் பலர் மாய்ந்தனர்; அதனால் கேண்மதி; உயிரும் இல்லை; உண்மை, மாயமன்று; வாராமுன்னே துறந்து நீ முன்னிய வினையைச் செய்க எனக் கூட்டுக.

 

 

 

உரை: கரிய கடல் சூழ்ந்த பெரிய இடத்தையுடைய உலகின் நடுவே, உடைமரத்தின் இலை அளவுகூட இடத்தையும் பிறர்க்கு இல்லாமல் தாமே ஆண்டு பாதுகாத்தவர்களின் எண்ணிக்கை, கடலின் அலைகள் கொழித்தொதுக்கும் மணலின் எண்ணிக்கையைவிட  அதிகம். அத்தகைய அரசர்கள் அனைவரும் தம் நாட்டைப் பிறர் கொள்ள, சுடுகாட்டைத் தங்கள் இடமாகக் கொண்டு இறந்தனர். அதனால், நான் சொல்வதை நீ கேட்பாயாக. அழியாத உடம்போடு என்றும் உயிரோடு இருந்தவர் யாரும் இல்லை. சாதல் என்பது உண்மை; அது பொய்யன்று.  கள்ளி பரவிய முட்செடிகள் உள்ள சுடுகாட்டின் அகன்ற வெளியிடத்தில், உப்பில்லாமல் வேகவைத்த சோற்றை, பிணம் சுடும் புலையன் பிணத்தைத் திரும்பிப் பார்க்காமல், நிலத்தில் வைத்துப் படைத்த வேண்டாத உணவைப் பெற்றுக் கொண்டு, உண்ணும் கொடிய நாள் (இறக்கும் நாள்) வருவதற்கு முன்பே, கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைத் துறந்து நீ கருதியதைச் செய்க.

 

 

சிறப்புக் குறிப்பு: உடைமரத்தின் இலை மிகவும் சிறியதாகையால் அது கடல் சூழ்ந்த பெரிய உலகத்திற்கு எதிர்மறையாகக் கூறப்பட்டது. சுடுகாட்டில் ஈமத்தில் இடுமுன், புலையன் உப்பில்லாச் சோறட்டு  நிலத்தில் வைத்துப் படைத்தலும்  அதனை அவன் கையிலேந்திப் படைக்குங்கால் பின்புறம் பாராமல் படைக்கும் முறைமையும் ஈமத்திற் பண்டையோர் செய்த சடங்குகள்.என்று ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

 

(புறம் 255 ) முன்கை பற்றி நடத்தி!


பாடியவர்: வன்பரணர். வன்பரணர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். வரலாற்றுப் புலவர் என்று போற்றப்படும் வேறொரு புலவர் பரணர். இவர் அவர் அல்லர் என்பதை உணர்த்த இவரை வன்பரணர் எனக் குறிப்பிடலாயினர்.
பாடலின் பின்னணி: தலைமகன் ஒருவன் போர்க்களத்திலிருந்து திரும்பி வராததால், அவன் மனைவி போர்க்களத்திற்குச் சென்றாள். அங்கு, அவன் இறந்து கிடப்பதைக் கண்டு அழுகிறாள்.ஐயோ! என்று ஓலமிட்டு ஒலியெழுப்பினால், புலி வருமோ என்று அஞ்சுகிறேன். உன்னைத் தூக்கிகொண்டு செல்லலாம் என்றால் உன் அகன்ற மார்பு பெரிதாகையால் அது என்னால் இயலாது. ஒரு தீங்கும் செய்யாத என்னை இப்பெருந்துயரத்தில் ஆழ்த்தி நடுக்கமுறச் செய்யும் கூற்றுவன் என்னைப் போல் பெருந்துயரம் உறுவதாகுக. நீ என் கைகளைப் பற்றிக்கொண்டு மெல்ல நடந்தால், மலையின் நிழலுக்குச் செல்லலாம்.என்று அப்பெண் கூறுவதைக் கண்ட புலவர் வன்பரணர் அவளுடைய அவல நிலையை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுபாலை. காட்டில் தன் கணவனை இழந்த மனைவியின் தனிமை நிலையைக் கூறுதல்.

ஐயோ!எனின்யான் புலிஅஞ் சுவலே;
அணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கவல்லேன்;
என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே;
5
நிரைவளை முன்கை பற்றி
வரைநிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே.

அருஞ்சொற்பொருள்:
2.
அகன் = அகன்ற. 3. விதிர்ப்பு = நடுக்கம். நிரை = வரிசை. 4. இன்னாது = தீமை (சாக்காடு); கூற்ரு = கூற்றுவன் (இயமன்). 6. வரை = மலை; சேர்கம் = சேர்வோம்; சின் முன்னிலை அசைச் சொல்.

உரை:ஐயோ!என்று ஓலமிட்டு அழுதால் புலி வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இங்கிருந்து உன்னை அணைத்துக்கொண்டு செல்லலாம் என்றால் உன் அகன்ற மார்புடைய உடலை என்னால் தூக்க முடியவில்லை. உன்னை இவ்வாறு அறமற்ற முறையில் கொன்ற கூற்றுவன் என்னைப்போல் பெரிய நடுக்கமுறுவானாகுக. என்னுடைய வளையல் அணிந்த முன்கையைப் பற்றிக்கொண்டு மெல்ல நடப்பாயானல் மலையின் நிழக்குச் சென்றுவிடலாம்.

சிறப்புக் குறிப்பு: கூற்றுவன் செய்த இன்னாதுஎன்பதால், ”இன்னாதுஇங்கு சாக்காட்டைக் குறிக்கிறது.

இறந்தவனால் நடக்க இயலாது என்று தெரிந்திருந்தும், அவனைச் சிறிது தூரம் நட.என்று அவள் கூறுவது, அவள் தெளிவான சிந்தனையற்ற நிலையில் உள்ளாள் என்பதை உணர்த்துகிறது.

அலகு- 3
கைக்கிளை  -1

(புறம் 84)  புற்கையும் பெருந்தோளும்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். நக்கண்ணன் என்னும் ஆண்பாற் பெயரைப் போல் நக்கண்ணை என்பது பெண்பாற் பெயராகும். கோழி என்பது உறையூருக்கு மற்றொரு பெயர். நாய்கன் என்ற சொல்லுக்கு வணிகன் என்று பொருள். ஆகவே, இப்பாடலை இயற்றிய நக்கண்ணையார் என்பவர் உறையூரைச் சார்ந்த வணிக குலத்தில் இருந்த ஒருவரின் மகள். இவர் புறநானூற்றில் மூன்று பாடல்களையும் (பாடல்கள் 83, 84 மற்றும் 85), அகநானூற்றில் 252-ஆம் பாடலையும் நற்றிணையில் 19, 87 ஆம் பாடல்களையும் இயற்றியவர்.
பாடப்பட்டோன் : சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி. இச்சோழனைப்பற்றிய செய்திகளை 80-ஆம் பாடலில் காண்க.

பாடலின் பின்னணி: நக்கண்ணையார் நற்கிள்ளி இருந்த இடத்திற்கு அருகில் இருந்த போதிலும் அவனோடு நெருங்கிப் பழகவோ அல்லது திருமணம் செய்துகொள்ளவோ வாய்ப்பில்லை. ஆனால், அவர் அவன் மீது கொண்ட காதல் குறையவில்லை. அவர் என் தலைவன். தன் நாட்டை விட்டு இங்கு வந்து நல்ல உணவு கூட இல்லாமல் இருந்தாலும் வலிமை குன்றாமல் உள்ளான். அவன் அருகிலேயே நான் இருந்தாலும் அவனை அடைய முடியாத காரணத்தால் நான் பசலை நோயால் வருந்துகிறேன். அவன் போர்க்களம் புகுந்தால் ஏற்றமும் இறக்கமும் உள்ள வழியில் உப்பு விற்போர் படாத பாடு படுவதைப் போல் வீரர்களை வருத்துகிறான்.என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: கைக்கிளை. ஒருதலைக் காதலைப்பற்றிய பாடல்கள் கைக்கிளை என்ற திணையில் அடங்கும்.
துறை: பழிச்சுதல். தலைவனைப் போற்றும் பாடல்கள் பழிச்சுதல் என்னும் துறையைச் சாரும்.

என்ஐ, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போரெதிர்ந்து என்ஐ போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்
5
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன் னன்னே!

அருஞ்சொற்பொருள்:
1. ஐ = தலைவன்; புற்கை = கஞ்சி, கூழ். 2. புறஞ்சிறை = அருகில், வேலிப்புறம். 5. ஏம் = மயக்கம், செருக்கு. 6. உமணர் = உப்பு விற்பவர்; வெருவுதல் = அஞ்சுதல்; துறை = வழி.

கொண்டு கூட்டு: என் ஐ பெருந்தோளன்னே; யாம் பொன்னன்னம்மே; போர்க்களம் புகினே, உமணர் வெரூஉம் துறை அன்னன்னே.

உரை: என் தலைவன், கூழ் போன்ற உணவை உண்டும் பெரிய தோளை உடையனாக உள்ளான். நான் அவன் இருக்கும் இடத்திற்கு அருகிலிருந்தும் (அவனோடு கூட முடியாமையால்) பசலையால் பொன்னிறமானேன். போரை ஏற்று என் தலைவன் போர்க்களத்தில் புகுந்தால், ஒலிமிக்க விழாக்கோலம் கொண்ட இவ்வூரில், செருக்குடன் போருக்கு வரும் வீரர்களின் நிலைமை, உப்பு விற்கப் போகும் உமணர்கள் தாங்கள் செல்லும் கடினமான வழியை நினைத்து அஞ்சுவார்களே, அதே நிலைமைதான்.

பெருந்திணைப்பாடல் -1

147. எம் பரிசில்!

பாடியவர்: பெருங்குன்றூர்க் கிழார் (147, 210, 211, 318). வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவியைத் துறந்து வாழ்வதைக் கேள்வியுற்று அவனுக்கு அறிவுரை கூறிய புலவர்களில் பெருங்குன்றூர்க் கிழார் என்பவரும் ஒருவர். இவர் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பாடிப் பரிசில் பெற்றவர். பின்னர் குடக்கோப் பெருஞ்சேரல் இரும்பொறையக் கண்டு தம் வறுமையை எடுத்துரைத்தார். ஆனால், குடக்கோப் பெருஞ்சேரல் இரும்பொறை இவருக்குப் பரிசு எதுவும் அளிக்கவில்லை. அதனால் வருத்தமுற்ற பெருங்குன்றூர்க் கிழார் குடக்கோப் பெருஞ்சேரல் இரும்பொறையின் தம்பியாகிய இளஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்றார். அவன், இவரை நன்கு வரவேற்றுச் சிறப்பித்தான். இவர் அவனைப் புகழ்ந்து பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தைப் பாடினார். அதனால் பெருமகிழ்ச்சியுற்ற இளஞ்சேரல் இரும்பொறை இவர்க்கு முப்பத்தீராயிரம் பொற்காசுகளைக் கொடுத்துச் சிறப்பித்தான்.

பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தைப் பாடியது மட்டுமல்லாமல், இவர் அகநானூற்றில் 8-ஆம் செய்யுளும், குறுந்தொகையில் 338 - ஆம் செய்யுளும், நற்றிணையில் நான்கு செய்ய்ட்களும் ( (5, 112, 119, 347), புறநானூற்றில் நான்கு செய்யுட்களும் (147, 210, 211, 318) இயற்ரியுள்ளார். இவர் சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடையரனார், நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரர், கபிலர், பரணர் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் வாழந்தவராகக் கருதப்படுகிறார்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.

பாடலின் பின்னணி: இப்பாடலை ஒரு பாணனின் கூற்று போல் பெருங்குன்றூர்க் கிழார் பாடியுள்ளார். பாணன் ஒருவன், “ நேற்று நாங்கள் செவ்வழிப் பண்னை இசைத்தோம். அதைக் கேட்டு ஒரு பெண் தனியளாக, கண்ணீரும் கம்பலையுமாக இருந்தாள். அவள் முடியில் பூச் சூடவில்லை. அவள் உன் மனைவி என்று தெரிந்து கொண்டோம. அவள் தன் கூந்தலில் பூச்சூடி மகிழுமாறு நீ அருளுதல் வேண்டும். ஆவியர் குடியில் தோன்றிய பேகனே! அதுவே நீ எமக்கு அளிக்கும் பரிசில்என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
திணை: பெருந்திணை. பொருந்தாத காமநிலையை பற்றிக் கூறுவது பெருந்திணையாகும்.
துறை: குறுங்கலி. மனை ஒழுக்கம் தவறியவருக்கு அறிவுரை கூறி அவரை அவ்வொழுக்கத்தில் நிற்கச் செய்தல் குறுங்கலி எனப்படும்.

கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்
கார்வான் இன்னுறை தமியள் கேளா
நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்
5
அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்
மண்ணுறு மணியின் மாசுஅற மண்ணிப்
புதுமலர் கஞல, இன்று பெயரின்
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!

அருஞ்சொற்பொருள்:
1.
முழை = குகை; நீந்தி = கடந்து. 2. செவ்வழி = மாலை நேரத்திற்குரிய பண். 3. கார் = கார் காலம் (ஆவணி, புரட்டாசி); உறை = மழைத்துளி; தமி = தனிமை. 4. சிறை = பக்கம்; புலம்பு = வருத்தம். 5. அரி = செவ்வரி (கண்வரி); மதர் = செருக்கு; அம் = அழகு; மா = நிறம்; அரிவை = பெண். 7. மண்னுதல் = கழுவுதல். 8. கஞல = விளங்க; பெயரின் = செல்லின்.

கொண்டு கூட்டு: ஆவியர் கோவே! புலம்புகொண்டு உறையும் அரிவை கூந்தல் புது மலர் கஞல, இன்று பெயரின் அதுஎம் பரிசில் எனக் கூட்டுக.

உரை: ஆவியர் கோவே! கற்குகைகளிலிருந்து விழும் அருவிகளுடைய பலமலைகளைக் கடந்து, வரும் வழியில் சிறிய யாழால் மாலை நேரத்திற்குரிய செவ்வழிப் பண்ணை இசைத்து வந்தோம். நேற்று நாங்கள் வந்த பொழுது, கார் காலத்தில் வானத்திலிருந்து விழும் இனிய மழைத்துளிகளின் ஓசையைத் தனித்திருந்து கேட்டு ஒரு பெண் ஒரு பக்கத்தில் இருந்து வருந்திக்கொண்டு இருந்தாள். (அவள் உன் மனைவி என்று தெரிந்து கொண்டோம்). அவள் கண்கள் செவ்வரியுடனும் செருக்குடனும் கண்ணீர் மல்கி இருந்தது. அழகிய நிறமுள்ள அப்பெண்னின் நெய் தடவப்படாத கரிய கூந்தலை கழுவப்பட்ட நீல மணி போல் மாசு இல்லாமல் கழுவிப் புதுமலர் பொலியச் செய்வதற்கு இன்றே நீ புறப்பட்டால், அதுவே எம் பரிசு.

 

 

பாடாண்திணை

378. எஞ்சா மரபின் வஞ்சி!

 

378. எஞ்சா மரபின் வஞ்சி!


பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 10-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 370-இல் காண்க.
பாடலின் பின்னணி: பெரிய சுற்றத்துடன் கூடிய பாணன் ஒருவன் வறுமையில் இருந்தான். அவன் இளஞ்சேட்சென்னியின் அரண்மனையை அடைந்து, அதன் முன்னே நின்று, கிணைப்பறையைக் கொட்டி வஞ்சித்துறைப் பாடல்களைப் பாடினான். அவனைக் கண்டவுடன், இளஞ்சேட்சென்னி, அப்பாணனுக்கும் அவன் சுற்றத்தாருக்கும் பல அரிய அணிகலன்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் பரிசாக அளித்தான். அதுபோன்ற அணிகலன்களை முன்னர்க் கண்டிராத பாணனின் சுற்றத்தார், விரலில் அணிபவற்றைக் காதிலும், காதில் அணிபவற்றை விரல்களிலும், இடையில் அணிபவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணிபவற்றை இடையிலும் மாற்றி அணிந்து கொண்டனர். அந்தக் காட்சி, இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் பொழுது, சீதை கழற்றி எறிந்த நகைகள் நிலத்தில் விழுந்தவுடன், அவறைக் குரங்குகள் தாறுமாறாக அணிந்து கொண்டதைக் கண்டவர்கள் நகைத்து மகிழ்ந்ததைப் பாணனுக்கு நினைவூட்டியது. அதுபோல், பாணனும் தன் சுற்றத்தாரின் செயல்களைக் கண்டு நகைத்து மகிழ்ந்தான்.   அந்தக் காட்சியைப் புலவர் ஊன்பொதி பசுங்குடையார் இப்பாடாலாக இயற்றியுள்ளார்.

 

திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.

துறை: இயன் மொழி. அரசனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.


தென்பரதவர் மிடல்சாய
வடவடுகர் வாள்ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்
நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்             5


புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்றுஎன்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல மிகப்பல                         10


மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அதுகண்டு
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும் 15


அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
.
நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்                  20


செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு         

அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.


அருஞ்சொற்பொருள்: 1. பரதவர் = தெற்குத்திசையிலிருந்து வந்து குறும்பு செய்தவர்; மிடல் = வலிமை. 2. வடுகர் = வட நாட்டிலிருந்து வந்து குறும்பு செய்தவர். 4. கடு = விரைவு; கடைஇய = செலுத்திய; பரிவடிம்பு = குதிரையச் செலுத்துவோர் அணியும் காலணி. 5. கோயில் = அரண்மனை. 6. சுதை = சுண்ணாம்பு. 7. கயம் = நீர்நிலை; நகர் = மனை ( வீடு). 8. அரி = மென்மை; இரிதல் = கெடுதல் (கிழிதல்); ஒற்றி = கொட்டி. 9. எஞ்சா = குன்றாத ( குறையாத); வஞ்சி பாட= வஞ்சித்துறைப் பாடல்களைப் பாட 10. வெறுக்கை = பொன், செல்வம் (அணிகலன்கள்). 13. இலம்பாடு = வறுமை; உழந்த = வருந்திய; இரு = பெரிய; ஒக்கல் = சுற்றம். 14. தொடக்கு = கட்டு. 16. அரை = இடை; மிடறு = கழுத்து. 18. தெறல் = அழித்தல். 19. வெளவுதல் = பற்றிக் கொள்ளுதல், கவர்தல்; ஞான்று = காலம், நாள். 20 . மதர் = அழகிய. 22. அறாஅ = நீங்காத. 23. இரு = பெரிய; கிளை = சுற்றம். 24. படர்தல் = நினைத்தல்; எவ்வம் = துன்பம்.

 

கொண்டு கூட்டு: சோழன் கோயில் நீணகர் நின்று, ஒற்றி, பாட, பொழிதந்தோன்; ஒக்கல் அதுகண்டு தொடக்குநரும், செறிக்குநரும், யாக்குநரும், யாக்குநருமாய், கிளை பொலிந்தாங்கு, தலைமையெய்தி உழந்ததன்தலை அருநகை இனிது பெற்றிகும் எனக் கூட்டுக.

 

உரை: சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி, தெற்கிலிருந்து வந்து குறும்பு செய்த பரதவரின் வலிமையை ஒழித்தது மட்டுமல்லாமல் வடக்கிலிருந்து வந்து குறும்பு செய்த வடுகரின் வாட்படையையும் அழித்தவன். தொடுக்கப்பட்ட கண்ணியையும், நன்கு செய்யப்பட்ட வேலை ஏந்திய பெரிய கையையும், விரைந்து செல்லும் குதிரையைச் செலுத்துவதற்காக பரிவடிம்பு என்னும் காலணியையும், நல்ல மாலையையும், கள்ளையும் உடைய இளஞ்சேட்சென்னியின் அரண்மனையில் புதிதாக எழுந்த பிறைபோன்ற, வெண்ணிறச் சுண்ணாம்பு பூசப்பட்ட மாடம் இருந்தது. அவனுடைய அரண்மனை பெரிய, குளிர்ந்த நீர்நிலை போல் குளிர்ச்சி பொருந்தியதாக இருந்தது. அந்த நெடுமனையின் முன்னே நின்று, நுண்ணிய ஓசையையுடைய பெரிய கிணைப் பறை கிழியுமாறு கொட்டி, பகைமேற் செல்லும்போது பாடும் வஞ்சித்துறைப் பாடல்களை மரபு தவறாமல் பாடினேன். எம்மைப் போன்ற பரிசிலர்க்குக் கொடுப்பதற்காகச் செய்யப்படாத, மிகப்பல, மேன்மையான, அரிய அணிகலன்களையும் பிற செல்வங்களையும் பெருமளவில் இளஞ்சேட்சென்னி எனக்கும் என் சுற்றத்தாருக்கும் தாங்க முடியாத அளவுக்கு வழங்கினான். வறுமையால் வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார், அவன் வழங்கிய பொருள்களை எல்லாம் கண்டவுடன் அவற்றை ஆர்வத்தோடு எடுத்து, விரல்களில் அணிவனவற்றைக் காதிலும், காதில் அணிவனவற்றைக் விரல்களிலும், இடையில் அணியவேண்டியவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியவற்றைக் இடையிலும் அணிந்து கொண்டனர்.  மிகுந்த வலிமையுடைய இராமனுடன் கூடியிருந்த சீதையை, வலிய அரக்கன் கவர்ந்துகொண்டு செல்லும்பொழுது, சீதை கழற்றி எறிந்த நகைகள் நிலத்தே விழுந்தவுடன் அந்த நகைகளைக் கண்டெடுத்த, சிவந்த முகமுடைய குரங்குகளின் கூட்டம் அவற்றைத் தாறுமாறாக அணிந்ததைக் கண்டோர் நகைத்து மகிழ்ந்தனர். அதுபோல், பெரிய சுற்றத்திற்குத் தலைமை தாங்கி, அவர்களின் வறுமையைக் களையும் நேரத்தில், பல அரிய எண்ணங்களினால் உண்டாகிய துன்பம் நீங்குமாறு, நாங்களும் அரிய மகிழ்ச்சியை மிகவும் அடைந்தோம். 

ன்ற கருத்தும் இப்பாடலில் தொக்கி நிற்கிறது என்பது குறிப்பிடத் தக்கது

இரண்டாம்பத்து பதிற்றுப்பத்து ( முதல் 5 பாடல்கள் மட்டும்)

அலகு -4

வாகைத்திணைப்பாடல்கள் - மறக்களவழி – களவழி நாற்பது 21 முதல் – 41 வரை (இருபது பாடல்கள்)

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும்.களவழி நாற்பது பாடியவர் பொய்கையார் என்பவராவர். சங்ககாலப் புலவர். இவரது மூன்று பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவை: நற்றிணை 18, புறநானூறு 48, 49 ஆகியவை.

சேரமான் கணைக்கால் இரும்பொறை. இம்மன்னன் இரும்பொறை மரபைச் சார்ந்தவன். கணைய மரத்தைப் போன்ற வலிய கால்களை உடையவன் என்ற காரணத்தால் இவன் இப்பெயரைப் பெற்றதாகச் சிலர் கருதுகின்றனர்1. இரும்பொறைப் பரம்பரையில் கடைசியாக ஆட்சி புரிந்த சேர மன்னர்களுள் இவனும் ஒருவன் என்றும் இவன் ஆட்சிக் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர் சுப்பிரமணியன் கூறுகிறார்2.

 

இணை வேல் எழில் மார்வத்து இங்க, புண் கூர்ந்து,
கணை அலைக்கு ஒல்கிய யானை, துணை இலவாய்,
தொல் வலியின் தீரா, துளங்கினவாய், மெல்ல
நிலம் கால் கவவு மலை போன்ற - செங் கண்
சின மால் பொருத களத்து.

21



சோழன் சிவந்த கண்களை உடைய திருமால் போன்று போரிட்ட களத்தில், யானைகளின் கழுத்துக்குக் கீழ் மார்புப் பகுதிகளில் ஒரே அளவான வேல்கள் பாய்ந்து புண்களை உண்டாக்கின. அதற்கு முன் தைத்த அம்புகள் வலியை ஏற்படுத்தின. இந்த நிலையில் பாகர்கள் துணையில்லாமல் வலியைப் பொறுத்துக்கொண்டு உடல் நடுங்கச் சோர்வோடு நின்ற யானைகள் நிலையாக நிலங்களில் இடம்பெற்ற மலைகள் போன்று இருந்தன.

இரு நிலம் சேர்ந்த குடைக் கீழ், வரி நுதல்
ஆடு இயல் யானைத் தடக் கை ஒளிறு வாள்
ஓடா மறவர் துணிப்ப, துணிந்தவை
கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே-
கூடாரை அட்ட களத்து.

22



சோழன் பகைவர்களை வென்ற களத்தில், புறங்காட்டி ஓடாத வீரர்கள், கூரிய வாளால் எப்போதும் அசைந்து கொண்டிருக்கும் தலையைக் கொண்ட யானைகளின் துதிக்கைகளை வெட்டினர். அவை (துதிக்கை) தரையில் வீழ்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடைக்கு அருகே வீழ்ந்து கிடந்தன. அக்காட்சி கதிர்நிறைந்த ஒளிவீசும் நிலவைத் தொட்டுச் சுவைக்கும் பாம்பைப் போன்றிருந்தது.

எற்றி வயவர் எறிய, நுதல் பிளந்து
நெய்த் தோர்ப் புனலுள் நிவந்த களிற்று உடம்பு,
செக்கர் கொள் வானில் கருங் கொண்மூப் போன்றவே-
கொற்ற வேல் தானை, கொடித் திண் தேர், செம்பியன்
செற்றாரை அட்ட களத்து.

23



வீரம் பொருந்திய செம்பியன் (சோழன்) தன்னோடு பொருந்தாதவர்களை வென்ற போர்க்களத்தில், வீரர்களின் போர்க்கருவிகள் வீசப்பெற்று, அதனால் பிளவுபட்ட நெற்றியிலிருந்து ஒழுகிய இரத்த நீரில் குளித்தெழுந்த யானைகளின் உடம்புகள், மாலை நேரச் சிவந்த வானில் திட்டுத் திட்டாகப் படர்ந்த மேகம் போல் இருந்தன.

திண் தோள் மறவர் எறிய, திசைதோறும்
பைந் தலை பாரில் புரள்பவை, நன்கு எனைத்தும்
பெண்ணைஅம் தோட்டம் பெரு வளி புக்கற்றே-
கண் ஆர் கமழ் தெரியல், காவிரி, நீர் நாடன்
நண்ணாரை அட்ட களத்து.

24



சோழன் தன்னோடு சேராத பகைவர்களை வென்ற களத்தில், வீரர்கள் எல்லாத் திசைகளிலும் வாளை வீசியதால் வெட்டுப்பட்ட புதிய தலைகள் போர்க்களத்தில் நிறைந்து கிடந்தன. அக்காட்சி, புயல் வீச்சால் தாக்கப்பட்டுக் கரிய காய்கள் எல்லாம் சிதறி விழுந்த பனந்தோப்பாகத் தெரிந்தது.

மலை கலங்கப் பாயும் மலை போல் நிலை கொள்ளாக்
குஞ்சரம் பாய, கொடி எழுந்து, பொங்குபு
வானம் துடைப்பன போன்ற - புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.

25



சோழ மன்னன் பகைவரை அழித்த போர்க்களத்தில் மலைகள் நடுங்க மலைகள் வந்து மோதுவன போல யானைகள் யானைகளுடன் மோதின. அப்போது யானைகள் மீது கட்டப்பட்டிருந்த கொடிகள், வானத்தில் பட்ட இரத்தக் கறைகளைத் துடைப்பன போல் நிமிர்ந்து பறந்து ஆடின.

 

எவ் வாயும் ஓடி, வயவர் துணித்திட்ட
கை வாயில் கொண்டு எழுந்த செஞ் செவிப் புன் சேவல்
ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும்
செவ் வாய் உவணத்தின் தோன்றும் - புனல் நாடன்
தெவ்வாரை அட்ட களத்து.

26



சோழ வீரர்கள் போரில் எதிரிகளின் கைகளைத் துண்டாக்கிக் கீழே விழச் செய்தனர். சிவந்த காதுகளை உடைய ஆண் கழுகுகள் அவற்றைத் தூக்கிக் கொண்டு வானில் பறந்தன. அக்காட்சி பாம்பினை வாயில் தூக்கிச் சென்ற கருடன் வானில் பறப்பது போல் தோன்றியது.

செஞ் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால்,
ஒண் செங் குருதி தொகுபு ஈண்டி நின்றவை,
பூ நீர் வியல் மிடாப் போன்ற - புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.

27



சோழ மன்னன் தன்னை அடையாதவர்களை (பகைவர்களை) வென்ற களத்தில், இரத்தச் சேற்றில் முன்னும் பின்னுமாக நடந்து யானைகள் கோபத்தினால் மிதித்தலால் உண்டான குழிகளில் வீரர்களின் சிவந்த கண்களோடு புதிய இரத்தமானது திரண்டு தேங்கியது. அது சிவந்த மலர்களைக் கொண்ட நீரினைக் கொண்ட அகன்ற சால்களைப் போன்று இருந்தது.

ஓடா மறவர் உருத்து, மதம் செருக்கி,
பீடுடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள்,
கேடகத்தோடு அற்ற தடக் கை கொண்டு ஓடி,
இகலன் வாய்த் துற்றிய தோற்றம், அயலார்க்குக்
கண்ணாடி காண்பாரின் தோன்றும் - புனல் நாடன்
நண்ணாரை அட்ட களத்து.

28



சோழன் பகைவர்களை வென்ற களத்தில், பெருமிதத்தோடு போரிட்ட போர்க்களத்தில் வீரர்கள் பகைவர்தம் கைகளை ஏந்திய கேடயத்தோடு அறுபட்டு வீழுமாறு வெட்டினர். அக்கைகளை நரிகள் கவ்விக் கொண்டு ஓடின. அந்தத் தோற்றம் தம் முகங்களைக் கண்ணாடியில் கண்டு மகிழும் மனிதர்களைப் போல அந்நரிகள் பக்கத்தில் நிற்பவர்களுக்குக் காட்சி தந்தன.

கடி காவில் காற்று உற்று எறிய, வெடி பட்டு,
வீற்று வீற்று ஓடும் மயல் இனம்போல், நால் திசையும்
கேளிர் இழந்தார் அலமருப - செங் கண்
சின மால் பொருத களத்து.

29



சோழன் சினம் கொண்ட திருமால் போன்று போரிட்ட களத்தில், காற்று கடுமையாக வீசியதால் சோலையில் இருந்த மயில் கூட்டம் பயந்து ஒவ்வொரு திசை நோக்கி ஓடுவது போல, போரில் இறந்துபட்ட வீரர்களின் மனைவிமார்கள் தம் கணவரின் உடல்களைத் தேடி நான்கு திசைகளிலும் ஓடி அலைந்தனர்.

மடங்க எறிந்து மலை உருட்டும் நீர்போல்,
தடங் கொண்ட ஒண் குருதி கொல் களிறு ஈர்க்கும்-
மடங்கா மற மொய்ம்பின், செங் கண், சின மால்
அடங்காரை அட்ட களத்து.

30



சோழன், அடங்காத வீரர்களைச் சிவந்த கண்களை உடைய திருமால் போன்று போரிட்ட போர்க்களத்தில் பொங்கி ஓடும் இரத்த வெள்ளமானது கொல்லப்பட்ட யானைகளின் உடல்களை இழுத்துக்கொண்டு செல்வது, மலைகளோடு மலைகள் மோதுமாறு மலைகளைத் தூக்கி எறிந்தும் உருட்டியும் இழுத்துக் கொண்டு ஓடும் வெள்ளம் போல் இருந்தது.

ஓடா மறவர் எறிய, நுதல் பிளந்த
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை
மின்னுக் கொடியின் மிளிரும் - புனல் நாடன்
ஒன்னாரை அட்ட களத்து.

31



சோழன் பகைவர்களை வென்ற களத்தில், வீரர்கள் வீசிய வேல்பட்டு யானையின் நெற்றி பிளக்கப்படுகிறது. அதனால் கொல்லப்பட்ட யானையின் மத்தகத்தில் கட்டப்பெற்ற அழகிய ஓடை என்னும் பட்டமானது தெறித்து விழும்போது 'பளிச்' என்ற ஒளியோடு வீழ்கிறது. அக்காட்சி மின்னல் கயிற்றில் பறக்கும் கொடி போல் இருந்தது.

மை இல் மா மேனி நிலம் என்னும் நல்லவள்
செய்யது போர்த்தாள்போல் செவ்வந்தாள் - பொய் தீர்ந்த
பூந் தார், முரசின், பொரு புனல், நீர் நாடன்
காய்ந்தாரை அட்ட களத்து.

32



சோழன் பகைவர்களை அழித்த போர்க்களத்தில், குற்றம் இல்லாத உடலைப் பெற்ற நிலம் என்னும் நன்மைகள் தரும் பெண்ணானவள் சிவந்த நிறமுள்ள போர்வையை விரும்பிப் போர்த்திக் கொள்வதைப் போல வீரர்கள் சிந்திய இரத்தம் எங்கும் பரவியது.

பொய்கை உடைந்து புனல் பாய்ந்த வாய் எல்லாம்,
நெய்தல் இடை இடை வாளை பிறழ்வனபோல்
ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளி வாள் தாயினவே-
கொய் சுவல் மாவின், கொடித் திண் தேர், செம்பியன்
தெவ்வரை அட்ட களத்து.

33



வலிமையான குதிரை பூட்டிய கொடி பொருந்திய திண்மையான தேரினை உடைய சோழன் போரிட்ட களத்தில், கரையை உடைத்துக் கொண்டு வெளியேறும் பொய்கை நீர் வெள்ளத்தில் நெய்தல் பூக்களுக்கு நடுவே வாளைமீன் அசைந்து புரள்வது போல், போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்த வெள்ளத்தில் மிதக்கும் வேலின் தலைப்பகுதிகளுக்கு நடுவே வாள்கள் மிதந்து சென்றன.

இடரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர்
சுடர் இலங்கு எஃகம் எறிய, சோர்ந்து உக்க
குடர் கொடு வாங்கும் குறு நரி, கந்தில்
தொடரொடு கோள் நாய் புரையும் - அடர் பைம் பூண்
சேய் பொருது அட்ட களத்து.

34



அழகிய அணிகலனை அணிந்த சோழ மன்னன் போரிட்டு வென்ற போர்க்களத்தில் சோழ வீரர்களின் வேல்கள் பகைவர்கள் மீது பட்டன. பகைவர்கள் குடல் சரிந்து கிடக்கிறார்கள். சரிந்த குடல்களைக் கவ்விக் கொண்ட குள்ள நரிகள் அவற்றை இழுக்கின்றன. அச்செயல் தூணில் கட்டப்பெற்ற நாய்கள் சங்கிலியை இழுக்கும் செயலாக உள்ளது.

செவ் வரைச் சென்னி அரிமானோடு அவ் வரை
ஒல்கி உருமிற்கு உடைந்தற்றால் - மல்கிக்
கரை கொன்று இழிதரும் காவிரி நாடன்
உரை சால் உடம்பிடி மூழ்க, அரசோடு
அரசுஉவா வீழ்ந்த களத்து.

35



சோழ வேந்தனின் வேல்கள் பாய்ந்தமையால் எதிர்த்த அரசனும் வீழ்கிறான். அவன் ஏறி வந்த பட்டத்து யானையும் வீழ்கிறது. அக்காட்சியானது சிவந்த மலை மீது இடி வீழ்ந்தமையால் மலையோடு சிங்கமும் சிதறுண்டு கிடக்கும் காட்சி போல் உள்ளது.

ஓஒ உவமன் உறழ்வு இன்றி ஒத்ததே,-
காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள்,
மா உதைப்ப, மாற்றார் குடை எலாம் கீழ் மேலாய்,
ஆ உதை காளாம்பி போன்ற, - புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.

36



சோழன் போரிட்ட போர்க்களமானது ஒப்பிட முடியாத காட்சி உடையதாக இருந்தது. சோழன் பகைவரை வீழ்த்திய போரில் குதிரைப் படையால் உதைக்கப்பட்டமையால் வெண்கொற்றக் குடைகள் தரைமேல் கிடக்கின்றன. அக்காட்சி பசுக்களின் கால்களால் இடறப்பட்ட காளான்கள் கீழ் மேலாகச் சிதறிக் கிடப்பது போல் உள்ளது.

அரசர் பிணம் கான்ற நெய்த்தோர், முரசொடு
முத்துடைக் கோட்ட களிறு ஈர்ப்ப, எத் திசையும்
பெளவம் புணர் அம்பி போன்ற - புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து.

37



சோழன் பகைவரை அழித்த போர்க்களத்தில் வீழ்த்தப்பட்ட அரசர்களின் பிணங்கள் வடித்த இரத்தமானது முரசுகளையும் முத்துகளைக் கொண்ட தந்தங்களை உடைய யானைகளையும் இழுத்துச் செல்கிறது. அது கடல் அலைகளால் இழுத்துச் செல்லப் பெறும் சிறியதும், பெரிதுமான தோணிகளைப் போல இருந்தது.

பருமப் பணை எருத்தின் பல் யானை புண் கூர்ந்து
உரும் எறி பாம்பின் புரளும் - செரு மொய்ம்பின்,
பொன் ஆர மார்பின், புனை கழற் கால், செம்பியன்
துன்னாரை அட்ட களத்து.

38



பொன்னால் ஆகிய மாலையினையும், கழலினையும் அணிந்து பகைவர்களை வென்ற போர்க்களத்தில் புண்பட்ட பருத்த உடலையும் கழுத்தையும் உடைய யானைகள் வலி தாங்க முடியாமல் தவிக்கும். இடியின் ஒலியைக் கேட்டுப் பாம்புகள் உருள்வன போல இருபக்கங்களிலும் புரண்டு துடிக்கும்.

மைந்து கால் யாத்து மயங்கிய ஞாட்பினுள்,
புய்ந்து கால் போகிப் புலால் முகந்த வெண்குடை
பஞ்சி பெய் தாலமே போன்ற - புனல் நாடன்
வஞ்சிக்கோ அட்ட களத்து.

39



சோழ மன்னன் வெற்றி பெற்ற போர்க்களத்தில், எதிரி வீரர்கள் கைதிகளாக விலங்கிட்டு அடங்க வைத்த போரில், காம்புகள் முறிபட்ட வெண்கொற்றக் குடைகள், இரத்தம் கசியும் தசைகள் நிறைந்து காட்சியளித்தன. அக்காட்சி செம்பஞ்சுக் குழம்பு நிறைந்துள்ள அகன்ற பெரிய தொட்டிகள் போல இருந்தது.

வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உடுவன போல்,
எல்லாக் களிறும் நிலம் சேர்ந்த - பல் வேல்,
பணை முழங்கு போர்த் தானைச் செங் கண் சின மால்
கணை மாரி பெய்த களத்து.

40



சிவந்த கண்களை உடைய பாண்டியன் மழை போல் அம்புகள் பெய்த போர்க்களத்தில், காயம்பட்ட யானைகள் தந்தங்களோடு கூடிய முகங்களைத் தரைமேல் சாய்த்துக் கிடந்தன. அக்காட்சி உழவர்கள், வெள்ளியால் செய்யப் பெற்ற வெண்மைநிறக் கலப்பைகளைக் கொண்டு நிலத்தை உழுவது போல் தோன்றியது.

வேல் நிறத்து இங்க, வயவரால் ஏறுண்டு
கால் நிலை கொள்ளாக் கலங்கி, செவி சாய்த்து,
மா, நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே-
பாடு ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன்
கூடாரை அட்ட களத்து.

41



அருவி பாயும் நீர் நாடன் இடி முரசு போன்று கொடியவர்களை வென்ற போர்க்களத்தில், வேல்களால் மார்பில் குத்தப்பட்டுத் தளர்ந்துபோன யானைகள் கலக்கம் அடைந்து ஒரு பக்கக் காதுகள் நிலத்தில் படும்படியாகச் சாய்ந்தன. அக்காட்சி, நிலமகள் கூறும் அறக்கருத்துகளை யானைகள் பணிவோடு கேட்கும் நிலைபோல் தோன்றியது.

அலகு -5  சிறுபாணாற்றுப்படை முழுவதும். (269 அடிகள்)

 

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்களும் பத்துப்பாட்டு நூல்கள். தித்திக்கின்ற பத்துப்பாட்டு நூல்கள் வரிசையில் மூன்றாவது நூலாக இடம் பெற்றிருப்பது சிறுபாணாற்றுப்படை என்னும் சீர்சால் நூலாகும். இந்நூலை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், ஓய்மானாட்டுச் சிற்றரசன் நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, 269 அடிகளால் ஆன ஆசிரியப்பாவால் அழகுறப் புனைந்துள்ளார்.

 

ஆற்றுப்படை நூலின் அமைப்பு முறை

 

வள்ளல் ஒருவனிடம் பரிசில் பெற்று வரும் ஒருவன், தன் எதிர்ப்பட்ட வேறு ஒருவனிடம் தான் பரிசில் பெற்று வரும் தலைவனின் கொடைச்சிறப்பினை எடுத்துக் கூறி, அந்தத் தலைவனிடம் நீயும் சென்றால் என்னைப் போலவே பரிசு பெற்று வரலாம் எனக் கூறி அந்த வள்ளல் இருப்பிடத்தை அடைவதற்குரிய வழியையும் விளக்கிக் கூறி அனுப்பி வைத்தல் ஆற்றுப்படை நூலின் அமைப்பாகும். ஆறு வழி படை - படுத்துதல். வழிப்படுத்தி அனுப்புதல் என்பது இதன் பொருளாகும்.

 

 

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்

 

- என்னும் தொல்காப்பிய நூற்பாவின் மூலம், கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகியவர் அவ்வாறு நெறிப் படுத்துதற்குரிநோர் என்பதையும் அறிய முடிகிறது.

 பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நூல்

 

வேனிற்காலம்

 

மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச்
செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக்
கொல்கரை நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக்

5

கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற
லயிலுருப் பனைய வாகி யைதுநடந்து
வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
வேனி னின்ற வெம்பத வழிநாட்
காலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப்

10

பாலை நின்ற பாலை நெடுவழிச்



வேனில் காலத்தில் காலை நேரத்தில் இளவெயில் காயும்போது பாலை நிலத்தில் சிறுபாணன் தன் சுற்றத்தாருடன் சென்றான். மாநில மடந்தைக்கு முலை மலை. ஆறு அவளது மார்பில் தொங்கும் ஆரம். ஆற்றங்கரையை உடைத்துக்கொண்டு நெடுந்தொலைவிலிருந்து வரும் காட்டாறு துன்புற்றுக் கொண்டிருந்தது. அதாவது நீர் இல்லாமல் வறண்டு போயிருந்தது. அந்த ஆற்றின் மணல் படிவுகள் நிலமடந்தைக்குக் கூந்தல். ஆற்றங்கரை மலர்ச் சோலைகளில் பூத்திருக்கும் மலர்களைக் குயில்கள் குடைந்து உண்ணும்போது உதிர்க்கும் பூக்கள் ஆற்றின் அறல் மணலைப் போர்த்திக் கிடந்தன. அந்தப் போர்வை மகளிர் இடுப்பில் அணியும் காழகம் ( = பாவாடை ) போல் சுருக்கம் சுருக்கமாகக் காணப்பட்டது. ( காற்றால் அறுபட்டுப் படிந்திருக்கும் மணல் படிவில் உதிர்ந்த பூக்கள் பாவாடை சுருக்கத்திற்கு உவமை. ) ஆற்றில் கிடக்கும் பருக்கைக் கற்கள் நடந்து செல்லும் பாணன் பாடினியரின் கால்களை உருத்தின, கிழித்தன. அவர்கள் மெல்ல மெல்ல நடந்து சென்றனர். அவர்களது நடை பார்ப்பவர்களுக்குச் சுவையாக இருந்தது. அது வேனில் காலம் வெயிலின் சூடுதான் வேனிலுக்குப் பதம். காலை ஞாயிறு தன் கதிர்ச்சுடரை வீசி வாட்டத் தொடங்கியது. பாலைநில வழியில் அவர்கள் சென்றனர்.

சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ

 

 

அழகு மிக்க விறலியருடன் இளைப்பாறும் இரவலன்

 

யைதுவீ ழிகுபெய லழகுகொண் டருளி
நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென
மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன்

15

மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ
யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ
வயங்கிழை யுலறிய அடியி னடிதொடர்ந்
தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற்
சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென

20

மால்வரை யொழுகிய வாழை வாழைப்
பூவெனப் பொலிந்த ஓதி ஓதி
நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்
களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்
தியாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப்

25

பூணகத் தொடுங்கிய வெம்முலை முலையென
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கி
னின்சே றிகுதரு மெயிற்றி னெயிறெனக்
குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல்லியல்

30

மடமா னோக்கின் வாணுதல் விறலியர்



பாலை நெடுவழியில் முல்லை சான்ற கற்பினளாகிய பாணனின் மனைவியும் செல்கிறாள். பாலை நிலத்து மரங்களில் இலைகள் உதிர்ந்து விட்டன. அவற்றின் அடியில் வரி வரியாகக் கிடக்கும் அருநிழலில் ஆங்காங்கே உட்கார்ந்து இளைப்பாறிய பின் செல்கிறாள். அவளது கூந்தல், மேனியின் சாயல், உள்ளங்கால், காலின் தொடை, தலையில் போட்டிருக்கும் ஓதிக் கொண்டை, மேனியின் பொலிவைக் காட்டும் பொன்னிறத் தேமல், மார்பகப் பெண்பாலுறுப்பு, பல் ஆகிய உறுப்புக்கள் பொலிவுடன் பூத்துக் குலுங்குவதால் அவள் மாரிக் காலத்து மழைத்துளி பட்டவுடன் பூத்துக் குலுங்கி மணக்கும் குல்லை என்னும் குட்டிப் பிலாத்திப் புதர்ச்செடி போல் பொலிவு பெற்றிருக்கிறாள்.

கதுப்பு அவளது கூந்தலில் எண்ணெய் கனிந்துள்ளது. அதுபோலத் தூறல் மழையில் நனைந்தாடும் மயிலின் தோற்றத்தைத் தருகிறது. சாயல் மயில் தன் நீல நிறத் தோகையை விரித்துக்கொண்டு ஆடுவது போல் அவளது மேனியின் பொலிவழகு துவண்டு ஆடுகிறது. இவள் பெண்மயில். அது ஆண்மயில். எந்தச் சாயலழகு எந்தச் சாயலழகில் குளிக்கிறது என்று தெரியாத வியப்புநிலை அது. அடி சாயல் நிழலில் இளைப்பு வாங்கும் நாயின் நாக்கைப் போல் அவளது உள்ளங்கால், அழகு, அமைப்பு, மென்மை போன்றவற்றால் அவளது அடியானது நாயின் நாக்கைப் போல் இருந்தாலும், அவளது காலில் மருதாணி பூசி மலர்ந்து போய் இழைக்கோடுகள் இருப்பதால் இவளது அடியின் பொலிவுக்கு நாயின் நாக்கு ஈடாகாது. குறங்கு அவளது அடியிலிருந்து உயர்ந்து, பெண்யானையின் நிலத்தைத் தொடும் துதிக்கை போன்று அவளது தொடை இருக்கிறது. யானைக்குத் துதிக்கை ஒன்றுதான். இவளுக்கோ நெருக்கமான இரண்டு தொடைகள். ஓதி அவளது தொடையைப் போல் மலைவாழைத் தண்டு இருக்கிறது. அந்த வாழையின் பூவைப்போல அவளது கொண்டை இருக்கிறது. சுணங்கு அவள் கொண்டை பூத்திருக்கும் கொத்துக் கொத்தாக வேங்கை பூத்திருக்கிறது. வேங்கை பூத்திருப்பது போல் அவள் முலைமுகத்தில் சுணங்குத் தேமல் பூத்திருக்கிறது. தேன் உண்ட வண்டுகள் களிப்பினால் தேமலையும் பூ என்று மயங்கி மொய்த்துத் தேன் இல்லாத்தால் அரற்றி ஓலமிடுகின்றன. . முலை அவளது தேமல் போல் கோங்கமரம் புதிய பூவை அவிழ்த்து வைத்திருக்கிறது. கோங்கம் பூ மொட்டுப் போல் அவளுக்கு முலை. பல் அவளது முலையைப் போன்ற தேங்காயுடன் தென்னை நிமிர்ந்துள்ளது ( அவளத முலையைப் போன்ற காயுடன் பனை பருவம் கொண்டுள்ளது. ) தேங்காய்க்குள்ளே இருக்கும் தேங்காயைப் போல் அவளுக்குப் பல். ( பனை நுங்கு போல் பல் ) இனிமையாலும் ஈரத்தாலும் இளந் தேங்காயும், பனை நுங்கும் அவளது பல்லை ஒத்திருந்தன. குல்லை - அவளது பல்லைப் போல் குல்லை ( குட்டிப் பிலாத்தி ) பூத்திருக்கிறது. முல்லை = கற்பு மாரியின் மழைத்துளிக்கு மட்டுமே பூக்கும் குல்லை போல் முல்லை பூத்திருக்கிறது. முல்லை என்னும் காத்திருக்கும் கற்புநெறி கொண்டவள் பாணன் மனைவியாகிய விறலி.

நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி
கல்லா விளையர் மெல்லத் தைவரப்
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பி
னின்குரற் சீறியா ழிடவயிற் றழீஇ

35

நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன் கடனறிந் தியக்க
வியங்கா வையத்து வள்ளியோர் நசைஇத்
துனிகூ ரெவ்வமொடு துயராற்றுப் படுப்ப
முனிவிகந் திருந்த முதுவா யிரவல!

40



விறலியருக்கு மானைப்போல் மருண்டு பார்க்கும் கண் நடந்து நடந்து சோர்ந்து போயிருந்த அவர்களது சிறிய காலடிகளை இளைஞர்கள் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மேலும் பாண்மகன் தனது சீறியாழை மீட்டிப் பாடியும் விறலியரை மகிழ்வித்துக் கொண்டிருந்தான். அந்த யாழை அவன் தன் இடப்பக்கத் தோளில் மாட்டிக் கொண்டு மீட்டி இசைத்தான். பாலைப் பண்ணில் நைவளத் திற இசையைக் கூட்டிப் பாடினான். அப் பண்ணை மீட்டுவதில் அவன் கைத்திறம் பெற்றவன். வையம் என்னும் உலக வண்டி நாம் இயக்க இயங்காத வண்டி. இந்த வையத்தில் வள்ளல்களைப் பார்க்கும் ஆசையில் பாணன் சென்று கொண்டிருந்தான். உள்ளத்தில் இருக்கும் சலிப்பும், உடலை வாட்டும் எவ்வமும் (துன்பமும்) துயரமாக மாறிப் பிறர் கொடுப்பதை ஏற்கும்படி அவனை ஆளாக்கி வழி நடத்திக் கொண்டிருந்தன..

வஞ்சி மாநகரின் சிறப்பு

 

கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவா யெருமை
பைங்கறி நிவந்த பலவி னீழல்
மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர
விளையா விளங்க ணாற மெல்குபு பெயராக்

45

குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங்
குடபுலங் காவலர் மருமா னொன்னார்
வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண்
வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று

50



கொழுத்த மீன்கள் காயப்படும்படி எருமை சேற்றில் நடக்கும் அங்குள்ள வளமான இதழ்களைக் கொண்ட கழுநீர்ப் பூக்களைத் தன் வலிமை மிக்க வாயால் மேயும். பின் படுத்துக் கொள்ள பலாமர நிழலுக்குச் செல்லும். பலா மரத்தில் மிளகுக் கொடி ஏறியிருக்கும். பின் அசை போட்டுக்கொண்டே மஞ்சள் இலை தன் உடலைத் தடவிக் கொடுக்கும்படி மஞ்சள் வயலில் படுத்திருக்கும். அப்போது அசை போனும். அதன் வாயில் கழுநீர்ப் பூவிலிருக்கும் விளையாத இளங்கள் நறுமணம் வீசும். அதன் பின்னர் எழுந்து போய் மீண்டும் அசை போட்டுக்கொண்டே குளவிப் பூப் படுக்கையில் படுத்துக் கொள்ளும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில் பொறித்தது இது குடபுலத்தின் வளம். அதனைக் காக்கும் மரபில் வந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் தன் பகைவர்களை அடக்கி அவர்களது வடநாட்டு எல்லையிலிருக்கும் இமய மலையில் தன் வில்லம்புச் சின்னத்தைப் பொறித்தான். அந்தக் குட்டுவனின் தோள் கோட்டைக் கதவுக்குத் தாழ்ப்பாள் போடும் கணையமரம் போன்றது. அவன் பெரும்பாலும் தேரில் செல்லும் பழக்கம் உடையவன். இவனது சேரநாட்டு வஞ்சி வளம் மிக்க ஊர். அந்த வஞ்சி நகரமே ஏழை-நகரம்எ என்று எண்ணும்படியாக நல்லியக்கோடன் பொருள் வளத்தை வாரி வழங்குவான்.

தமிழ் நிலை பெற்ற மதுரையின் மாண்பு

 

நறவுவா யுறைக்கும் நாகுமுதிர் நுணவத்
தறைவாய்த் குறுந்துணி யயிலுளி பொருத
கைபுனை செப்பங் கடைந்த மார்பிற்
செய்பூங் கண்ணி செவிமுத றிருத்தி
நோன்பகட் டுமண ரொழுகையொடு வந்த

55

மகாஅ ரன்ன மந்தி மடவோர்
நகாஅ ரன்ன நளிநீர் முத்தம்
வாள்வா யெருந்தின் வயிற்றகத் தடக்கித்
தோள்புற மறைக்கும் நல்கூர் நுசுப்பி
னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற

60

கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடுந்
தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்
தென்புலங் காவலர் மருமா னொன்னார்
மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக்
கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன்

65

 

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று

 



உமணர் உப்பு விற்கச் செல்லும் வரிசையோடு அவர்களின் உமட்டியரும் குழந்தைகளும் செல்வர். வழியில் மந்தி குழந்தைகளுடன் சேர்ந்து கிலிகிலுப்பை விளையாடும். உமணர் - தாங்கி இழுக்கும் காளை மாடுகள் பூட்டிய வண்டியை உமணர்கள் ஓட்டிச் செல்வர். தலையில் அணியும் மாலை கண்ணி எனப்படும். நுணாக் கட்டையைக் கடைந்து செய்த கண்ணியை அவர்கள் தம் காதுகளைத் தொடும் வகையில் தலையின் மேல் அணிந்திருப்பர். மார்பிலும் அணிந்திருப்பர். முதிர்ந்த நுணாமரப் பொந்துகளில் தேன் கூடு கட்டும். நிறைமதி நாளிலும், மறைமதி நாளிலும் தேனீக்கள் தாம் சேர்த்த தேனைப் பருகிவிடும். அவ்வாறு பருகியபின் கடையப் பயன் படுத்தப்படும் நுணா மரக்கிளை வெட்டப்படும் அது இளமையும் முதுமையும் கொண்ட பதமான நுணாமரத் துண்டு. அதில்தான் நுணாக்கட்டை-மாலைக்கு வேண்டிய துண்டுகளைக் கடைந்தெடுப்பார்கள். உமணர் மக்கள் - அவர்களது மக்களை ஒத்த மந்திகள் சிறுவர்கள் விளையாடும் கிலுகிலுப்பையை எடுத்துத் தாமும் அவர்களைப் போலவே ஆட்டி விளையாடும். உமட்டியர் - உமட்டியர் முத்துப் போன்ற பற்களுடன் நகைமுகம் காட்டுவர். தம் குழந்தைகளைத் தம் தோளில் கட்டியிருக்கும் தூக்குத் துணியில் தம் வயிற்றுப் பகுதியில் உட்கார வைத்துக் கொள்வர். மந்தி ஆட்டும் தனது கிலுகிலுப்பையை வாங்கித் தரும்படி குழந்தை அழுதால் குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்து கிலுகிலுப்பையை மறைத்து மறக்கும்படி செய்வர். குழந்தையைத் தோளில் மறைக்கும்போது அவர்களின் தலையிலுள்ள ஐம்பால் ஒப்பனைதான் கண்ணைக் கவரும். குழந்தை பிறந்து சில நாள்களேயான புனிற்றிளம் பெண்களேயாயினும் அவர்களது வயிறு வற்றி இடை சிறுத்துப் போய்தான் இருக்கும். இவர்கள் வாழுமிடம் கடலலை மோதும் கொற்கை நகரம். - ( உமணர் ஒப்புநோக்குக பெரும்பாணாற்றுப்படை அடி 46 – 65 ) கொற்கை - கொற்கையைத் துறைமுகமாகவும், மதுரையைத் தலைநகரமாகவும் கொண்டு ஆள்பவன் செழியன். தமிழகத்தின் தென்பகுதியில் இருப்பதாலோ, இனிய புலமாக இருப்பதாலோ அவனுடைய நாடு தென்புலம் என்று பெயர் பெற்றிருந்தது. அந்தத் தென்புலத்தைக் காப்பாற்றும் உரிமை பூண்டவர்களின் வழி வந்தவன் செழியன். அவன் தன் பகைவர்களின் நிலத்தைப் பொருள் வளத்தில் மாறுபடுமாறு செய்தவன். தன் நாட்டுக்கு நிழல் தரும் காவல் வெண்குடையின் கீழ் வீற்றிருப்பான். கண்ணைப் போன்ற வேப்பிலைக் கண்ணியைத் தலையில் சூடிக்கொண்டு தேரில் வருவான். தமிழ் நிலைபெற்றிருப்பதால் இவனது மதுரை பிறரால் தாங்க முடியாத மரபுப் பெருமையினைக் கொண்டது. மதுரைத் தெருவில் எப்போதும் மகிழ்ச்சித்தேன் பாய்ந்துகொண்டே இருக்கும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இவனது மதுரை நகரமே ஏழைநகரம் என்று எண்ணும்படியாக நல்லியக் கோடன் வளத்தை வாரி வழங்குவான்.

உறந்தையின் சிறப்பு

 

நறுநீர்ப் பொய்கை யடைகரை நிவந்த
துறுநீர்க் கடம்பின் றுணையார் கோதை
ஓவத் தன்ன வுண்டுறை மருங்கிற்

70

கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின்
வருமுலை யன்ன வண்முகை யுடைந்து
திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை
யாசி லங்கை யரக்குத்தோய்ந் தன்ன
சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை

75

யேம வின்றுணை தழீஇ யிறகுளர்ந்து
காமரு தும்பி காமரஞ் செப்புந்
தண்பணை தழீஇய தளரா இருக்கைக்
குணபுலங் காவலர் மருமா னொன்னா
ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந்.

80

தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய
னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று

 



உறையூரில் உண்ணத்தக்க நல்ல நீரைக் கொண்ட பொய்கை. அதன் கரையில் நீர்ப்பக்கமாக விரிந்த கடம்பு மரம். அம் மரத்தில் நிறைந்த மாலைகள் தொங்குவது போன்று பூத்திருக்கும் பூக்கள். அந்தப் பூக்கள் நீரில் உதிர்ந்தன. உண்ணும் நீரில் அவை மிதப்பதால் குளமே ஓவியம் போலக் காட்சி அள்ளித்தது. தரையில் மேயும் தம்பலப்பூச்சிகள் (கோவம்) போல நீரில் மிதக்கும் கடப்பம்பூக்கள் காற்றலையில் நகர்ந்துகொண்டிருந்தன. அதில் மகளிரின் முலை போலத் தாமரை மொட்டுகள் வெளிவந்து பூத்தன. அவை தெய்வ வழிபாட்டுக்கு மட்டும் பயன்படும் தெய்வத்தாமரைப் பூக்கள். அவற்றில் பூவின் நடுவில் இருக்கும் கொட்டைகள். மகளிர் தம் மாசுமருவற்ற கைகளில் மருதாணி வைத்துச் செந்நிறம் ஆக்கிக்கொண்டது போல தாமரை இதழ்களுக்கு இடையே பொதிந்திருக்கும் செம்பொன் நிறம் கொண்ட கொட்டை. அந்தக் கொட்டையில் உறங்கும் ஆண் பெண் வண்டுகள் காம இன்பத்தில் காமரப்பண் பாடின. இப்படிப்பட்ட குளநீர் பாயும் வளவயல்களைக் (பணை) கொண்டதுதான் உறையூர். இந்த நாடு குணபுலம் எனப்பட்டது. இதனை மரபுரிமையில் ஆண்டுவந்தவன் செம்பியன். தேரில் செல்லும் பழக்கமுடைய இவன் நற்றேர் செம்பியன்எனப் போற்றப்பட்டான். இவன் தூங்கெயில் கோட்டையை வென்று அதன் அடையாளமாகத் தன் கையில் காப்புத்தொடி அணிந்துகொண்டான். அந்தத் தூங்கெயில் ஓங்கி உயர்ந்த கதவினைக் கொண்டது. மேகம் அந்தத் தொங்கும் கோட்டையில் தன் முதுகைச் சொரிந்துகொள்ளும் அளவுக்கு அந்தக் வானளாவ உயர்ந்து தொங்கியது. அதனைக் கைப்பற்றிக்கொண்ட செம்பியனின் உறையூர் நகரமே ஒன்றுமில்லாத வறுமைக்கோலம் எய்திவிட்டது போல நல்லியக்கோடன் பரிசுகளை வழங்குவான், என்கிறார் பாணனை ஆற்றுப்படுத்தும் புலவர்.

ஏழு வள்ளல்களின் சிறப்பு

 

வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய

85

அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண



இது முதல் ஏழு வள்ளல்களின் கொடைத்திறன் போற்றப்படுகிறது. (இவர்களை நாம் கடையெழு வள்ளல்கள் என்று வழங்குகிறோம்). இந்த ஏழு பேர் இழுத்துச் சென்ற ஈகை என்னும் தேரை இழுக்கும் நுகத்தை நல்லியக்கோடன் தனி ஒருவனாகவே இழுத்துச் சென்றான் என்று பாடல் வளர்கிறது. அதாவது, அந்த ஏழு வள்ளல்களுக்குப் பின்னர் இருந்த ஒரே ஒரு வள்ளல் இவன் மட்டுமே எனப் போற்றப்படுகிறான்.

அரிய உடல்திறனும், கண்டவரை வருத்தும் கட்டழகும் கொண்டவர்கள் ஆவியர்-குடி மக்கள். தலைவன் பேகன். பெருங்கல் நாடு எனப் போற்றப்படும் பழனிமலைப் பகுதியில் வாழ்பவர்கள் அந்த ஆவியர் குடி மக்கள். பேகன் ஒருநாள் மழை பொழியும் மலைச்சாரல் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது மயில் ஒன்று ஆடுவதைப் பார்த்து, அது குளிரில் நடுங்குவதாக எண்ணித் தன் போர்வையை அதன்மீது போர்த்தி விட்டவன்.

நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரல்.

90

பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி



அருவி விழும் காட்சி தொலைதூரம் தெரியும் மலை பறம்புமலை இவன் அந்தப் பறம்புமலைத் தலைவன். ஒருநாள் நாகமலைப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது படர்வதற்குப் பற்றுக்கோடு இல்லாமல் ஆடிக்கொண்டிருந்த சுரும்புத் தேனீக்கள் தேன் உண்ணும் முல்லைக்கொடி படர்வதற்குப் படர்வதற்குக் கொழுகொம்பு இல்லாமல் ஆடிக்கொண்டிருந்ததைப் பார்த்து, அது படர்வதற்காகத் தன் மிகப் பெரிய தேரையே நிறுத்தி விட்டுச் சென்றவன்

வாலுளைப் புரவியொடு வையக மருள
வீர நன்மொழி யிரவலர்க் கீந்த
வழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்
கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ்

95



இவனது கையில் உள்ள வாள் பகைவர்களை வீசிச் செந்நிறம் கொண்டு ஒளிரும். ஆனால் இவனோ தன்னைத் தேடிவந்து கேட்டவர்களுக்கு ஒலிக்கும் மணி கட்டியிருக்கும் வெண்மயிர்ப் பிடரிக் குதிரைகளைப் பரிசாக வழங்கினான். அப்போது அவன் பேசும் அன்பு மொழிகள் விதை முளைக்க உதவும் ஈரநிலம் போன்றவை. அந்த உரை உலகத்தையே வியப்பில் ஆழ்த்துபவை.

நீல நாக நல்கிய கலிங்க
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோ
ளார்வ நன்மொழி யாயு மால்வரைக்



இவன் மகிழ்ந்திருக்கும்போது சந்தனம் பூசிய கோலத்தோடு காட்சி தருபவன். சினந்திருக்கும்போது வில்லும் கையுமாகத் திரிபவன். ஆலமரத்தடியில் குடிகொண்டிருந்த சிவபெருமானின் சிலை ஆடை இல்லாமல் இருப்பதைக் கண்ட இவன் நச்சு (நீலம்) கொண்ட நாகப்பாம்பு ஒன்று இவனுக்குத் தந்த மேலாடையை அச்சிலைக்குப் போர்த்தி மகிழ்ந்தான்.

கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்ல

100

யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீந்த
வுரவுச்சினங் கனலுமொளிதிகழ் நெடுவே
லரவக்கடற் றானை யதிகனுங் கரவாது



அதிகன் = அதியன் = அதியமான். = அதியமான் நெடுமான் அஞ்சி = அஞ்சி. (இவன் தன் ஆட்சியின் பெரும்பகுதி போரிலேயே கழித்துள்ளதை இவனது வரலாற்றிலிருந்து அறிவோம். ) வேல் வீச்சில் இவன் வல்லவன். பொதுவாகப் பிறரை உரசிப் பார்க்கும் சினம் இவனுக்கு உண்டு. ஆர்பரித்துக்கொண்டே இருக்கும் கடல் போல் போர் வேண்டும் என ஆரவாரம் செய்யும் படையும் இவனிடம் இருந்தது. பூஞ்சாரலில் பழுத்திருந்த அரிய நெல்லிக்கனி ஒன்று இவனுக்குத் தரப்பட்டது. அது சாவாமையைத் தரும் அமிழ்தம் போன்றது. அதனைத் தான் உண்ணாமல் புலவர் ஔவையாருக்குக் கொடுத்து அவரை நீண்ட நாள் வாழச் செய்தவன் இவன்.

நட்டோ ருவப்ப நடைப்பரி கார
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்

105

துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாட னள்ளியு நளிசினை



நள்ளி. இவன் மலைநாட்டுத் தலைவன். பாடலில் தரப்பட்டுள்ள செய்திகளைப் பார்க்கும்போது இவனது மலை உதகை மலையாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. வளி துஞ்சு நெடுங்கோடு என்று பாடலில் கூறப்படுவது தொட்டபெட்டா மலைமுகடு எனலாம். துளிமழை என்பது மேகமூட்டம். நளிமலை என்பது குளிர் மிகுதியாக உடைய மலை. முனைமுகத்தில் புகழுடன் விளங்கும் இவனது கைகள் நண்பர்களிடம் அவர்களின் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் நல்குவதில் புகழ்பெற்று விளங்கியது. நடைப்பரிகாரம் என்பது வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய வாழ்க்கை வசதிப் பொருள்கள்.

நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகக்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த

110

வோரிக் குதிரை யோரியு மெனவாங்



ஓரி. ஓரி என்னும் பெயர் கொண்ட குதிரையில் ஏறிச்சென்று ஓரி தாக்கினான். காரி என்னும் பெயர் கொண்ட குதிரையில் வந்து காரி எதிர்த்துப் போரிட்டான். முடிவில் காரியின் குறும்பறை நன்னாடு ஓரிக்குக் கிடைத்தது. போர் வெற்றியில் கிடைத்த அந்த நாட்டைத் தனது போர் வெற்றியைப் புகழ்ந்து யாழ் மீட்டிப் பாடிய பாணர்களுக்குக் கொடுத்தவன் ஓரி. நாகு முதிர் நாகம் குறும்பொறை நன்னாடு நாகு என்னும் நாகமரங்கள் மிகுதியாக இருந்ததால் நாகம்என்னும் பெயரைப் பெற்றிருந்த நாகமலையை உடையகுறும்பொறை நாடு

கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ
ளெழுவர் பூண்ட வீகைச் செந்நுகம்

 

 

நல்லியக்கோடனின் தலைமைச் சிறப்பு

 

விரிகடல் வேலி வியலகம் விளங்க
வொருதான் றாங்கிய வுரனுடைய நோன்றா

115



நல்லியக்கோடன் காலத்துக்கு முன்பு மேலே குறிப்பிட்ட ஏழு வள்ளல் பெருமக்கள் ஈகை என்னும் தேரை ஏழு நுகங்கள் கட்டி ஆங்காங்கே இழுத்துச் சென்றனர். அவர்களது காலத்திற்குப் பிறகு நல்லியக்கோடன் தனியொருவனாக ஈகைத் தேரின் நுகத்தைத் தாங்கி இழுத்துச் செல்கிறான், என்கிறார் ஆற்றுப்படுத்தும் புலவர். நல்லியக்கோடன் எழுசமம் கடந்தவன். அதாவது சொல்லப்பட்ட எழுவரின் சமநிலையைக் கடந்து மேம்பட்டவன். மேலும் எழு உறழ் திணிதோள் கொண்டவன், அதாவது கணையமரம் போன்ற தோளை உடையவன், இது இவனுடைய மாபெரும் கொடைத் தன்மையைக் காட்டுகிறது.

ணறுவீ நாககு மகிலு மாரமுந்
துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய
பொருபுன றரூஉம் போக்கரு மரபிற்
றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா விலங்கை மன்ன ருள்ளும்

120

மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா
ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்
களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடிப்
பிடிக்கணஞ் சிதறும் பெயல்மழைத் தடக்கைப்
பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை

125

நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு

 

 

புரவலனிடம் பரிசுபெறச் சென்ற விதம்

 

தாங்கரு மரபிற் றன்னுந் தந்தை
வான்பொரு நெடுவரை வளனும் பாடி
முன்நாள் சென்றன மாக, விந்நா

 



தொன்மாவிலங்கை என்பது இலங்கைத் தீவு. நன்மாவிலங்கை என்பது தமிழ் நாட்டிலுள்ள ஓர் ஊர். இலங்கைத் தீவில் கருவுற்ற ஒருவன் தமிழ் நாட்டிலுள்ள ஊருக்குக் குடிபெயர்ந்து வந்து தலைமை ஏற்றபோது தன் தலைநகருக்கு மாவிலங்கை என்னும் பெயரைச் சூட்டினான். நல்லியக்கோடன் காலத்தில் இப்பகுதியில் ஓவியர் குடியின மக்கள் வாழ்ந்து வந்தனர். ஓ என்னும் சொல் ஏரியின் மதகுகளை அடைக்கும் பலகையைக் குறிக்கும். ஏரியை நம்பி வாழும் இப்பகுதி மக்கள் ஓவியர் எனப்பட்டனர். (ஓ ஓவம் ஓவியம் ஓவியர் என்றும் எண்ணிப் பார்க்கலாம். )

நல்லிநக்கோடனின் மாவிலங்கை நாட்டில் ஓடிய ஆற்றில் நாகம், அகில், சந்தனம் முதலான மரக்கட்டைகள் மிதந்து வந்தன. அம் மரங்கள் நீராடுவோருக்கு மிதவைப் புணைகளாகப் பயன்பட்டன. காதலன் தோளைத் தருவிக்கொண்டு விளையாடுவது போல மகளிர் அம் மரக்கட்டைகளைப் பற்றிக்கொண்டு விளையாடினர். பொருபுனல் ஓடிற்று என்று பாடல் கூறுவதால் அது காட்டாறாக இருக்க வேண்டும். ஓவியர் குடி குற்றவடு நேராதபடி அரசாண்ட குடி. வாய்மை காத்துப் புகழோடு விளங்கிய குடி. பகைவர்கள் அஞ்சும்படி புலிபோல் வலிமை பெற்று விளங்கிய குடி. நல்லியக்கோடனின் கால்களில் யானையைக் குதிக்காலால் தட்டி ஓட்டிய கால் தழும்பு இருந்தது. அதில் அவன் வீரக் கழலை அணிந்திருந்தான். காலிலோ களிற்றுத் தழும்பு. கைகள் தந்ததோ பிடிக்கணம். பெய்யும் மழை நீரைச் சிதறுவது போல இவனது கைகள் தாரை வார்த்துத் தரும் நீரில் பிடிக்கணங்கள் (பெண்யானைகள்) கொடைப் பொருள்களாகக் கொட்டித் தரப்பட்டன. கூத்தாடுவோருக்கு அந்தக் கொடை யானைகள் வழங்கப்பட்டன. நல்லியக்கோடனை விரும்பி அவனிடம் முன்பொரு காலத்தில் நானும் எனது சுற்றத்தாரும் சென்றோம். அவனைப் புகழ்ந்து பாடினோம். அவன் எங்களது தகுதியை எண்ணிப் பார்க்கவில்லை. மாறாகத் தன்னுடைய தகுதியை எண்ணிப் பார்த்தான். தன் தந்தை தனக்கு வைத்துவிட்டுச் சென்ற வானளாவிய மலைபோன்ற செல்வத்தை அளவிட்டுக் கொண்டான். வழங்கினான்.

வருத்தம் போக்கிய வண்மைச் சிறப்பு

 

டிறவாக் கண்ண சாய்செவிக் குருளை

130

கறவாக் பால்முலை கவர்த னோனாது

புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்த
பூழி பூத்த புழற்கா ளாம்பி
யொல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல்

135

வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை யுப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்
திருக்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு
மழிபசி வருத்தம் வீடப் பொழிகவுட்

140

டறுகட் பூட்கைத் தயங்குமணி மருங்கிற்
சிறுகண் யானையொடு பெருந்தே ரெய்தி
யாமவ ணின்றும் வருதும், நீயிரு

 

 

எயிற்பட்டினத்தில் கிடைக்கும் பொருள்கள்

 

மிவணயந் திருந்த விரும்பே ரொக்கற்
செம்ம லூள்ளமொடு செல்குவி ராயி

145



எங்களது வீட்டுநாய் எங்கள் வீட்டுச் சமையலறையில் குட்டி போட்டிருந்தது. கண்ணைக்கூடத் திறவாத அந்த நாய்க்குட்டிகள் தாயின் மடியில் பால் குடிக்கக் கவ்விச் சுவைத்தன. தாய்நாயின் மடியில் பால் இல்லாத்தால் வலி பொறுக்க முடியாமல் அது தன் குட்டிகளையை பார்த்துக் குரைத்தது. வைரம் பாய்ந்தது போன்ற எங்களது வீட்டுச் சுவர் கட்டுடைந்து கறையான் அரித்த புழுதியோடு காளான் பூத்திருந்தது. உடுக்கை அடித்துக்கொண்டு ஆடும் என் மனைவியின் வயிறு பசியால் ஒடுங்கி இளைத்த இடையோடு ஒட்டிப்போயிருந்தது. அவள் குப்பையில் முளைத்திருந்த வேளைக் கீரையைத் தன் வளைந்த நகத்தால் கிள்ளி வந்தாள். உப்புக்கூட இல்லாமல் அதனை வேகவைத்தாள். இதைப்போய் சாப்பிடுகிறார்களே என்று அறிவுக் குறைந்த மடவோர் ஏளனம் செய்வார்களே என்று எண்ணி வாயில் கதவைச் சாத்தி வைத்துவிட்டுப் பெருஞ் சுற்றத்தாரோடு கூடியிருந்து உண்ணக்கூட முடியாமல் ஏதோ பிசைந்து கவளமாக்கிக் கன்னத்தில் கண்ணீர் வழிய விழுங்கிக் கொண்டிருந்தோம். இதுதான் எங்கள் குடும்பத்தின் அந்நாளைய அழிபசி வருத்தம். ( இந்த விளக்கத்தின் மூலமாகக் குடும்பத்தின் வறுமைநிலை விளக்கப்படுகிறது )

அன்று எங்கள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. அதை மாற்றுவானாய் நல்லியக்கோடன் கன்னத்தில் கண்ணின் மதம் வழியும் யானையைப் பரிசாகத் தந்தான். அஞ்சாமைக் குணம் பூண்டிருக்கும் யானையைத் தந்தான். யானையோடு தேரும் தந்தான். இப்போது நாங்கள் செம்மாப்போடு யானைமீதும் தேர்மீதும் வந்து கொண்டிருக்கிறோம். நீங்களும் இங்கு வருந்திக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு உங்களது சுற்றத்தாரோடு செம்மாந்த உள்ளம் கொண்டு அவனிடம் செல்லுங்கள்.

னலைநீர்த் தாழை யன்னம் பூப்பவுந்
தலைநாட் செருந்தி தமனியம் மருட்டவுங்
கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவும்
நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும்
கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப்

150

பாடல் சான்ற நெய்த னெடுவழி
மணிநீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய
பனிநீர்ப் படுவின் பட்டினம் படரி



நீங்கள் நல்லியக்கோடன் ஊருக்குச் செல்லும் வழியில் எயிற்பட்டினத்தின் வழியாகச் செல்ல வேண்டி இருக்கும். அதனை அடைய நெய்தல்நிலப் பெருவழியில் செல்ல வேண்டி வரும். அங்கே அலைமோதும் நீரில் தாழம்பூ அன்னப்பறவை போல் பூத்திருக்கும். அன்று பூத்த செருந்திப் பூக்கள் பொன் கொட்டிக் கிடப்பதுபோல் கிடந்து மருட்சியூட்டும். முண்டகப் ப்பூக்களைக் கதிர்மணிகள் என்று எண்ணிக் கடல் அலைகள் கழுவிக்கொண்டிருக்கும். புன்னைமரம் பூத்து முத்துக்களைத் தலையில் வைத்திருக்கும். கடற் கானல் வெண்மணலில் கடல்லை வந்து உலாவிக் கொண்டிருக்கும். அந்த நெய்தல் நிலப் பொருவழியில் சென்றால் கடலின் மணிநீர் சார்ந்த நிலத்தில், பனிநீர்ப் (நன்னீர்) பள்ளத்தில் இருக்கும் பட்டினம் ஒன்றை அடையலாம். அது மதிலொடு பெயரிய பட்டினம். (மதில் = எயில் | மதிலின் பெயர் இணைந்துள்ள பட்டினம் | எயிற்பட்டினம்). அங்குச் சென்றால்,

னோங்குநிலை யொட்டகந் துயுன்மடிந் தன்ன
வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற்

155

கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோண்
மதியேக் கறூஉம் மாசறு திருமுகத்து
நுதிவே னோக்கி னுளைமக ளரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்பக்
கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற் கோமான்.

160

தளையவிழ் தெரியற் றகையோற் பாடி
யறற்குழற் பாணி தூங்கி யவரொடு
வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர்

 



நுளைமகள் என்பவள் மீனவப் பெண். அவள் ஒட்டகம் தூங்கி எழுந்தது போல் வரும் அலைகள் கொண்டு வந்த மணம் கமழும் விறகுகளைக் கொண்டு சமைப்பாள். கரும்புகையும் செந்தீயும் கமகமக்கச் சமைப்பாள். அவள் பருத்த தோளழகு உடையவள். வானத்து நிலா இவள் முகத்தைப் பார்த்துத் தனக்கு இப்படிப்பட்ட அழகு இல்லையே என ஏங்கும் முக அழகினைக் கொண்டவள். அதில் வேலின் கூர்மை போல் நோக்கும் கண்பார்வை கொண்டவள்.

சமைக்கும்போது பருத்த தோள்களைக் கொண்ட அவள் முகத்தைக் கரும்புகை கவ்வும். என்றாலும் கொழுந்து விட்டு எரியும் செந்தீ அவளது முகத்துக்கு ஒளி உண்டாக்கும். இந்த முக அழகைப் பார்க்க வானத்திலுள்ள மதியம் ஏங்கிக் கிடக்கும். காரணம் அவள் முகத்தில் கூர்மையான வேல் போன்ற கண்கள் இருந்தன. ( வானத்து மதிக்கு மேகம் புகை. விண்மீன் நெருப்புக் கட்டிகள் நிலாவுக்கு வெளிச்சம் தரும் நெருப்புத் தணலின் கட்டிகள். )

அவள் பழமைப்பட்டு நுரைத்து வரும் தேறலைப் பரதவர்களுக்குத் தருவாள். அப்போது நீங்கள் கிடங்கில் கோமானைப் பாடவேண்டும். ஒருவர் குழல் ஊதுகையில் மற்றவர் அவன் புகழைப் பாடவேண்டும். தன் அரசனின் புகழ் கேட்டு உங்களுக்கும் அரியல் தேறல் தருவாள். பரதவர்களோடு சேர்ந்து உங்களையும் உண்ணுமாறு செய்வாள். அத்துடன் கருவாட்டையும் சுட்டுத் தருவாள். இந்த விருந்தினை நீங்கள் ஆங்காங்கே பெறுவீர்கள். கிடங்கில் என்பது இப்போதுள்ள திண்டிவனம். கிடங்கில் கோமான் என்பவன் நல்லியக்கோடன். எயில்பட்டினம் அவன் நாட்டுத் துறைமுகம். உண்டபின் அவர்களோடு சேர்ந்து நீங்களும் கிடங்கின் கோமகனாகிய நல்லியக் காடனைப் பாடுங்கள். குழல் ஊதுங்கள். அவன் கட்டவிழும் பூமாலை அணிந்திருப்பதைப் பாடுங்கள்.

வேலூர் வளமும் எயினர் விருந்தும்

 

பைந்நனை யவரை பவழங் கோப்பவுங்
கருநனைக் காயாக் கணமயி லவிழவுங்

165

கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவுஞ்
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவுங்
கொல்லை நெடுவழிக் கோப மூரவு
முல்லை சான்ற முல்லையம் புறவின்
விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச்

170

சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்
திறல்வே னுதியிற் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி



எயிற்பட்டினத்துக்குப் பின்னர் முல்லை நிலத்தைக் கடந்து வேலூர் செல்லவேண்டி வரும். இந்த வேலூர் நல்லியக்கோடனால் வேல் வீசி வெல்லப்பட்டது. இந்த வேல் வெற்றிவேல். மற்றொரு வேல் திறல்வேலாகிய கல்லுளி. கல்லுளியைக் கொண்டு கேணி வெட்டி வேலூர் மக்கள் தண்ணீர் பூக்கும்படி செய்தனர். கேணி தோண்டிய திறல்வேல், நல்லியக்கோடன் வெற்றி கொண்ட விறல்வேல் ஆகிய இரண்டு காரணங்களால் கடலூர் மாவட்டத்து வேலூர் (இக்காலத்தில் சிற்றூர்) வேலூர் என்னும் பெயரைப் பெற்றிருந்தது. வேலூர்ப் பகுதியை முல்லைநிலம் என்றும் பாடல் காட்டுகிறது.

வேலூரைச் சார்ந்த முல்லைநிலம் எப்படி யிருந்தது? அவரையில் பவளப்பூக்கள் பூத்தன. இளங்கொழுந்துள்ள அவரைக் கொடியில் செம்பவழம் பூத்துக் கிடப்பது போல் செந்நிற அவரைப்பூ பூத்துக்கிடக்கும். கருநீலக் காயாம்பூச்செடி ஆங்காங்கே மயில்கள் ஆடுவதுபோல் புதர்புதராகப் பூத்துக் கிடக்கும். முசுண்டைக் கீரை கொழுத்துச் சுருண்டு கிடக்கும். காந்தள் பூவின் குலை கைவிரல் போலப் பூத்துக் கிடக்கும். பயன்படுத்தப் படாத கொல்லைப்புறத்து வழிகளில் கோபம் என்று சொல்லப்படும் தம்பலப் பூச்சிகள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும். அதுதான் முல்லைப் பூத்துக் கிடக்கும் முல்லைப் புறவு. அகன்ற மலைப்பிளவுகளில் காலூன்றி நடந்த அருவியின் நீர் முல்லை நிலத்துக்கு வந்து சேராமல் மலையிலேயே மூழ்கிப் போகும். . தெற்குப் பக்கம் இறங்கிச் சென்று கொண்டிருந்த சூரியன் தன் வழித்தடத்தை வடக்குப் பக்கமாகத் திருப்பி வந்துகொண்டிருந்த காலம் அது. ( உத்தராயணம் ) திறல் வேலால் கேணி தோண்டியும் ,விறல் வேலால் வெற்றி கண்டும் நல்லியக்கோடன் பெற்ற ஊர் வேலூர். அந்த வேலூரை அடைந்தால்

னுறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை
யெயிற்றிய ரட்ட இன்புளி வெஞ்சோறு

175

தேமா மேனிச் சில்வளை யாயமொ
டாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர்

 



வேலூர்ப் பகுதியானது முல்லைவளம் திரிந்து பாலை நிலமாக மாறியிருக்கும். அந்த நிலப்பகுதி மக்கள் எயிற்றியரும் அங்கு வாழ்வதைக் காணலாம். கூரை வேயப்பட்டிருக்கும் அவர்களது குரம்பை வீடுகளில் உறுத்தும் வெயில் வாலைக் குலைத்துக் கொண்டு முற்றத்திலேயே முடங்கிக் கிடக்கும். வெயிலின் சினம் செல்லுபடி ஆகாத குரம்பை அது. அங்கே எயிற்றியர் நல்கும் இனிய புளிச்சோறு பெறலாம். காட்டில் மேயும் ஆமான் ஆட்டுக் கறி சுட்ட வறுவல் உணவும் பெறலாம். இனிய மாந்தளிர் போன்ற மேனியையுடைய உன் ஆயத்தாரும் பெறலாம். போதும்போதும் என்னும் அளவுக்கு விருப்பம் தீரப் பெறலாம்.

ஆமூர் வளமும் உழவர் விருந்தும்

 

நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி
நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து

180

புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்
வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை
முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது
கொங்குகவர் நீலச் செங்கட் சேவல்
மதிசே ரரவின் மானத் தோன்று

185

மருதஞ் சான்ற மருதத் தண்பணை
யந்தண ரருகா வருங்கடி வியனக
ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின்



நல்லியக்கோடனின் ஆமூர் மருத நிலவளம் மிக்க ஊர். அங்கு உயரமில்லாமல் வளர்ந்திருந்த காஞ்சி மரத்தில் ஆழமான நீர்நிலையின் பக்கமாகச் சாய்ந்திருந்த கிளையில் அமர்ந்திருந்த சிரல் என்று சொல்லப்படும் மீன்கொத்திக் குருவி அம் மரத்தடிப் பொய்கையிலிருந்த மீனைக் கொத்தப் பாய்ந்தது. அதன் கால் நகம் தாமரை இலையைக் கிழித்தது. மீனைக் கொத்திக் கொண்டு அங்கே அன்று மலர்ந்த தாமரைப் பூவின்மேல் அமர்ந்தது. அதன் குருவி-நீல நிறம். நிலாவைப் போல் மலர்ந்திருந்த தாமரையை அது மறைத்தது. இச்செயல் கிரகண நாளில் நிலாவைப் பாம்பு மறைத்துவிட்டு விலகுவது போல இருந்தது. இத்தகைய நீர்வளம் மிக்க ஊர்தான் ஆமூர். அவ்வூருக்கு அகழியும் உண்டு. அங்கு அந்தணர்கள் வருவதில்லை. உழவர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். அங்குச் சென்றால்….

வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி
னுரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை

190

பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
விருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த
அவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு
கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவி

195



அவர்களின் எருதுகள் பாரம் தாங்கி இழுக்கும் வல்லமை பெற்றவை. இத்தகைய எருதுகளைப் பூட்டி ஆமூர் உழவர்கள் நிலத்தை உழுவார்கள். அவர்களின் தங்கைமார் தம் தலைமுடியைப் பின்னிப் பின்புறம் தொங்கவிட்டிருப்பர். அச்சடை யானையின் துதிக்கை போலத் தொங்கும். அவர்கள் உங்களைத் நீங்கள் பெற்ற மக்கள் போல எண்ணித் தடுத்து நிறுத்தி உணவளிப்பர். உலக்கைப் பூண் தேய நன்றாகக் குத்திச் சமைத்த வெண்பொங்கல் சோற்றுக்கு நண்டுக் குழம்பு ஊற்றிப் போடுவதைப் பெறுவீர்கள்.

நல்லியக் கோடனின் மூதூர் அண்மையது என்று அறிவித்தல்

 

ரெரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக்
கருமறிக் காதிற் கவையடிப் பேய்மக
ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப்
பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா
ளண்ணல் யானை யருவிதுக ளவிப்ப

200

நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்
சேய்த்து மன்று சிறிதுநணி யதுவே

 



நல்லியக்கோடனின் மாவிலங்கை அந்த ஆமூரிலிருந்து அதிக தொலைவிலுள்ளது அன்று. பக்கத்தில்தான் உள்ளது. மாவிலங்கைப் பேரூரில் எப்போதும் நல்லியக்கோடனின் வெற்றிவிழாக் கொண்டாட்டம் நிகழும். விழாக் காலங்களில் தெருவில் புழுதி அடங்குவதற்காக நீர் தெளிப்பர்.அதன் மீது யானைகள் நடப்பதால் புழுதிகள் மேலும் அடங்கும். அத்தெருவில் நடக்கும் யானைகள் எப்படிப் பட்டவை தெரியுமா! பேய்மகள் போன்றவை. பேயின் நாக்கு எரியும் தீயை இழுத்து வைத்திருப்பது போல இருக்கும். பல் பளிச்சென்று வெளியே தெரியும். காது கருமைநிற வெள்ளாட்டுக் காது போல் இருக்கும். காலடி கவட்டை போல் பிளவுபட்டிருக்கும். காலில் இருக்கும் பெரிய நகங்களால் பிணத்தைக் கிளறி அது உண்ணும். இந்தப் பேய் பிணத்தின் கறியை உண்டு சிரிப்பது போல யானை பிளிறிக்கொண்டு தெருவில் நடக்கும்.

வாயிலின் சிறப்பு

 

பொருநர்க் காயினும் புலவர்க் காயினு
மருமறை நாவி னந்தணர்க் காயினுங்
கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன

205

அடையா வாயிலவ னருங்கடை குறுகிச்

 



நல்லியக்கோடனின் அரணமனை வாயில் எப்போதும் இமயமலை பிளவு பட்டிருபது போல் திறந்தே இருக்கும். என்றாலும் எல்லாரும் எளிதில் உள்ளே சென்றுவிட முடியாது. பொருநர். புலவர் அந்தணர் ஆகி\யோர் மட்டும் தடையின்றி உள்ளே செல்லலாம்.

நல்லியக்கோடன் அவையில் வீற்றிருக்கும் காட்சி
அவன் குணங்களும் அவற்றை ஏத்துவோரும

 

செய்ந்நன்றி யறிதலுஞ் சிற்றின மின்மையு
மின்முக முடையையு மினிய னாதலுஞ்
செறிந்துவிளங்கு சிறப்பி னறிந்தோ ரேத்த
அஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையு

210

மாணணி புகுதலு மழிபடை தாங்கலும்
வாண்மீக் கூற்றத்த்து வயவ ரேத்தக்
கருதியது முடித்தலுங் காமுறப் படுதலு
மொருவழிப் படாமையு மோடிய துணர்தலு
மரியே ருண்க ணரிவைய ரேத்த

215

அறிவுமடம் படுதலு மறிவுநன் குடைமையும்
வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்தப்
பன்மீ னடுவட் பான்மதி போல
இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகிப்

220



பாணர்களே! கோட்டை வாயிலில் நுழைவதற்கு உங்களுக்குத் தடை இல்லை. எனவே உள்ளே சென்றால் நல்லியக்கோடனைக் காணலாம். விண்மீன்களுக்கு இடையே வெண்ணிலா விளங்குவது போல அவள் தன் சுற்றத்தாருக்கு இடையேயும், அவனிடம் பரிசில் பெற்று அவனை வாழ்த்தும் பரிசிலர்களிடையேயும் இருப்பதைக் காணலாம். அவன் எத்தகைய பண்புகளைப் பெற்றவன் தெரியுமா!, செய்ந்நன்றி மறவாதவன். சிற்றினத் தொடர்பு இல்லாதவன். இன்முகம் காட்டுபவன். இனியனாக நடந்து கொள்பவன். சிறப்புகள் குவிந்தாலும் செறிவோடு விளங்குபவன். அறிந்தவர்களின் போற்றுதல்களைப் பெற்றவன். அஞ்சியவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பவன். அவனிடம் சினம் இருக்கும். அதில் கொடுமை செய்யும் வெஞ்சினம் இருக்காது. அணி செய்து தன்னை அழகுபடுத்திக் கொள்வான். அழிக்க வரும் படையைத் தானே முன்னின்று தாங்குவான். வாளால் புகழ் பெற்ற வயவர்கள் இவனைப் பாராட்டிப் புகழ்வர். எண்ணியதை எண்ணியாங்கு முடிப்பவன். எல்லாரும் ஆசை கொள்ளும் பாங்கு உள்ளவன். நடுவு நிலைமையிலிருந்து பிறழாதவன். நிகழ்ந்ததை உணர்ந்து தீர்ப்பறம் கூறவல்லவன். பெண்கள் புகழும்போது இவன் ஒன்றும் அறியாதவனாக மாறிவிடுவான். பிறரிடம் தன் அறிவாற்றலைப் புலப்படுத்துவான். வரிசை அறிந்து கொடை வழங்குவான். இவ்வளவு தான் தரவேண்டும் என்று வரையறை செய்யாமல் வழங்குவான். அவன் அருகில் சென்று ….

யாழ் வாசித்து, அரசனைப் புகழ்ந்து பாடுதல்

 

பைங்க ணூகம் பாம்புபிடித் தன்ன
வங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின்
மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து
வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்துக்
கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப்

225

புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்
தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்
பாடுதுறை முற்றிய பயன்றெரி கேள்விக்
கூடுகொ ளின்னியங் குரல்குர லாக
நூனெறி மரபிற் பண்ணி யானாது

230



நல்லியக்கோடன் முன்னிலையில் யாழ் மீட்டுங்கள். பல இசைக்கருவிகளும் ஒத்தியங்க மீட்டுங்கள். ஏழு பண்களில் முதல் பண்ணாகிய குரல் பண்ணில் தொடங்கி வாயிலிருந்து பாடிவரும் குரலிசைக்கு ஏற்ப யாழ் மீட்டிப் பண் பாடுங்கள். பாடிப்பாடிப் பண்ணின் துறைகளில் முதிர்ச்சி பெற்றவர்கள் நீங்கள். இசைநூல்களில் கூறப்படும் மரபுப்படி பாடுபவர்கள் நீங்கள். உங்களிடம் உள்ளது பண்ணின் பயன் தெரிந்த கேள்வி. (யாழ்) கேள்வியாழ் ஊகக் குரங்கு போலவும், யாழில் கட்டப்பட்டுள்ள நரம்பு அக்குரங்கு பிடித்திருக்கும் பாம்பு போலவும் காணப்படும். பாம்பின் தலையும் வாலும் வெளியில் நீட்டுக் கொண்டிருக்கும்படி குரங்கு யாழைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, யாழில் கட்டியிருக்கும் நரம்பு மேலும் கீழும் அவிழ்ந்திருக்கும். யாழ் வளைவின் உள்பகுதி யாழுக்கு வயிறு. அதன் அகலப் பகுதியில் குமிழம் பழம் போல் நரம்பைக் கட்டியிருக்கும் திருகாணிகள் இருக்கும். அந்த ஆணிகள் யாழில் திருகப்பட்டிருக்கும் துளைப்பகுதியில் நீலநிற மணிகளை வரிசைப்படுத்தி வைத்திருப்பது போன்ற துளைவட்டங்கள் இருக்கும். இத்தகைய வனப்புள்ள யாழைப் போர்த்தியிருக்கும் பச்சை நிறப் போர்வையில் புகழத்தக்க கைவினை வேலைப்பாடுகள் பொதிந்திருக்கும். தாயின் முலைநரம்புகளில் அமிழ்தம் பொதிந்திருக்கும். குழந்தைக்கு இலிற்றும் அமிழ்தம் ஒருவகை. கணவனுக்கு இலிற்றும் அமிழ்தம் ( தேன் ) மற்றொரு வகை. அதுபோல அடங்கிச் சுருண்ட யாழின் நரம்புகளிலிருந்து அமிழ்தம் இலிற்றும். மேலும் இந்த அமிழ்தத்தில் தேனும் கலக்கப்பட்டிருக்கும். குரலிசைக்கு ஏற்பக் குரல் பண்ணிசையில் தொடங்கிப் பாடுங்கள்.

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவு
மிளையோர்க்கு மலர்ந்த மார்பினை யெனவு
மேரோர்க்கு நிழன்ற கோலினை யெனவுந்
தேரோர்க் கழன்ற வேலினை யெனவு
நீசில மொழியா வளவை, மாசில்

235



அவன் முன் நீங்கள் பாடும்போது இயல்பாகவே உள்ள அவனது பண்புகளைப் பாராட்டிச் சில சொற்களைக் கூறுவீர்கள். முதியோரை வணங்க மொட்டுப்போல் மூடிக் கும்பிடும் கையையுடையவனே! இளையோரைத் தழுவுவதற்காக மலர்ந்து விரியும் மார்பினை உடையவனே! உழவர்களுக்கு நிழல் தரும் செங்கோலை உடையவனே! தேர்ப்படை எதிரிகள் முன் அழல் கக்கும் வேலினை உடையவனே! இப்படி ஒருசில சொல்லத் தொடங்கும் போதே அவன் கொடை நல்கத் தொடங்கிவிடுவான்.

பாணர் முதலியோர்க்கு அவன் உண்டி முதலியன கொடுத்தல்

 

காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇப்
பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக்
காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட்

240

பனுவலின் வழாஅப் பல்வே றடிசில்
வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்த்த
விளங்கதிர் ஞாயி றெள்ளூந் தோற்றத்து
விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி
யானா விருப்பிற் றனின் றூட்டித்

245



முதலில் புத்தாடை உடுத்திக்கொள்ளச் செய்வான். அது மூங்கிலில் உரியும் தோல் போல் இருக்கும். பாம்பு வெகுண்டால் கடிக்கும். கடிபட்டவர் வாயில் நுரை தள்ளும். அந்த நுரையைப் போல நுதிக்கும் அரிசிச் சோற்றுக் கஞ்சித் தேறலை நல்குவான். ( இது இக்காலத்தில் உணவிடுவதற்கு முன்பு வழங்கப்படும் சூப் போன்றது. ) பின்னர் பொன் வட்டிலில் அடிசில் படைக்கப்படும். ஒளி மிக்க வானத்தில் கோளும் மீனும் சூழ்ந்து விளங்குவது போல பொன்வட்டில்களைப் பரப்பி அதில் உணவு அளிக்கப்படும். கறிகாய்க்கூட்டுப் பொறியலுடன் கூடிய உணவுக்கு அடிசில் என்று பெயர். அந்த அடிசில் முன்னோன் ஒருவன் எழுதிய சமையல் நூலில் கூறப்பட்டுள்ள முறைமையிலிருந்து சற்றும் வழுவாமல் சமைக்கப்பட்டது. அந்த ஒருவன் தனது அம்பை எய்து காட்டை எரியூட்டியவன். அவன் எய்த அம்பு பிளவுபட்ட கவட்டை முனை கொண்டது. அவன் தன் தோளின் பின்புறம் அம்பறாத் தூணியை அணிந்திருந்தான். மலர்ந்த பூமாலைக் கச்சத்தைத் தன் இடுப்பில் கட்டியிருந்தான். இவனது அண்ணன்தான் அடிசில் நூலின் படைப்பாளி. இவன் பனிவரை மார்பன் என்று சிறப்பித்துக் கூறப்படுபவன். அவன் தன் நூலில் சமையல் கலையின் நுட்பங்களைக் குறிப்பிட்டிருந்தான். (சமையல் நூலின் ஆசிரியன் யார் என்பது விளங்கவில்லை, கா எரியூட்டியவன் அருச்சுனன் அவன் அண்ணன் வீமன் சமையல் கலையில் வல்லவன் என்றும் கூறப்படிகிறது. ) கா எரியூட்டியவன் நளன் என்றால் அவனது அண்ணன் சமையல் நூலை எழுதியவன் என முனியும். இந்த சமையல்நூல் குறிப்புகளில் பழகிச் சமைத்த உணவை நல்லியக்கோடன் தானே முன்னின்று உங்களுக்கு ஊட்டுவான். ஊட்டுவதில் அவனுக்கிருந்த ஆசை நிறைவடைவதே யில்லை. இன்னும் ஊட்டியிருக்கலாம் , இப்படி இப்படியெல்லாம் ஊட்டியிருக்கலாம் என்று தனக்குத்தானே குறைபட்டுக் கொள்ளும் ஆசை கொண்டவன்.

நல்லியக்கோடன் அளிக்கும் பரிசில்

 

திறல்சால் வென்றியொடு தெவ்வுப்புல மகற்றி
விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி
நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின்



நயவர்கள் எனப்படுவோர் பகைவர்களை அகன்றோடச் செய்தும், வேல் வலிமை மிக்க மன்னர்களின் கோட்டையைத் தாக்கியும் தன் திறமை மிகுதியால் வெற்றி கண்டவர்கள். இப்படித் தன்னை நயந்து தனக்குத் துணையாக இருக்கும் நயவர்களுக்கும், பாணர்களுக்கும் ஊட்டுவான். பரிசும் வழங்குவான்.

வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு
பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி

250

யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக்
கூருளி பொருத வடுவாழ் நோன்குறட்
டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு
சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத்
ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல

255

வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக்
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு
மாசெல வொழிக்கு மதனுடை நோன்றாள்
வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ

260

யன்றே விடுக்குமவன் பரிசின், மென்றேட்

 



பரிசில் பெறுவதற்காகக் காத்திருக்க வைக்காமல் அன்றே பரிசில் நல்கி அனுப்பி வைப்பான். பரிசுப் பொருள்களையும் உங்களையும் பாண்டில்-வண்டியில் ஏற்றி அனுப்பி வைப்பான். அவன் தரும் பரிசுப் பொருள்கள், வீரர்களின் திறத்தால் பெற்றவை. இது மாடு பூட்டிய பாண்டில் நல்லியக்கோடன் பரிசிலுடன் ஏற்றி அனுப்பிவைப்பது குதிரை பூட்டிய பாண்டில் பாண்டில் (கூட்டுவண்டி) அவற்றைப் பரிசில் பொருள்களாக ஏற்றி அனுப்பிவைக்கும் வண்டி கார்மேகம் கவிந்த வானத்தில் பால்கதிர் பரப்பிக்கொண்டு உலாவரும் மதியம் போலச் செல்லும். வண்டிச் சக்கரத்தின் ஆரைக்கால் குடத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அந்தக் குடம் கூர் உளிக் குறடு கொண்டு செதுக்கிய வேலைப்பாடு கொண்டது. இப்படிச் செதுக்கியவர் கருந்தொழில் வினைஞர். இது கைத்திறத் தொழில் (கைவினை). முருக்கம் பூ பூத்திருப்பது போன்ற வேலைப்பாடுகள் சக்கரக் குடத்திலும், பாண்டில் வண்டி மூடாக்கிலும் உண்டு. பாண்டில்-வண்டிப் போர்வைத் துணியிலும் சிவப்புத் துணிக் கலைத்தொழில் நிறைந்திருக்கும். குதிரை பூட்டிய அந்தப் பாண்டில்-வண்டியை ஓட்டிச் செல்ல ஓட்டிப் பழக்கப்பட்ட பாகனையும் அவனே அனுப்பி வைப்பான். பாண்டிலானது வாள் போன்ற முகப்புத் தோற்றம் கொண்டிருக்கும். போகும்போது நடந்து செல்கிறீர்கள். வரும்போது தேரில் வருவீர்கள்.

நல்லியக்கோடனது புகழும் பண்பும்

 

டுகிலணி யல்குற் றுளங்கியன் மகளி
ரகிலுண விரித்த வம்மென் கூந்தலின்
மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித்
துணிமழை தவழுந் துயல்கழை நெடுங்கோட்

265

டெறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்
செல்லிசை நிலைஇய பண்பி
நல்லியக் கோடனை நயந்தனிர் செலினே.

 



குறிஞ்சிக் கோமான் - குறிஞ்சிக் கோமான் என்று சிறப்பிக்கப்படுவதால் நல்லியக்கோடன் மலைநாட்டுத் தலைவன் என்பது புலனைகிறது. மனிதப் பெண் - மகளிர் இடுப்புறுப்பு துளங்கும். அது துளங்கும் நொடிப்பிற்கு ஏற்ப அதன்மேல் துகிலாடை. அம்மகளிர் குளித்தபின் தம் கூந்தலை அகில் கட்டை புகையும் நறுமணப் புகையில் உலர்த்துவர். மயில் பெண் - மயிலானது மகளிரின் துகிலாடை உடுத்திய இடையைப்போலத் தன் தோகையை விரித்து ஆடும். அவர்களின் கூந்தலுக்குள் அகில் புகை நுழைவது போல் மஞ்சு எனப்படும் வெண்மேகக் குருட்டு மாசிகள் மயில் விரித்தாடும் தோகைக்குள் நுழையும். மலைப்பெண் - அவனது மலையாகிய பெண் மூங்கில் காட்டைத் தன் இடைத்துகிலாக உடுத்தியிருப்பாள். அம் மூங்கில் காடு காற்றில் அசைந்தாடும்போது மழை பொழியும் மேகத்துணி அதில் அசைந்தாடும். இந்த மூன்று ஆட்டங்களும் ஒத்திசைக் கூட்டித் தருவது போல் இடியிசை முழக்கம் இருக்கும். அது அவனது மலைமுகட்டில் மோதி எதிரொலித்து இறந்துபோகும்.

குறிஞ்சிக் கோமானாகிய நல்லியக்கோடன் கொய்துக் கொண்டுவந்த தளிர்மாலையைத் தன் அடையாளப் பூவாகத் தலையில் அணிந்திருப்பான். (அந்தத் தளிர்மாலையை மருக்கொழுந்து மாலை என்றோ, மாந்தளிர் மாலை என்றோ கருதிப் பார்க்கலாம். ) ஒருவருக்கு அவர் வாழும் காலத்தில் செல்லுபடியாகும் புகழிசை நாளடைவில் மறைந்து போகும். நல்லியக்கோடனின் புகழிசை\யோ என்றும் நிலைபெற்றிருக்கும். காரணம், அது அவனது பண்பினால் வந்தது. கொடை நல்கி வாங்கியது அன்று. அவனிடம் நீங்கள் விரும்பிச் சென்றால் உங்களது வாழ்க்கையானது வளம் பெறத்தக்க வகையில் பரிசில் பெறுவீர்கள். போகும்போது நடந்து செல்லும் நீங்கள் வரும்போது தேரில் வருவீர்கள்.

சிறுபாணாற்றுப்படை முற்றும்.



சிறுபாணாற்றுப்படை நூலின் முடிலில் இரண்டு வெண்பாப் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை பத்துப்பாட்டு என்னும் தொகுப்பினைச் செய்தவர் காலத்தவை. சுமார் 200 ஆண்டுகள் பிற்பட்டவை. இரண்டும் அகப்பொருள் சார்ந்த பாடல்கள். பெண் ஒருத்தி நல்லியக்கோடன் மீது காதல் கொண்டு சொல்வதாக அமைந்துள்ளன.

தனிப் பாடல்கள்

 

அணி இழையார்க்கு ஆர் அணங்கு ஆகி, மற்று அந் நோய்
தணி மருந்தும் தாமே ஆம் என்ப-மணி மிடை பூண்
இம்மென் முழவின் எயிற்பட்டின நாடன்
செம்மல் சிலை பொருத தோள்.

1



நேர்த்தியான அணிகலன்களைப் பூண்ட பெண்மணிகளை வருத்தும் அழகு கொண்டு காமநோய் உண்டாக்கும் ஆண்தெய்வமாக எயிற்பட்டின நாடன் திகழ்கிறான். மற்று, அவனே அந்த நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் விளங்குகிறான். அவர்களை வருத்தியவை அவனது செம்மாந்த தோள். சிலை (வில்) மாட்டிக்கொண்டிருக்கும் தோள். மணி பதித்த பூண் அணிந்த தோள். இம்என்று அருவி முழங்கும் நாடன் அவன்.


நெடு வரைச் சந்தனம் நெஞ்சம் குளிர்ப்பப்
படும், அடும் பாம்பு ஏர் மருங்குல்-இடு கொடி
ஓடிய மார்பன் உயர் நல்லியக்கோடன்
சூடிய கண்ணி சுடும்.

2



சந்தனம் பூசிய அவனது மார்பு அவளது நெஞ்சத்தைக் குளிரவைத்தது. படமெடுத்தாடும் பாம்பு போன்ற அவளது அல்குல் இடையை மறைத்துக்கொண்டிருக்கும் கொடியாடையை நழுவும்படிச் செய்கிறான். அவன் தலையில் சூடிய கண்ணிமாலை அவளைச் சுட்டெரிக்கிறது.

*-*-*-*-*

 

 

 

 திணைகள்

1. வெட்சித்திணை:  பகைவருடைய ஆநிரைகளைக் கவர்தல்

2. கரந்தைத்திணை:  அவ்வாறு  பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை அவற்றின் உடைமையாளர் மீட்பது

3. வஞ்சித்திணை: பகைவரது நாட்டைக் கவரும் நோக்குடன் போர் தொடுப்பது

4. காஞ்சித்திணை:  அவ்வாறு  படையெடுத்து வந்த பகைவரை எதிர்கொண்டு மோதுவது

5. உழிஞைத்திணை: பகைவரது கோட்டை மதிலைச் சுற்றி வளைப்பது

6. நொச்சித்திணை:  பகைவருக்கு எதிராகத் தம்முடைய மதிலைக் காத்து நிற்பது

7. தும்பைத்திணை: பகைவரோடு எதிர்த்துப் போரிடுவது

8. வாகைத் திணை: போரில் வெற்றி பெறுவது

9. பாடாண்திணை:  ஒருவனுடைய புகழ், கொடை, வலிமை, சிறப்பு ஆகியன குறித்துப் பாடுவது

10. பொதுவியல்:  மேற்கூறிய எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவதுடன், பொதுவாக உள்ளவனவாக, அவற்றுள் கூறப்படாதவற்றையும் கூறுவது

11. கைக்கிளை:  ஆணோ பெண்ணோ கொள்ளும் ஒரு பக்கநட்பு, அதன் சிறப்பு  

12. பெருந்திணை: ஆணோ பெண்ணோ கொள்ளும் பொருந்தாக் காமம், நட்பு  ஒழுக்கம்

 

 

 


0 comments:

Powered by Blogger.

  © Free Blogger Templates Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP