Tuesday, December 31, 2013

தமிழ் நாவல்களில் முதியோர் சிக்கல்


தமிழ்  நாவல்களில் முதியோர் சிக்கல்

                             கட்டுரையாளர்    இரா.செந்தமிழ்ச்செல்வி
     முனைவர் பட்ட ஆய்வாளர்,அரசுகலைக்கல்லூரி,சேலம்–7.
(நெறியாளர்- முனைவர் ஜ.பிரேமலதா, தமிழ் இணைப் பேராசிரியர்,அரசு கலைக் கல்லூரி,சேலம்-7.)

 முன்னுரை

                        முதுமையானது அறிவியலால் வெல்லப்படாத ஒரு இயற்கை நியதி. இறப்புக்கு ஒரு முன்னோடியாக அமையக் கூடியது முதுமை. முதுமை பற்றிய சிந்தனை இன்று அல்லது நேற்று தொடங்கியது அன்று. இது ஒரு வளர்ந்து வரும் அறிவியல் துறை ஆகும்.   ஹிப்போகிரேட்ஸ்  , ஜெனோபேன் , செனெகா  , புளுடார்க்  , முதலிய தத்துவ மேதைகளும் கவிஞர்களும் முதுமையைப் பற்றிச் சிந்தித்துள்ளனர்.



                       வயது முதிர்ந்த நிலையைக் குறிக்கும் பருவம் முதுமைப் பருவம் ஆகும். பொதுவாக நாற்பது வயதில் முதுமை தொடங்குகிறது என்பது மருத்துவக் கருத்து ஆகும். (சென்னைத் தொலைக்காட்சி , உச்சி முதல் பாதம் வரை, 13.3.90 ) முப்பதுக்கு மேற்பட்ட பிராயம் உள்ளவன் முதுமகன் என்பதை ‘தமிழ்ப்பேரகராதி’ (தொகுதி 6, பக். 3266) சுட்டுகிறது. நாற்பத்தெட்டு வயதுக்கு மேல் அறுபத்து நான்கு வயதுக்கு உட்பட்ட மனிதன் ‘மூத்தோன்’ எனவும் , முப்பத்திரண்டு வயதுக்கு மேல் நாற்பது வயதுக்கு உட்பட்ட பேரிளம் பெண்கள் ‘முதுபெண்டு’ எனவும் , ஐம்பத்தைந்து வயது கடந்தவர் ‘விருத்தை’ எனவும் வகைப்படுத்துவதை ‘பன்னிருபாட்டியல்’ ( செய். 135 : 1970 ) மூலம் அறிய முடிகிறது .



                       இந்த நூற்றாண்டில் வளர்ச்சி பெற்று வரும் அறிவியல் துறைகளுள் ஒன்றாக மூப்பியல் துறை விளங்குகின்றது. இத்துறையானது முதுமைப் பருவத்தில் ஏற்படும் உடல் , உள்ளம் சார்ந்த சிக்கல்களை அறிந்து அவற்றிற்குரிய தீர்வுகளைக் காணும் வகையில் அமைந்துள்ளது.            முதுமையைப் பற்றி இலக்கியம் , உளவியல் , உடலியல் , சமுதாயம் , சமயம் , தத்துவம் போன்ற பல நிலைகளில் அணுகிக் கற்க முடியும். இத்துடன் தொடர்புடைய பரிமாணத்தில் முதியோர் என்பதனையும் இணைத்து எண்ண முடியும்.



முதியோருக்கு ஏற்படும் உடல் சார்ந்த சிக்கல்கள்


                        நாகரிக மோகம் ,  கூட்டுக் குடும்பச் சிதைவு போன்ற காரணங்களால் முதியோருக்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன. முதியோர் கவனிப்பாரின்றி தனிமைப்படுத்தப்படும்போது அவர்கள் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த சிக்கல்களைச் சந்திக்கின்றனர்.          கள்ளிக் காட்டு இதிகாசம் , தகனம் , வாங்கல் , அளம் , கீதாரி , வேரடி மண் , இலை உதிர் காலம் , பெருந்திணை ஆகிய நாவல்கள் வழி முதியோருக்கு ஏற்படும்  உடல் சார்ந்த சிக்கல்களை இக் கட்டுரை ஆய்கின்றது.                 

                      முதியோருக்கு 1. இயலாமை 2. இருப்பிடம் 3. பிறரை எதிர்பார்த்தல் 4. நோய்                    5. பிறருக்காக உழைத்தல் 6. உழைப்பை உறிஞ்சுதல் போன்ற காரணங்களால் உடல் சார்ந்த சிக்கல்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதை இக் கட்டுரை விளக்குகின்றது.

இயலாமை

                       முதியவர்களின் இயலாமை அவர்களுக்குப் பெரிய சிக்கலாக அமைகிறது. தன்னைத்தானே கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் முதியோர் பலர் வாழ்கின்றனர்.             சில சமூகத்தில் முதியோர் அவர்களின் முதுமை காரணமாக வேலை செய்ய இயலாத நிலையில் இருக்கும்போது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட்டு உணவாக்கிக் கொள்ளப்படுகின்றனர்.     """" ஒரு காலத்தில் வடக்கு சுமத்திராவில் வாழ்ந்த மக்கள் தங்களுடைய சொந்த பெற்றோரே மூப்படைந்து வயல்களில் வேலை ஏதும் செய்ய முடியாதவர்களாக ஆகிவிடும்போது அவர்களையே தங்கள் உணவாக்கிக் கொண்டு விடுவார்களாம்.""(திலகவதி.2005:108)

                      முதியோருக்கு ஏற்படும் உடல் சார்ந்த சிக்கல்களில், முதியோரால் எதுவும் செய்யமுடியாத இயலாமை நிலை அவர்களை பெரிதும் பாதிக்கிறது. ‘தகனம்’ என்ற நாவலில் , ‘இருசப்பன்’என்கிற முதியவர் பிணங்களை எரிக்கும் தொழில் செய்பவர். தொடர்ந்து பிணங்களை எரிப்பதால் சாம்பல் கண்ணில் பட்டு கண் பாதிக்கப்படுகிறது. கண் சரியாகத் தெரியாததால்  நடந்து செல்லும்போது தடுக்கி விழப்போன அவரை,  அவரது மகன் சின்னராசு தாங்கிப் பிடிக்கிறான். அப்போது சின்னராசுவிடம் , """" இன்னும் எத்தினி நாளுக்குப் பார்வை இருக்கும்னு தெரியல்ல ... கண்ணு அவிஞ்சி போயி அப்பனுக்கு வாரிசா பக்கத்துல குந்தப் போறேனோ என்னவோ? மிஞ்சிப்போனா ரெண்டுவருஷம். சாம்பல் அடிச்சு அடிச்சுக் கண்ணு போனதுதான் மிச்சம் ..."" (தகனம்: பக் . 20) என்று இருசப்பன் புலம்புகிறார். வயதான நிலையில் கண்ணும் தெரியாமல் போய் விட்டால் மீதி உள்ள வாழ்நாட்களை எவ்வாறு கழிப்பது என்ற மனக்கவலை இயலாமை காரணமாக இருசப்பனுக்கு ஏற்படுகிறது.

                       இது , பின்வரும் புறநாநூற்றுப் பாடல் வரிகளின் கருத்தோடு ஒப்புநோக்கத் தக்கதாக இருக்கிறது. பெருஞ்சித்திரனார் என்ற புலவர் முதுமையுற்ற அவரது தாயின் இயலாமையை ,


                                   """"... ... ... ... ... ... கண்துயின்று

                             முன்றிற் போகா முதிர்வினள் யாயும்""  (புறம்:159.4-5)

என்று குறிப்பிடுகிறார். இதனால் முதுமையில் இயலாமை ஏற்படுவதை அறியலாம் .


இருப்பிடம்



                      வயதான காலத்தில் முதியோர் சிலர் இருக்க இடம் இன்றித் தவிக்கின்றனர். பெற்ற பிள்ளைகளுக்கு வீட்டையும் , சொத்தையும் பிரித்துக் கொடுத்த நிலையில் அவர்கள் வாழ்ந்த வீட்டிலேயே வாழ வழியில்லாமல் துன்பப்படுகின்றனர்.


                                                """"தாவாரம் இல்லை , தனக்கொரு வீடில்லை

                                                  தேவாரம் ஏதுக்கடி? – குதம்பாய்

                                                  தேவாரம் ஏதுக்கடி?""  (கன்னியப்பன். சிவ ,1997:138)

என்ற குதம்பைச் சித்தர் பாடல் இவர்களின் நிலையை நினைவூட்டுகிறது. இதனால் வயதானவர்கள் முதியோர் இல்லங்களை நாடிச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

முதியோர் இல்லங்களுக்குச் செல்பவர்கள் பற்றி , 

¬     """" பிள்ளைகளால் புறக்கணிக்கப் பட்டவர்கள்

¬        பிள்ளைகளுக்கும் , உறவினர்களுக்கும் தங்களால் தொந்தரவு வேண்டாம் என்று      

¬        நினைக்கும் முதியவர்கள்

¬        பிள்ளைகள் இல்லாத முதியவர்கள்

¬        பிள்ளைகள் அயல்நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் முதியோர் இல்லத்தை நாடுபவர்கள்

¬        கணவனை , பிள்ளைகளை இழந்த மனைவி , தாய்

¬        மனைவி , பிள்ளைகள் இல்லாத கணவன் , தந்தை ""



ஆகியோர் முதியோர் இல்லங்களுக்குச் செல்கின்றனர் என்று டாக்டர் வி.எஸ். நடராஐன் ( 2008:126-127) குறிப்பிடுகிறார். இவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ முதியோர் இல்லங்களுக்குச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.


                       சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு முதியோர் இல்லம் என்ற வார்த்தையே நமக்கு சற்று புதியதாக இருந்தது. ஆனால் தற்பொழுது முதியோர் இல்லங்களைப் பற்றி பத்திரிக்கையில் விளம்பரம் செய்யும் அளவுக்கு எல்லோரும் அறிந்த ஒன்றாக ஆகிவிட்டது.


                      முதுமைக் காலத்தில் முதியோர் அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே வாழ விரும்புகின்றனர். புதிய இடங்களுக்குச் செல்ல விரும்புவதில்லை. இருப்பிடம் குறித்த பயமே அதற்குக் காரணமாகும்.     ‘வாங்கல் ’என்ற நாவலில் முதியவர்களின் இத்தகைய எண்ணங்களை வெளிப்படுத்துபவராக ‘மின்னடிச் சாம்பான்’ என்ற முதியவரைப் பார்க்க முடிகிறது. மின்னடிச் சாம்பானின் முதலாளியான கைத்தானிப் பிள்ளை சாம்பானிடம் , """" ஏலேய் சாம்பான் இங்க வா. நம்ம நெலத்துல ஒரு வூட்டக் கட்டித்தாறேன். புருஷனும் பொஞ்சாதிமா வந்து உட்கார்ந்துக்காங்க! என்று கூப்பிட்டார்.சாம்பான் ஒரேடியாக மறுத்துவிட்டார் ... ... ... காலம் பூரா தாய்புள்ளகளோட இருந்தாச்சி ... ... ... மொதலாளி. இனிம என்ன ஊரு இருக்கிற கொஞ்ச நாளைக்கும் அங்கினியே இருந்துட்டு போக வேண்டியதுதான் ... ... ... ""                   (வாங்கல் :பக். 17) என்று கூறுகிறார்.                       வயதான காலத்தில் தனித்து வாழாமல் அவர்களுடைய இனத்தவர்களோடு சேர்ந்து வாழவே மின்னடிச் சாம்பான் போன்ற முதியவர்கள் விரும்புகின்றனர் என்பதை வாங்கல் என்ற நாவல் சுட்டிக் காட்டுகிறது.

பிறரை எதிர்பார்த்தல்



                       முதியோர் தங்களின் தேவைகளை தாங்களே நிறைவு செய்து கொள்ள இயலாத நிலையில் பிறரை எதிர்பார்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். சமூகத்தில் வசதியாக வாழும் குடும்பம் , நடுத்தரக் குடும்பம் , உழைத்து வாழும் எளிய குடும்பம் , வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பம் ஆகிய அனைத்துக் குடும்பங்களிலும் இந்த சிக்கல் முற்றுப் பெறாத கதையாகத் தொடர்கிறது. முதியவர்கள் அவர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு , உடை , உறைவிடம் போன்றவற்றுக்காகவும் , உடலில் நோய் ஏற்பட்டால் உதவி செய்வதற்கும் பிறரை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர்.



                      இயலாமை , பொருளாதார நிலை போன்ற காரணங்களுக்காகப் பிறரை எதிர்பார்க்கும் நிலையில் உள்ள முதியவர்களை ‘தகனம் ’, ‘வாங்கல்’ ஆகிய நாவல்களில் பார்க்க முடிகிறது.
                       வயதான காலத்தில் கவனிப்பாரற்று கிடக்கும் நிலையில் உள்ள ஒவ்வொரு முதியவரும் பிறரை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். ‘தகனம்’ என்ற நாவலில் இயலாமை காரணமாக சின்னராசுவின் தாத்தா , அவருடைய ஆசையை பேரன் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவர் , பேத்தி ராணியின் சடங்குக்கு சில்க் வேட்டி கட்டிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய ஆசையை மகனும் ,மருமகளும் நிறைவேற்றாத நிலையில் பேரன் சின்னராசு நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.அவர் சின்னராசுவிடம் , """"சின்னராசு . . . . . . ‘எனக்கொரு ஆசை குதியாட்டம் போடுது. உங்கப்பன் கிட்ட சொல்லுதியா . . . . .!’ ‘என்ன சொல்லுத தாத்தா ? நானா?’ ம். நாஞ்சொன்னா நாயாப் பாயறான். உங்கம்மாக்காரியும் ஒத்து ஊதறா. எனக்கு ஸிலுக்கு வேட்டி எடுத்துத் தரச் சொல்லுடா . . . . . எம் பேத்தி சடங்கு வேட்டின்னு சந்தோஷமாய்க் கட்டிப்பேன். கட்டைல போறவனுக்கு ஒரு மொழத்துண்டு போதும்னு விட்டுடாம . . . . "" (தகனம் :பக். 39-40) என்று சின்னராசுவின் தாத்தா அவருடைய ஆசையைப் பேரன் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். முதியோரின் விருப்பத்தை நிறைவேற்றும் கடமை இளைய சமுதாயத்தினருக்கு இருக்கிறது.  """"இன்னும் அவர்கள் உயிரோடு இருக்கப்போவது ஒரு சில ஆண்டுகள் தான். அதுவரை அவர்கள் தங்கள் விருப்பப்பட்டபடி வாழ்ந்து விட்டுத்தான் போகட்டுமே. அவர்களுக்குத்  தேவையானதை வாங்கிக் கொடுத்து அவர்கள் சொல்லைக் கேட்டு நடந்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் பொறுப்பு இளைய தலைமுறையினருக்கு உண்டு. ""  (நடராஜன்.வி.எஸ் ,2008:123)



                       ‘வாங்கல்’ என்ற நாவலில் வரும் முதியவர் பொருளாதார நிலை காரணமாகப் பிறருடைய உதவியை எதிர்பார்ப்பதைக் காண முடிகிறது. இந்த நாவலில் முதியவர் மின்னடிச் சாம்பான் அவரது பேரன் பக்கிளுக்கு வேலை தருவதாகக் கூறிய அவருடைய முதலாளியிடம் உதவியை எதிர்பார்க்கிறார். சாம்பான் முதலாளியிடம் , """"மொதலாளி இது நம்ம பேரப்புள்ளதான். நீங்க ஆளு வேணும்னுச் சொன்னீங்களே அதான் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன்."" (வாங்கல் :பக். 18) என்று கூகிறார். இதனால் மின்னடிச் சாம்பான் முதலாளியான தாமஸ்பர்னாந்திடம் உதவியை எதிர்பார்க்கும் நிலையை அறியலாம்.
இயலாமை மற்றும் பொருளாதார நிலை போன்றவற்றுக்காக பிறரை எதிர்பார்க்கும் நிலையில் முதியோர் உள்ளனர் என்பதை ‘தகனம்’ , ‘வாங்கல்’ ஆகிய நாவல்கள் வெளிப்படுத்கின்றன.



நோய்

                        முதியோருக்கு ஏற்படும் உடல் சார்ந்த சிக்கல்களுக்கு நோயும் ஒரு காரணமாகும் .        

               நோய் தீர்க்கும் முறையினைக் கவிஞர் வைரமுத்து தன்னுடைய கவிதையில்,
"""" யோகம் என்பது

  வியாதி தீர்க்கும்

                       வித்தை என்று சொல்லுங்கள்

                       உயிர்த்தீயை உருட்டி உருட்டி

     நெற்றிப் பொட்டில்

                                                   நிறுத்தச் சொல்லுங்கள்  (வைரமுத்து.2004:496)

என்று கூறுகிறார்.

                          முதுமையில் நோய் ஏற்படுதல் மிகுந்த துன்பம் அளிக்கக்கூடிய ஒன்றாகும். வயதான நிலையில் உடலும் உள்ளமும் தளர்வு அடையும் போது நோயின் தாக்கமும் சேர்ந்து கொள்வதால் முதியோரின் நிலை பரிதாபத்துக்கு உரியதாகிறது. ‘தகனம்’ என்ற நாவலில் சிதையுடன் புகையை நுகர்வதனால் முதியவரான இருசப்பனின் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. """"   ‘மாத்திரை சாப்பிடலியா? இவ்ளோ இருமற . . .’என்று கேட்ட மகன் சின்னராசுவிடம் , ‘ப்ச . . . மருந்துக்கு கேக்கிற நோவு இல்ல இது , பரம்பரை நோவு , உங்க தாத்தாவையும் காசம்தானே அரிச்சிட்டிருக்கு . . .வாரிசுக்கும் வந்தாச்சு சுடுகாட்டு புகைக்கு ஆஸ்த்துமா தானே தோஸ்த்து’  "" (தகனம் :பக். 4) என்று இருசப்பன் கூறுகிறார். செய்யும் தொழில் காரணமாகவும் முதுமையில் காச நோய் தாக்கும் என்பதை இதனால் அறியலாம். இது அருணகிரிநாதரின் கருத்தோடு ஒப்புநோக்கத்தக்கது. அருணகிரிநாதர் முதுமையில் தோன்றும் பலவிதமான நோய்களை அடுக்கிக் காட்டுகிறார்.


                                   """" சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு

                                     சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல்

                                      சூழலுற மூலகசு மாலமென நாறியுட லழிவேனோ""  (திருப்புகழ்:987 கழகம் , 1974)



                        நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டியதன் இன்றியமையாமையை திருமூலர் வலியுறுத்துகிறார்.


                                   """" உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

                                     திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டா

                                     உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

                                     உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே! ""  (சம்பந்தம்.2004: 246)

                       உடம்பு அழிந்தால் அதை நிலைக்களமாகக் கொண்ட உயிரும் அழியும். ஆதலால் உடலைப் பாதுகாப்பது இன்றியமையாதது என்று திருமூலர் கூறுகின்றார்.          எனவே முதியோர் நோயின்றி ஆரோக்கியமாக வாழ உடல்நலத்தைப் பேணி காப்பது அவசியம்.


பிறருக்காக உழைத்தல்

                         வயதான காலத்திலும் முதியோர் சிலர் அவர்களைச் சார்ந்து வாழும் குடும்பத்தினருக்காக உழைக்கின்றனர்.மனைவி , பிள்ளைகள் , பேரக்குழந்தைகள் போன்ற குடும்ப உறுப்பினர்கள் முதியோரைச் சார்ந்து வாழும் நிலையை , ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘அளம்’, ‘வேரடிமண்’, ‘கீதாரி’, ‘இலை உதிர் காலம்’ , ‘பெருந்திணை’ ஆகிய நாவல்கள் வெளிப்படுத்துகின்றன.



                       ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நாவலில் முதியவர் பேயத்தேவரின் மனைவி அழகம்மா , மகள்கள் செல்லத்தாயி , மின்னலு , பேரன் மொக்கராசு ஆகியோர் அவரைச் சார்ந்து வாழ்கின்றனர். அதனால் அவர் முதுமையிலும் ஓய்வு எடுத்துக்கொள்ள முடியாமல் உழைக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.  """"கண்ணுக்கெட்டிய தூரம்வரை கானல் அலைகள் கதகதவென்று காய்ந்துகொண்டிருந்த அந்த முன்கோடை மாதத்தில் வெயிலை நிலா வெளிச்சமாய்க் கருதி உழுது கொண்டிருந்தார்கள் இரண்டு ஏர்க்காரர்கள்.முன்னேர்க்காரர் பேயத்தேவர்; தாத்தா. பின்னேர்க்காரன் மொக்கராசு ; பேரன். "" (கள்ளி :பக்.16) இவ்வாறு முதுமையிலும் வயலில் பேயத்தேவர் உழைத்துக் கொண்டிருப்பதை நாவலில் காண முடிகிறது.   மொக்கராசுவின் தாய் செல்லத்தாயை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்ள ஒச்சுக்காளை முன்வருகிறான். கைம்பெண்ணாகிய மகளை எப்படியாவது கரையேற்ற வேண்டும் என்று எண்ணிய பேயத்தேவர் , """" மொக்கராசை நானே வளர்க்கிறேன். "" (மேலது :பக். 52) என்று கூறுவதிலிருந்து வயதான காலத்தில் பேரன் என்கிற இன்னொரு சுமையையும் சுமக்க வேண்டிய நிலையில் அவர் இருப்பதை அறியலாம். பேயத்தேவரின் இரண்டாவது மகள் மின்னலு, கந்துவட்டிக்காரனை வெட்டிக் கொன்றுவிட்டு அவள் கணவன் தலைமறைவாகி விட்டதால் கைக்குழந்தையுடன் பிறந்த வீட்டுக்கு வந்து சேர்கிறாள். """" இது வேறயா . . .? இந்த இத்துப் போன பேயத்தேவன் எத்தனையத்தான் தாங்குவேன்?"" (மேலது :பக்.201) என்று பேயத்தேவர் புலம்புவதிலிருந்து மேலும் கூடுதல் சுமையாக அவளுக்கும் சேர்த்து உழைக்கவேண்டிய நிலையில் அவர் இருக்கிறார் என்பதை நாவல் வெளிப்படுத்துகிறது .



                        ‘அளம்’ என்ற நாவலில் இளம் வயதில் பணம் சம்பாதிப்பதற்காகச் சுந்தராம்பாளின் கணவன் கப்பலில் ஏறிச் செல்கிறான் . அவன் மீண்டும் திரும்பி வராததால் சுந்தராம்பாள் , முதுமையில் அவளைச் சார்ந்து வாழும் மூன்று பெண் குழந்தைகளுக்காக உழைப்பதைக் காணமுடிகிறது.                """" உங்கப்பாரு இப்புடி பண்ணிப்புட்டு பெயிட்டாவொளே பொம்புளயா இருந்துக்கிட்டு என்னால ஒழக்க முடிஞ்சிச்சி . செருமப்பட முடிஞ்சிச்சி . ஒங்கள வளத்து ஆளாக்க முடிஞ்சிச்சி . ஊருசனம் பாத்து ஒரு சொல்ல சொல்லுறத்துக்குள்ள ஒன்ன கரயேத்த முடியலையே ""   (அளம் :பக். 59) என்று சுந்தராம்பாள் மூத்த மகளிடம் புலம்புகிறாள். அவளும் , அவள் கணவனும் சேர்ந்து செய்ய வேண்டிய கடைமைகளை அவள் ஒருத்தியே தனித்து நின்று செய்து முடிப்பதை நாவல் காட்டுகிறது .
           

                        ‘தினகரன்’ நாளிதழில் வெளியான செய்தி ‘அளம்’ நாவலுடன் ஒப்புநோக்கத் தக்கதாக இருக்கிறது. """" கல்யாணியின் கணவர் கணபதிக்கு வருமானம் போதாததால் குழந்தைகள் பசியால் வாட வறுமைக்கு வயிறு இரையாகிப் போனதை கல்யாணியால் சகிக்க முடியவில்லை . அதனால் பெண்கள் கடைக்குக் கூட வராத காலத்தில் டயர் பஞ்சர் ஒட்டுகிற கடையில் வேலைக்கு சேர்ந்தார் . கணவர் இறந்ததால் அப்பா , அம்மா இரண்டு பேருக்குமான கடைமையை முடித்துவிட்டார். மூன்று மகள்களுக்கும் , ஒரு மகனுக்கும் திருமணம் செய்து முடித்துவிட்டார். அதற்காக 33 வருடங்களாக பஞ்சர் ஒட்டிக் கொண்டு இருக்கும் கல்யாணிக்கு வயது 60.""  (வசந்தம் - தினகரன் இணைப்பு,                       11 .5. 2008 : 3)  


                       ‘வேரடிமண்’என்ற நாவலில் வரும் ‘அம்மாசி’ என்ற முதியவர் சமூகத்தின்    ஒடுக்கப்பட்ட , ஒதுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். அவரைச் சார்ந்து வாழும் அவருடைய மனைவி சாமியம்மாளுக்காகவும் , திருமணமாகாத மகள் சின்னாத்தாவுக்காகவும் வயது முதிர்ந்த நிலையிலும் அவர் உழைத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஊரில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக அம்மாசியின் உழைப்பெல்லாம் வீணாகியிருப்பதை அவர் கூற்று வெளிப்படுத்துகிறது. """" நொய்யரிசிக்கி கூட யோக்யதை அத்துப்போயி கெடக்கேடா பகவானே . . . . தைமாசத்துல அறுத்தாந்து குருதுல கொட்டுனா அடுத்த தையி வரைக்கும் சாப்பாட்டுக்கு பஞ்சமுல்லாம இருந்திச்சே இப்புடியா ஆவும் மனுச கதி . . . ""  (வேரடிமண் :பக். 68) அம்மாசியின் வீட்டிற்கு வந்து அவரது மைத்துனன் சின்னாத்தாவின் திருமணம் பற்றி கேட்டபோது , """"சின்னாத்தா கண்ணாலத்த முடிச்சிபுடணும்தான். கைல மடில ஒரு தம்புடி காசு இல்லியே என்னா பண்ணுவன் மச்சா?நம்பி நட்ட வயலும் சருகா கெடக்கு. "" (மேலது :பக். 172) என்று அம்மாசி கூறுகிறார். மகளின் திருமணத்திற்காக முதுமையிலும் அவர் உழைத்துக் கொண்டிருப்பதை ‘வேரடிமண்’ என்ற நாவல் காட்டுகிறது.

                         ‘கீதாரி’ என்ற நாவலில் வரும் ‘ராமு கீதாரி’ என்கிற முதியவர் , அவருடைய மனைவி இருளாயி இறந்த பிறகு மகள் முத்தம்மாளுடன் வாழ்கிறார். மகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த அவளது ஆடுகளைப் பராமரித்து வருகிறார். பகலில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருப்பதால் களைப்பு காரணமாக கிடையை காவல் காக்க முடியாமல் இரவில் உறங்கி விடுவோமோ என்று எண்ணுகிறார். """"எவ்வளவு அசதியானாலும் கீழே படுத்தால் தூங்கி விடுவோமென்று பயந்து இரவு நேரங்களில் நின்று கொண்டும் , நடந்து கொண்டுமே இருந்தார். "" (கீதாரி :பக். 172) இவ்வாறு ராமு கீதாரி இரவில் ஆட்டுக்கிடையைக் காவல் காத்தமையை நாவலில் பார்க்க முடிகிறது. மகளுக்காக முதுமையிலும் ஓய்வின்றி உழைக்கும் அவரது நிலையை ‘கீதாரி’ என்ற நாவல் சுட்டுகிறது.


                        ‘இலை உதிர் காலம்’ என்ற நாவலில் வரும் ‘ருக்குமணி அம்மாள்’ என்ற மூதாட்டி அவருடைய மகன் , மகள் இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்த பிறகு அவர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காததாலும் குடியிருப்பதற்கு பழைய வீட்டையே வாங்கியதாலும் , அந்தக் கடனை அடைப்பதற்கு முதிய வயதிலும் பிறர் வீடுகளுக்குச் சென்று சமையல் தொழில் செய்வதைப் பார்க்க முடிகிறது. """"- அந்தக் கடனைத் தீர்க்கத்தான் இப்ப வீட்டு வேலைக்கு இறங்கியிருக்கிறேன். . . . காலாம்பாற எழுந்து அவருக்குக் குளிக்க வெந்நீர் , பூஜைக்குத் தேவையானவை , சமைச்சு சாப்பாடு இதெல்லாம் ரெடியாக்கி வச்சுகிட்டுத்தான் இங்கே வாரேன் . . .  "" (இலை :பக். 53) என்று ருக்குமணி அம்மாள் சர்மாவிடம் கூறுவதால் அவர் முதுமையிலும் உழைக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் என்பதை ‘இலை உதிர் காலம்’ என்ற நாவல் காட்டுகிறது.

                                                                    

                          ‘தினகரன்’ நாளிதழில் வெளியான செய்தி இதனோடு ஒப்புநோக்கக் கூடியதாக இருக்கிறது. 73 வயதிலும் உழைத்து சாப்பிடும் மூதாட்டியைப் பற்றிய செய்தி வசந்தம் - தினகரன் இணைப்பிதழில் வெளியாகியுள்ளது . """" விருதுநகர்- மதுரை செல்லும் சாலையில் 73 வயது நிரம்பிய கலாவதி என்னும் மூதாட்டி பொம்மைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார். அவருடைய கணவர் இறந்த பிறகு பிள்ளைகளைப் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். தற்போது தனிமையில் இருப்பதாகவும், சிறிய வயதில் கற்றுக் கொண்ட பொம்மைத் தொழில் கை கொடுப்பதாகவும் கூகிறார். யார் கையையும் எதிர் பார்க்காமல் சொந்தக் காலில் நிற்பதாகவும், உழைத்து சாப்பிடுவதாகவும் கூறுகிறார்."" (வசந்தம் - தினகரன் இணைப்பு , 4.5.2008 :2)


                       ‘பெருந்திணை’ என்ற நாவலில் வரும் முதியவர் ஆறுமுகம் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். நான்கு பெண்பிள்ளைகளுக்குப் பிறகு ஐந்தாவதாகப் பிறந்த மகன் சாமிக்கண்ணுவை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அப்பள்ளி ஆசிரியரின் அறிவுரைப்படி மகனை நாகப்பட்டினம் அனுப்பி தொழிற்பயிற்சி கல்லூரியில் படிக்க வைக்கிறார். அதற்காக அவர் கடினப்பட்டு உழைக்க வேண்டியிருப்பதை நாவலாசிரியரின் கூற்று வெளிப்படுத்துகிறது. """"  இரண்டு வருசம் இரண்டு யுகமாத்தான். ராத்தூக்கம் ஏது? பக தூக்கம் ஏது? அதுக்கு தோதா அவருக்கு கிடைச்சிருந்தது சிவசங்கரன் பிள்ளை பண்ணை மாகாணம். அடங்கி ஒடுங்கி பண்ணைக்கி கட்டுப்பட்டு வேலை பாத்துக்கிட்டதாலதான் , ஆறுமுகம் ரொம்ப தயங்கி தயங்கி அஞ்சு பத்து கூடுதலா கேக்கும்போது கொடுத்தாங்க. அதுதான் ஆறுமுகத்துக்கு சுணக்கம் இல்லாம மவனை நாகபட்டினத்துக்கு அனுப்ப முடிஞ்சது ."" (பெருந் :பக். 8) முதியவர் ஆறுமுகம் அவர் மகனைப் படிக்க வைக்க கடினப்பட்டு உழைக்கிறார் என்பதை ‘பெருந்திணை’ என்ற நாவல் சுட்டுகிறது.                 ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘அளம்’, ‘வேரடிமண்’, ‘கீதாரி’, ‘இலை உதிர் காலம்’ , ‘பெருந்திணை’ ஆகிய நாவல்கள் முதுமையில் முதியோர் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் பிறருக்காக உழைப்பதை   வெளிப்படுத்துகின்றன.


உழைப்பை உறிஞ்சுதல்



                        முதியோரின் உழைப்பை பெற்ற பிள்ளைகளும், அவர்கள் வேலைபார்க்கும் இடங்களிலுள்ள முதலாளிகளும், மற்றவர்களும் இரக்கமின்றி உறிஞ்சிக் கொள்வதை நாவல்கள் பதிவு செய்துள்ளன. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘வாங்கல்’ ஆகிய நாவர்களில் இடம்பெறும் முதியோர் மற்றவர்களால் உழைப்பை உறிஞ்சிக் கொள்ளப்படுபவர்களாக இருக்கின்றனர். ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நாவலில் முதியவர் பேயத்தேவரின் மருமகனான ஒச்சுக்காளை , பேயத்தேவரின் மகள் செல்லத்தாயை அனுப்பி, திருமணத்தின் போது ஒப்புக் கொண்ட நகைகளை வாங்கி வரச் சொல்கிறான். அவரிடம் வந்து அழுத செல்லத்தாயிடம் பேயத்தேவர், """" தாயி! ஆத்தா சீக்குல கெடக்கா. அப்பன் மண்ணோட மல்லுக்கட்டிக்கிட்டிருக்கேன். இந்த அஞ்சாறு வருஷமா பொழப்பு பொழப்பாவா இருக்கு? சோளம் வெதச்சேன்; பொக்காப்போச்சு. நெலக்கடல போட்டேன் ; வெதக்கடலக்கே வல்ல. கம்பு வெதச்சேன்; மாட்டுக்குத் தட்டைதான் மிச்சம்."" (கள்ளி :பக். 63) என்று வயதான காலத்திலும் அவர் உழைத்துக் கொண்டிருக்கும் நிலையைக் குறிப்பிடுகிறார். வயதான காலத்தில் பேயத்தேவரின் உழைப்பு அவரது மருமகனால் உறிஞ்சிக் கொள்ளப்படுவதை வைரமுத்து தமது நாவலில் பதிவு செய்துள்ளார்.

                         ‘வாங்கல்’ என்ற நாவலில் முதலாளியான தொம்மை பர்னாந்து தொழிலாளியான முதியவர் மாரி நாடாரின் உழைப்பை உறிஞ்சுவதைப் பார்க்க முடிகிறது. தொம்மை பர்னாந்துக்கும் , மாரி நாடாருக்கும் இடையில் உரையாடல் நடைபெறுகிறது. """" ‘எங்க தேரில நூத்தி இருபது மரங்கதான் இருக்கு. அதுலயும் பத்து பதினைஞ்சி மரங்க காய்க்காது . மிச்சம் நூறு மரத்துக்கு கொறையா தான் தேறும். அதுக்கு தான் நீர் பதனீ இறக்கித் தரணும் . . . ’  ‘அதுக்கென்ன ஏறி இறங்கிடுவோம் மரத்துக்கு மூணு ரூபாக் கொடுக்க . . . ?’ ‘யோவ் . . . என்னையா . . . இப்டிச் சொல்லுறீரு . மரத்துக்கு மூணு ரூபாயா? அப்பம் ஒரு நாளைக்கு முன்னூறு ரூபா ஆச்சு?’ ""  (வாங்கல் :பக்.85) என்று  தொம்மை பர்னாந்து பணம் அதிகம் செலவாவதை எண்ணி கணக்குப் பார்க்கிறார்.


                        அதற்கு முதியவரான மாரி நாடார் , """"  ‘ நூறு மரங்கள் ஏறி இறங்கிறதுன்னா சும்மாவா? கூட ரெண்டாளுகள்ல கூட்டிக்கிட்டு வரணும். காலையில பதனீ இறக்கணும் . சாய்ந்திரம் ஏறி பால வெட்டணும். எங்கையும் அசைய முடியாது. வேல சரியா இருக்கும். ’ ‘நீர் சொல்றதெல்லாம் சரிதான். நானும் ஒம்ம வேலைய குத்தம் சொல்லல. உமக்கும் எமக்கும் பாதகமில்லாம நூத்தம்பது ரூபாய் வாங்கிக்காரும் . . . ’ ‘என்ன தம்பி ஒரேடியாக் கொறைச்சுட்டிங்க? ஊரை விட்டு ஊர் வந்திருக்கு. காட்டுல உக்காந்து பொங்கத் திங்கணும். ரொம்ப வேணாம் கூட ஒரு இருபத்தஞ்சு ரூபா கூட்டிக் கொடுங்க.’ ""(மேலது:பக். 85-86) என்று கேட்கிறார். பனையேறும் தொழிலாளியான முதியவர் மாரி நாடாரின் உழைப்பை முதலாளியான தொம்மை பர்னாந்து உறிஞ்சிக் கொள்வதை ‘வாங்கல் ’என்ற நாவல் பதிவு செய்துள்ளது.             ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘வாங்கல்’ ஆகிய நாவல்கள் முதியோரின் உழைப்பு உறிஞ்சப்படுவதை சுட்டிக்காட்டுகின்றன.

 முடிவுரை

                        நாவலாசிரியர்கள், முதுமை என்பது உடல் சார்ந்த சிக்கலை ஏற்படுத்தி பிறரை சார்ந்திருக்க வேண்டிய சூழலை ஏற்படுத்துகிறது என்பதை நாவல்களில் பதிவு செய்துள்ளனர். முதியோர் இளைய சமுதாயத்தினரை நாட வேண்டிய நிலையில் இருப்பதால், தம் உழைப்பை பிறர் உறிஞ்சுவதை அறிந்திருந்தும் சார்ந்து வாழ்பவர்களுக்காக உழைக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர் என்பதை இக் கட்டுரை தெளிவு படுத்துகின்றது.

துணைநூற்  பட்டியல்

1.அருணகிரிநாதர்.திருப்புகழ் கழகம் , சென்னை. மு.ப.1974


2.ஆண்டாள் பிரியதர்ஷினி .தகனம்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் ,

அம்பத்தூர் , சென்னை – 98.3 ம் பதிப்பு.20043. 

கன்னியப்பன். சிவ., (உ.ஆ)

சித்தர் பாடல்கள் – திரட்டும்  உரையும்

முல்லை நிலையம் , தி.நகர் ,

சென்னை – 17. மு.ப.1997


4.சம்பந்தம் .திருமூலரின் திருமந்திர விருந்து

திருவரசு புத்தக நிலையம் , தி.நகர் ,சென்னை – 17.  5 ம் பதிப்பு .2004

5.சோலை சுந்தரபெருமாள்.
பெருந்திணைபாரதி புத்தகாலயம் ,தேனாம்பேட்டை , சென்னை – 18.மு.ப.2005


6.   தமிழ்ச்செல்வி.சு.,
அளம்மருதா , எடமலைப்பட்டி புதூர் ,

திருச்சி – 12. மு.ப. 2002

7.தமிழ்ச்செல்வி.சு.,கீதாரிமருதா , ராயப்பேட்டை ,சென்னை – 14.மு.ப. 2003

8.   திலகவதி .    மூங்கில் திரைஅம்ருதா பதிப்பகம் , சக்தி நகர்,

போரூர் , சென்னை – 116.மு.ப. 2005

9. நடராசன். வி. எஸ்.,60 வயதுக்குப் பிறகு   நலம் , நியூ ஹாரிஸான் மீடியா (பி)லிட்,ஆழ்வார் பேட்டை , சென்னை – 18.மு.ப. 2008
10.பத்மநாபன் நீல.இலை உதிர் காலம்வானதி பதிப்பகம் , தி.நகர் ,சென்னை – 17. 2ம் பதிப்பு .2007
11.மாணிக்கனார் .அ ., (உ.ஆ)புறநானூறு - மூலமும் உரையும்

வர்த்தமானன் பதிப்பகம் , தி.நகர் ,சென்னை -17. மு.ப .1999

12.முத்து . சி.எம். ,வேரடி மண்மருதம் பதிப்பகம் , ஒரத்தநாடு.மு.ப.2003

13.  வைரமுத்து .கள்ளிக்காட்டு இதிகாசம்சூர்யா லிட்ரேச்சர் (பி) லிமிடெட் ,ட்ரஸ்ட்புரம் , சென்னை – 24.10 ம் பதிப்பு .2006

14.வைரமுத்து .வைரமுத்து  கவிதைகள் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிமிடெட் ,

ட்ரஸ்ட்புரம் , சென்னை – 24.

7 ம் பதிப்பு .200415.ஸ்ரீதர கணேசன் .வாங்கல்ஸ்நேகா , இராயப்பேட்டை ,

சென்னை – 14. மு.ப. 2001இதழ்1.தினகரன்     நாளிதழ்





 

0 comments:

Powered by Blogger.

  © Free Blogger Templates Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP