Friday, September 20, 2013

பெரியபுராணத்தில் இசைக்கலை

கட்டுரையாளர் து.பிரபா,
 முனைவர் பட்ட ஆய்வாளர்,
              அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
                சேலம் - 7.
(நெறியாளர்- முனைவர் ஜ.பிரேமலதா, 9488417411, தமிழ் இணைப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி,சேலம்-7.)
.

                                      பெரியபுராணத்தில் இசைக்கலை

                ஆதிகாலத்தில் மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்தபோது தங்க வீடும், உடுக்க உடையும், உண்ண உணவும் ஏற்பாடு செய்து கொள்ளத் தெரியாமல் மிருகம் போல அலைந்து திரிந்தபோது கொள்ளத் தெரியாமல் மிருகம் அவன் அறிந்திருந்தது ஓசை  ஒன்றே. மொழிக்கு உருவம் காணும் முன்பே அன்றைய மனிதன் பெய்கிற மழையில், இடிக்கிற வானத்தில், மரங்களின் அசைவில், பறவைகளின் ஒலியில் மிருகங்களின் குரலில் எழுந்த ஓசையைக் கண்டான். பின்னர் நாகரிக வளர்ச்சியடைந்த பிறகு மனிதன் தன்னுடைய அறிவினாலும் சிந்தனையினாலும் இசையாக உருவகப்படுத்தினான்.

இசை, தமிழர் தம் வாழ்வில் தொடக்கம் முதல் இறுதி வரை இணைந்திருக்கிறது. தொட்டிலில் தாலாட்டாய் மலர்ந்து முடிவில் ஒப்பாரியாய் முடிகிறது. தமிழர்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்திருக்கும் இசையின்  பெருமையும் சிறப்பும் அளவிடக்கரியதாய் விளங்குகிறது. தமிழர்களின் முதல் நூலான தொல்காப்பியத்தில் இசையைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இசைக்கலை வளர்ச்சி பெற்றிருந்தது என்பதை,                                                                                                                                                                                                       "அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்                                    உளவென மொழிப இசையொடு சிவணிய" (தொல். எழுத்து. 33)

என்னும் நூற்பாவின் வாயிலாக அறியலாம். இசையும் பாடலும் தெய்வீகத் தன்மை வாய்ந்தவையாகக் கருதப்பட்டன. சமணர்கள் கருதியதைப் போல இழிந்த உணர்வுகளுக்கு இடம் தராத வகையில், அவற்றை மடைமாற்றம் செய்தனர். பக்தியுணர்வின் பாற்படுத்தி அவற்றை தெய்வீக மணம் கமழும் கவின் கலைகளாகப் புத்துருவம் செய்த பெருமை பக்தி இயக்ககால அருளாளர்களையேச் சாரும். இவற்றால் மனிதனுடைய அன்றாட வாழ்க்கையில் தெய்வீகவுணர்வு கலந்த கலையாக இசை பயன்படுத்தப்பட்டது. இத்தகைய தமிழர் தனித்துவமான இசைநுட்பச் செய்திகளைத் தந்துதவும் சேக்கிழாரின் பெரியபுராணம் என்னும் இசைச்சுரங்கத்தில் பண்கள் குறித்த செய்திகள்  இங்கு ஆராயப்படுகிறது.


இசைக்கலை          
                                                பண்டைத்தமிழர்கள் அனைத்துயிர்களையும் வயப்படுத்தும் பொருளில் இசைஎன்று பெயரிட்டனர். இசை ஒலி நயத்தால் இயங்குவதால் இதனை ஒலிக்கலை என்றும் கூறுவர். இதற்குக் காட்சி அளவில் நீளம், அகலம், கனம் என்னும் அளவுகள் இல்லை. எனினும், ஒலி அமைப்பில் இவை உண்டெனலாம். இசைக் கலையானது ஓவியம், சிற்பம் ஆகிய இரு கலைகளை விட மிக நுட்பமுடையதாகும். இக்கலை செவியால் உணர்ந்து இன்புறத்தக்கதாகும். இசை எனும் சொல் இசைவிக்கும் தன்மையைச் சுட்டும். இசைவிப்பது இசை என்று பொதுப்படையாகக் கூறுவர். ஆனால், """"இசை என்பது இனியஎன்னும் வேர்ச்சொல்லிருந்து தோன்றியது. ஓர் ஒற்றுமை, ஒழுங்கு, புணர்தல் போன்ற கருத்தைக் காட்டும் சொல். இயைதல், இசைப்பு, இசை என்று கணிக்காலாம். மனம், மொழி, மெய் இம்மூன்றும் தன் வயப்பட்டு இசைந்து நிற்பது இசையாலே. தாளம், பண், பாடல், சொல், பாடற்பொருள், பாடுவோன் குரல் முதலியன ஒன்றோடொன்று இசைந்த நிலையே இசையெனலாம்"" (கலைக்கொள்கை, – 48) என்று டாக்டர் சு.சீதா கூறுகின்றார்.இசை என்னும் சொல்லானது பல இடங்களில் ஓசை என்னும் பொருளில் காணப்படுகிறது.                    
"துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்       இசைபொருட்கிளவி என்மனார் புலவர்"(தொல்.சொல்.உரி. 60)
என்ற நூற்பாவில் இசை என்றது ஓசை’, ‘இசைபொருட்கிளவிஎன்றது ஓசைப்பொருளை உணர்த்தும் சொல் எனப்படுகிறது என்று வீ.ப.கா.சு. கூறுகிறார்.

ஏழிசை   
                                                                  பண்டைத் தமிழர்கள் ஒலியை ஏழாகப் பகுத்து முறைப்படுத்தி, அவற்றை ஏழிசையென அழைத்து அவற்றினின்று பண்களை உருவாக்கியிருக்கின்றனர். சங்ககாலத்திலேயே ஏழிசையைப் பற்றி அறிந்திருந்தனர் என்பதை,                                                                                                                                                                                                                                                    "வடிவம் பலநின்றானும் அன்றொருகால்                                 ஏழிசை நூற்சங்கம் இருந்தானும்" (வி.த.அ. ப-139)
என்ற அடிகள்   உறுதி   செய்கின்றன. இசைக்கலையை ஆராய்ந்த தமிழர்  ஏழாகப்  பிரித்து ஏழுபெயர்களைச் சூட்டினார்கள். அவர்கள் சூட்டிய ஏழு இசைப்பெயர்கள் இளி, விளரி, தாரம், குரல், தத்தம், கைக்கிளை, உழை என்பன. அப்பழைய பெயர்களை மாற்றி இப்போது சட்ஜம், ரிடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் என்று புதுப்பெயர்கள் கூறினார்கள். இவற்றின் எழுத்துகள் சரிகமபதநி என்பவை என்று ஏழிசை குறித்து மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகின்றார். பண்டைத் தமிழர் குறித்த ஏழிசைகளின் பெயர்களை,                                                                                                 
"குடம் முதல் இடம் முறையாகக் குரல் துத்தம்                 
கைக்கிளை உழை இளி விளரி தாரம் என                     
                          விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே"(சிலம்பு. 13-8-10)
என்றசெய்யுளடிகளின்வாயிலாக அறியலாம். மேலும்,    
  "சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும் பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை"(வி.த.அ. ப-146)
என்ற திவாகர நூற்பாவில் கூறப்பட்டுள்ள சரிகமபதநி எனும் ஏழு எழுத்தே இசைச்சுரங்களாகும். இந்த ஏழு சுரங்களே உலக இசைக்கு ஆதாரமாக அமைந்திருக்கின்றன என்று மாத்தளை சோமு கூறுகின்றார். தமிழில் நீண்டு ஒலிக்கும் நெடில் உயிரெழுத்தாகிய ஆ, , , , , , ஔ ஆகியவற்றை ஏழிசைகளுக்கும் குறியீடுகளாக முதன்முதலில் அமைத்தனர். இதனை,                                                                                                                                                                                            "ஆஈ ஊ ஏ ஐ ஓ ஔ வெனும்                                                      இவ்வே ழெழுத்து ஏழிசைக்குரிய" (பழந்தமிழ் இசை - 82)
என்ற அடியார்க்கு நல்லார் உரை மேற்கோளின் வாயிலாக அறியலாம்.

பண்கள்  
     பண்டைத் தமிழர் இசைக்குப் பண்ணிசை என்று பெயரிட்டனர். அதாவது பண்பட்ட சமூக அமைப்பிலிருந்து வெளிவந்த இசை மரபு என்று பொருள்படும். பண் என்ற சொல் பண்ணுதல், இயற்றுதல் என்ற செயலின் அடியாகத் தோன்றிய பெயர்ச்சொல்லாகும்.                                                            "தாயாகும் தழுவு பண்ணியல்                                                      தந்தையாகும் தாள அளவியல்"(பஞ்சமரபு, ப-11)
என்று பண்ணின் சிறப்பினை வீ.ப.கா. சுந்தரனார் புலப்படுத்துகின்றார். இம்மரபு பண்டைக்காலந் தொட்டே வளர்ந்திருந்தது என்பதற்கு இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. இதனை,                                                                                                                                                                         "பண்ணென்னாம் பாடற்கியை பின்றேல் கண்ணென்னாம்                      கண்ணோட்ட மில்லாத கண்"(குறள் – 573)
என்ற குறளில் பண்ணின் சிறப்பினை வள்ளுவர் கூறுகின்றார்.

பெரியபுராணம் குறிப்பிடும் பண் வகைகள்

இந்தளம் எனும் பண்
                                                      "இந்தளம்என்பது மிகத் தொன்மையானதாகும். இது கி.பி. 5 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே தமிழகத்தில் தோன்றி கடவுள் வழிபாட்டிற்குப் பயன்பட்ட தொன்மையான பண்ணாகும். இந்தப் பண்ணிற்குரிய ஆரோகணத்தையும், அவரோகணத்தையும் 12 ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் பெரியபுராணத்தில் இந்தளப்பண்ணின் இலக்கணத்தை உரைத்துரைத்துள்ளார். இசை இலக்கியப் பரப்பிலும் தமிழ் இலக்கணப்பரப்பிலும் சேக்கிழார் ஒருவரே இந்தளப் பண்ணில் நரம்பமைவு கூறியுள்ளார். வேறு எவரும் கூறவில்லை" என்று பெரியபுராண ஆராய்ச்சி வல்லுநரான முனைவர் மா.இராசமாணிக்கனார் கூறியுள்ளார். தடுத்தாட்கொண்ட புராணத்தில் பித்தா பிறை சூடிஎனத் தொடங்கும் பதிகத்தை இந்தளம் என்னும் பண்ணில் அமைத்து மேல், கீழ், உச்சம் என்னும் தாள வகைகள் இனிது பொருந்திய இசையில் பாடினார். இதனை,                                                                                                                                                                                                     "முறையால்வரு மதுரத்துடன் மொழிஇந்தளம் முதலில்                    குறையா நிலை மும்மைப்படி கூடும் கிழ மையினால்" (பெரியபுராணம் - 221)
என்ற பாடலடிகளின் மூலம் அறியலாம்.

குறிஞ்சிப்பண் 
                                                            திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணத்தில் புல்லாங்குழலின் ஓசையைப் பெருக்கும் வண்டுகள் குறிஞ்சி நிலத்தில் குறிஞ்சிப்பண்ணை இசைத்தன என்ற செய்தியும் கூறப்பட்டுள்ளது. இங்கு குறிஞ்சிப்பண் என்பது குறிஞ்சி நிலத்தில் இசைக்கப்படுவதாகும். ஏழிசைகளைக் கொண்ட குறிஞ்சிப்பண் அரும்பாலையில் பிறந்தது. இதன் வேறுபெயர்கள் யாழ்க்குறிஞ்சி, யாமயாழ் என்றும் இதன் அகம் குறிஞ்சி என்றும் சேறை அறிவனார் குறிப்பிடுகின்றார்.

மருதப்பண்
                                                                       மருத நிலத்தில் இசைக்கப்படும் பண் மருதப்பண் எனப்படும். பஞ்சமரபு உரையின்படி இது கொடிப்பாலையில் பிறந்தது என்றும் மருதயாழ், கொடிப்பாலை, கோடிப்பாலை என்ற பரியாயப் பெயர்களைக் கொண்டது என்றும் அறியலாம். மருதப்பண்ணைப் பற்றி குங்குலியக் கலியநாயனார் புராணத்தில் உழவர் குலப்பெண்கள் குழுமி ஆடுகின்ற பண்ணைகள் தோறும் மருதப் பண்ணிசைத்து ஆடுவர் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது என்பதை,""""இடம்படு பண்ணை தோறும் எழுவன மருதம் பாடல்"" (பெரியபுராணம் - 838) என்ற அடிகள் உணர்த்துகின்றன.

ஆதிதாளம்          
                                                            ஒரு மாத்திரையளவு கொண்ட ஓச்சா என்ற ஆதிதாளம் 108  தாளங்களில் ஒன்றாகக் கூறப்படுவதாகும். இக்காலத்திய ஆதிதாளம் சதுரச்ரதிரிபுடையதாகும். துதியகம் எனும் தாளம் இரண்டு மாத்திரையுடையது. 1002 மாத்திரை -8 எண்கள் கொண்டது. இதுவே தற்போது கூறப்படும் ஆதிதாளமாகும். ஆதிதாளம் பற்றி திருஞானசம்பந்தர் ஏகாம்பரநாதரைப் பணிந்து மறையான்என்று உலகு உய்யும் திருப்பதிகத்தை என்பும்  உருகும் அன்பினால் இசைபெருகவும் ஆதிதாளம் நிரம்பிய வகையில் பாடினார் என்ற செய்தி கூறப்பட்டுள்ளதை,""""நிலவும் இசை முதல் தாளம் நிரம்பிய நீர் மையில் நிகழ""(பெரியபுராணம் - 2898) எனும் பாடலடிகள் விளக்குகின்றன.

முல்லைப்பண்       
                                         
                  முல்லை நிலத்தில் இசைக்கப்படும் பண் முல்லைப்பண் எனப்படும்.  "உலகத்திலேயே மக்கள் பண்பாட்டின் குழவிப் பருவத்திலும் கலைப்பண்பாட்டின் குழவிப் பருவித்திலும் இயற்கையாகத் தோன்றிய எளிய இசைமுறையே முல்லை இசை என்று அறிஞர்கள் கூறுவர். புரூனோ நெட்டல் என்பவரின் ஆய்வும் இந்த முடிவையே உறுதி செய்கின்றது. இதுவே ஏற்றற்குரியது, போற்றற்குரியது" (பண்டைய பண், இன்றைய ராகம், ப-143) என்று பி.டி. செல்லதுரை முல்லைப்பண்ணைப் பற்றி குறிப்பிடுகின்றார். முல்லைப் பண்ணைப்பற்றி, ஆனாய நாயனார் புராணத்தில் கார்காலம் வருதலை உரைக்கும் பொழுது நீலவண்ண மயில்கள் அகவ வரிசையாய் விளங்கும் கொடிகள் சூழ்ந்த வண்டுகள் முல்லைப்பண்ணைப் பாடின என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. இதனை, """"ஆடுமயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்குஅணுக"" (பெரியபுராணம் - 961) என்ற பாடலடிகளின் வாயிலாக அறியலாம்.

செந்துருத்திப் பண்
                                                            செந்துருத்திப்பண் என்பது ஐந்து நரம்புகளையுடையது. "மத்திமத்திற்குக் கீழே இறங்கு நிரலில் எந்த வகை இடைவெளிகளில் சுரக்கோவைகள் துருத்திக் கொண்டு (முன்னரே தள்ளிக் கொண்டு) உள்ளனவோ அந்த வகை இடைவெளிகளிலேயே பஞ்சமத்திற்கு மேலே ஏறுநிரலில் துருத்திக்கொண்டு உள்ளன. இவ்வாறு செம்மையாக ஏறுநிரலில் முன்னர் பின்னர்ப் பாகங்களில் துருத்திக்கொண்டு உள்ளமையால் இத்திறப்பண் செந்துருத்தி எனப்பெயர் பெற்றுள்ளது" என்று வீ.ப.கா. சுந்தரனார் கூறியுள்ளார். அடியார்க்கு நல்லார் வேனிற்காதை 35 ஆம் வரியை விளக்கும் போது செந்துருத்தி எனும் பண் செம்பாலையிலிருந்து பிறக்கிறது என்று கூறியுள்ளார்.திருஇடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் பணிந்த திருஞானசம்பந்தர் திருவருள் பெற்ற தொண்டருடன் புறப்பட்டு திருக்கழுக்குன்றத்தை அடையும் போது வண்டுகள் செந்துருத்திப் பண்ணைப் பாடின என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. இதனை,      "சிறந்த திருத் தொண்டருடன் எழுந்தருளிச் செந்துருத்தி" (பெரியபுராணம் - 3032) என்கிறது.

நட்டபாடை     
                                                            நட்டபாடை என்பது நைவளம் ஆகும். நைவளம் என்னும் சொல்லுக்கு இளகிய வளப்பமான பண் என்று பொருள். ஒலி அளவுகளினால் சீர்களினால் மிகுதியாக நட்டப்பெற்ற பண் நட்டபாடையாகும்."கோயில்களில் சுவாமி புறப்படுகையில் நட்டபாடையாக கெம்பீர நட்டையை நாகசுரங்களில் இசைத்து இசைச் சுரப்பொருத்தங்களை எல்லாம் கோத்துக் கோத்துப் புனைந்து நைவளம் பொருந்தியதாய் இறைவனுக்குப் படைப்பார்கள்"என்று நட்டபாடைப்பண்ணைப் பற்றி மீ.ப. சோமசுந்தரனார் கூறியுள்ளார். காரைக்காலம்மையார் திருவாலங்காட்டை அடைந்து கொங்கை திரங்கிஎனத் தொடங்கி நட்டபாடை என்னும் மூத்தத்திருப்பதிகம் பாடியுள்ளார். இதனை,                                          
"மூலம்காண் புஅரியார் தம்மை மூத்தநல் பதிகம் பாடி           
ஞாலம்கா தலித்துப் போற்றும் நடம் போற்றி நண்ணும்        நாளில்"(பெரியபுராணம் - 1784)
என்ற பாடல் உணர்த்துகிறது.


காஞ்சிப்பண்
                                                           திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்தில் கரிகாற்சோழனின் காஞ்சிமாநகரின் மதிலும் அகழியும் பற்றி குறிப்பிடும் பொழுது மருதநிலத்தில் உள்ள காஞ்சிமரத்தின் பூக்களுக்கு அருகில் உள்ள வண்டுகள் காஞ்சிப்பண்ணை இசைத்தன என்று கூறுகிறார். இங்கு காஞ்சி எனும் சொல் பல பொருள்களில் வந்துள்ளதை,                                                                   
"தண்காஞ்சி மென்சினைப்பூங் கொம்பர் ஆடல்                  
சார்ந்தசைய அதன் மருங்கு கரும்பு தாழ்ந்து                    
பண்காஞ்சி இசைபாடும் பழன வேலி" (பெரியபுராணம் - 1168)
என்ற பாடலின் வாயிலாக அறியலாம்.

பஞ்சுரப்பண்                                                                பஞ்சுரப்பண் சங்கராபரணம் எனப்படும். சங்கராபரணமே அரும்பாலையாகும். பன்சுரம் என்பது பஞ்சுரம் என்றாயிற்று. பன்னுதல் பின்னுதல் இப்பண் இசை நரம்புகளால் பின்னப்பெற்றது. சுரநிலம் என்று கூறப்படும் கூறப்படும் சுடுசுரநிலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டப்பட்டது. பின்னுதல் என்ற அடைமொழியால் பஞ்சுரம் என்பது சுடுசுரத்திலிருந்து வேறுபட்டது என்று வீ.ப.கா.சுந்தரனார் கூறுகின்றார். பஞ்சுரப்பண்ணைப் பற்றி, திருஞானசம்பந்தர் உலகம் உய்யும் பொருட்டு துஞ்ச வருவார்எனத் தொடங்கும் திருக்கடைக்காப்பில் பஞ்சுரம் என்னும் தொன்மையான பண்ணிசை பொருந்துமாறு பாடினார் என்ற செய்தி கூறப்பட்டுள்ளதை,"பஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொள்ளப் பாடினார் பாரெல்லாம் உள்ள வந்தார்" (பெரியபுராணம் - 2913) என்னும் பாடல் அடி உணர்த்துகின்றன.

தொகுப்புரை
இசை என்பது அனைத்துயிர்களையும் வயப்படுத்தும் வகையில் பெயரிட்டது என்றும் ஓவியம், சிற்பம் ஆகிய இரு கலைகளைவிட இசைக்கலையே மிக நுட்பமுடையதாகும் என்ற செய்திகளையும் ஏழிசைகளையும், பண்களையும் பற்றி அறியமுடிகிறது.சேக்கிழார் குறிப்பிடும் பண்வகைகளையும், அவற்றைப் பற்றிய பிற அறிஞர்களின் கருத்துகளையும் அறியமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.ஆறுமுகம்.ப., (ப.ஆ)   சிலப்பதிகாரம்,    பூம்புகார் பதிப்பகம்,சென்னை – 600 108,1996.     
  2.இளம்பூரணார்., (உ.ஆ) தொல்காப்பியம்,   சாரதா பதிப்பகம்,சென்னை – 600 014, 2007.                           3.இராமசுப்பிரமணியம்.வ.த  , (உ.ஆ)     பெரியபுராணம் மூலமும் உரையும்,   .                                                                  திருமகள் நிலையம்,தி. நகர், சென்னை – 17,2008.          
 4.கௌமாரீஸ்வரி., (ப.ஆ)  திருக்குறள்,   சாரதா பதிப்பகம்,சென்னை – 600 014,2009.                                     5.சுந்தரனார்.வீ.ப.கா.,  தொல்காப்பியத்தில் இசைக்குறிப்புகள்,                                                                            உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,     சென்னை 600 113, 1994
6.மாத்தளை சோமு   வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,                                                                                                          உலகத் தமிழாய்வுக் கழகம்,உறையூர்,       திருச்சி – 620 003.


0 comments:

Powered by Blogger.

  © Free Blogger Templates Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP